Published:Updated:

“ஆதாரம் கேட்டாங்க... அடிச்சாங்க...” - கண்ணீர்ப் பெண்கள்... கதறவைத்த காக்கிகள்

கண்ணீர்ப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணீர்ப் பெண்கள்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்களில் பலரும், சமூக அவமானத்துக்கு பயந்து, முடங்கிப்போய்விடுவதுதான் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

“ஆதாரம் கேட்டாங்க... அடிச்சாங்க...” - கண்ணீர்ப் பெண்கள்... கதறவைத்த காக்கிகள்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்களில் பலரும், சமூக அவமானத்துக்கு பயந்து, முடங்கிப்போய்விடுவதுதான் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

Published:Updated:
கண்ணீர்ப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணீர்ப் பெண்கள்
`‘ஆன்மிக பூமி’ என்றழைக்கப்படும் இந்தியா, தற்போது ‘பாலியல் வன்கொடுமை பூமி’ என்று அழைக்கப்படும் நிலைக்குத் தரம் தாழ்ந்துவிட்டது’ என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள். தமிழ்நாடு தொடங்கி இந்தியா முழுமைக்குமாகத் தலைவிரித்தாடும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அவர்களை அப்படிப் பேசவைத்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உத்தரப்பிரதேசத்தில் ஒரு தலித் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வெளியில் அதைச் சொல்லிவிடக் கூடாது எனச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறாள். உரிய இறுதிச்சடங்குகள் மறுக்கப்பட்டு, நள்ளிரவில் அந்தப் பெண்ணின் உடல் போலீஸாரால் அவசர அவசரமாக எரிக்கப்பட்டிருக்கிறது. எரிக்கப்பட்டது அவளின் உடல் மட்டுமல்ல... ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதியும்தான்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்களில் பலரும், சமூக அவமானத்துக்கு பயந்து, முடங்கிப்போய்விடுவதுதான் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. அச்சத்தை, அவமானத்தைத் தாண்டி, ஒரு சில பெண்கள் தைரியமாகப் புகாரளிக்க முன்வந்தால் சாட்சியம், விசாரணை, வழக்கு என அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், அவர்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைவிட மோசமானவையாக இருக்கின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதற்குச் சமீபத்திய சாட்சிகள்... இரண்டு பெண்கள்!

தற்காப்பு தவறா?

பணிக்குச் சென்ற இடத்தில் பாலியல் டார்ச்சர் கொடுத்த மேலாளர்மீது மிளகாய்த்தூள் தூவி, கட்டிப்போட்டு, காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள் இரு பெண்கள். ஆனால், அந்தப் பெண்களையே குற்றவாளிகளாக்கி, சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸார். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்த அந்தப் பெண்கள் இருவரும், பக்கபலமாக யாரும் இல்லாமல் கலங்கிய கண்களுடன், ‘யார் மூலமாவது தங்களுக்கு நீதி கிடைத்துவிடாதா?’ என்ற பரிதவிப்புடன் நின்றிருந்த காட்சியைக் கண்டு மனம் பதறியது.

அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் கேட்ட கேள்வி முக்கியமானது... “பிரச்னை வந்தா பயப்படக் கூடாது. பெண்கள் தங்களைத் தற்காத்துக்கணும்னு அரசாங்கம் சொல்றதெல்லாம் சும்மாவா சார்?’’ அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினோம். “நான் சின்னப்புள்ளையா இருந்தபோதே அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாட்டால பிரிஞ்சுட்டாங்க. பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. வறுமையான சூல்நிலையில காலேஜ் வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. பெருந்துறையில இருக்குற ஒரு கார்மென்ட்ஸுல, கம்ப்யூட்டர் செக்‌ஷன்ல வேலைக்குச் சேர்ந்தேன். என் பக்கத்து வீட்டுப் பொண்ணு, என் ஃப்ரெண்டு... என்னை மாதிரியே வறுமையான சூழல்ல வளர்ந்தவ. அவளும் அதே கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்ந்தா. ரெண்டு பேரும் ஒரு ஹாஸ்டல்ல தங்கியிருந்தோம். எங்க கம்பெனியில பெண்கள்தான் அதிகம். ‘மேனேஜர் சிவக்குமார் லேடீஸ்கிட்ட ரொம்ப மிஸ் பிஹேவ் பண்ணுவார். எதிர்த்துக் கேள்வி கேட்டா வேலை போயிடும்... பார்த்து நடந்துக்கோங்க’னு சீனியர்ஸ் சொன்னாங்க.

“ஆதாரம் கேட்டாங்க... அடிச்சாங்க...” - கண்ணீர்ப் பெண்கள்... கதறவைத்த காக்கிகள்

ஓயாத போன் டார்ச்சர்!

அவங்க சொன்ன மாதிரியே, கொஞ்ச நாள்ல என்கிட்ட வந்து அந்த சிவக்குமார் வழிஞ்சார். போன்ல அடிக்கடி கூப்பிட்டு ஆபாசமாப் பேச ஆரம்பிச்சார். என்னோட அப்பா வயசிருக்கும் அவருக்கு. ஆனாலும், `வயித்துப் பிழைப்பு போயிடுமே... என்ன பண்றது...’னு எதிர்க்க முடியாம ஒதுங்கி ஒதுங்கிப் போனேன். ஒருநாள் எனக்கு போன் பண்ணி, ‘உன் போட்டோல்லாம் என்கிட்ட இருக்கு. நான் கூப்பிடுற இடத்துக்கு நீ வரலைனா, உன் போட்டோக்களை மார்ஃபிங் பண்ணி நெட்ல போட்டுடுவேன்’னு மிரட்டினார். இந்த விஷயத்தை யார்கிட்டயும் என்னால சொல்ல முடியலை. உதவவும் ஆளில்லை. அதனால அந்த கம்பெனி வேலையை விட்டுட்டு வெளியே வந்துட்டேன். என் ஃபிரெண்ட்கூட ஹாஸ்டல்ல இருந்துக்கிட்டே வேற வேலை தேட ஆரம்பிச்சேன். ஒரு கார்மென்ட்ஸ்ல வேலை கிடைச்சுது. என் ஃபிரெண்டும் என்கூட அதே கம்பெனிக்கு வேலைக்கு வந்துட்டா. இனிமே நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த சிவக்குமாரோட போன் டார்ச்சர் ஓயலை.

பெரிய மனஉளைச்சலா இருந்துச்சு... வேலையில கவனம் செலுத்த முடியலை... தூங்கக்கூட முடியலை. ஒருநாள் நான் பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் சிவக்குமார் மேல புகார் கொடுத்தேன். ஆனா, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோமதி, ‘ஆதாரம் இருக்கா?’னு கேட்டாங்க. ‘போய் ஆதாரம் கொண்டு வா... பார்க்கலாம்’னு சொல்லி என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்க. ரொம்ப ஏமாற்றமாப் போச்சு. `போலீஸ் ஸ்டேஷன்லயே இப்படி சப்போர்ட் பண்ணலைன்னா, நாம வேற எங்க போறது’னு கலங்கிப்போயிட்டேன். அதேநேரத்துல அந்த சிவகுமாரோட டார்ச்சரும் தொடர்ந்துச்சு. இனி யாரையும் நம்பி பிரயோஜன மில்லை... நாமே பிரச்னையை எதிர்கொள்ளலாம்னு நானும் என் ஃப்ரெண்டும் முடிவு பண்ணினோம்.

பெப்பர் ஸ்பிரே... மிளகாய்த்தூள்!

செப்டம்பர் 14-ம் தேதி, சிவக்குமார் போன் பண்ணி, `அருள்புரத்துல இருக்குற ஒரு காட்டுப்பகுதிக்கு வா’னு கூப்பிட்டான். வழக்கமா பேசுற மாதிரி கோபமாப் பேசாம, `சரி வர்றேன்’னு சொல்லிட்டேன். பாதுகாப்புக்காக வாங்கி வெச்சிருந்த பெப்பர் ஸ்பிரே, மிளகாய்த்தூள், கயிறு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அவன் சொன்ன இடத்துக்கு நானும் என் ஃபிரெண்டும் போனோம். நைட் 8 மணி இருக்கும்... சிவகுமார் முன்னாடியே அங்கே வந்து காத்திருந்தான். ‘ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க... ப்ளீஸ் எங்க நிம்மதியைக் கெடுக்காதீங்க’னு கெஞ்சினோம். ஆனா, அவன் அசிங்கமாப் பேசுறதுலயும் எங்ககிட்ட தப்பா நடந்துக்குறதுலயும் மட்டுமே குறியா இருந்தான். இனி இவன்கிட்ட பேசி பிரயோஜனமில்லைனு தெரிஞ்சதும், பெப்பர் ஸ்பிரேயை எடுத்து அவன் மூஞ்சியில அடிச்சு, மிளகாப்பொடியைத் தூவினதும் அவன் கீழே விழுந்துட்டான். உடனே அவனைக் கட்டிப்போட்டோம். அதை ஆதாரமா வீடியோ எடுத்துவெச்சுக்கிட்டு போலீஸுக்கு போன் பண்ணினோம். உடனே அங்கே வந்த போலீஸ், அவனை ஜீப்புல ஏத்திக்கிட்டு, எங்களை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிட்டுப் போயிட்டாங்க.

நாங்க ஸ்டேஷனுக்குப் போனோம். அப்போ, ஒரு பெரிய அதிகாரி அங்கே இருந்தார். அவர், ‘பரவாயில்லை... துணிச்சலா பண்ணியிருக்கீங்க. இப்படித்தான் இருக்கணும். புகார் எழுதிக் கொடுத்துட்டு போங்க, நடவடிக்கை எடுப்பாங்க’னு சொல்லிட்டுப் போயிட்டார். பிறகு, இன்ஸ்பெக்டர் கோமதியும் எஸ்.ஐ-யும் வந்தாங்க. நடந்த விஷயங்களை ஒவ்வொண்ணா கேட்டுக்கிட்டே வந்தவங்க... எங்க குடும்பப் பின்னணி, சூழ்நிலை, சாதி, என் ஃபிரெண்டோட மதம் பத்தியும் கேட்டாங்க. அதுக்கப்புறம் இன்ஸ்பெக்டர் கோமதியோட விசாரணை ஸ்டைலே மாறிடுச்சு. ‘மாஸ்கை எடுத்துட்டு உங்க மூஞ்சியைக் காட்டுங்கடி... உங்களைப் பார்த்தாலே ஊதாரிங்க மாதிரிதான் தெரியுது. பெத்தவங்க இல்லேல்ல... இப்பிடித்தான் இருப்பீங்க’னு எங்களை ரொம்பக் கேவலமாப் பேசினாங்க. நடந்ததை எழுதிக் கொடுக்கச் சொன்னாங்க. எழுதிக்கொடுத்தோம். வாங்கி வெச்சுக்கிட்டு ‘நாளைக்கு வாங்க’னு சொன்னாங்க. லேடி இன்ஸ்பெக்டர்... எப்படியும் எங்களைப் புரிஞ்சுக்கிட்டு அவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பாங்கனு நினைச்சோம்.

வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து!

மறுநாள் ஸ்டேஷன்லருந்து போன் வந்துச்சு. நாங்க போனோம். அப்போ, ஒரு வெள்ளைப் பேப்பர்ல அவங்களா ஏதோ எழுதிவெச்சிருந்தாங்க. அதுல எங்களைக் கையெழுத்துப் போடச் சொல்லி வற்புறுத்தினாங்க. என்ன எழுதியிருக்குனு தெரியாம நாங்க கையெழுத்து போட மாட்டோம்னு சொன்னதும், அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு என்ன நடக்குது... ஏன் இப்பிடி நடந்துக்கிறாங்கனு ஒண்ணுமே புரியலை. அடி தாங்க முடியாம பயந்து கையெழுத்துப் போட்டோம். கூட ரெண்டு மூணு வெள்ளைப் பேப்பர்லயும் கையெழுத்து வாங்கினாங்க. என் மொபைல்போனையும் பிடுங்கிக்கிட்டாங்க. அதுலதான் ஆடியோ, வீடியோனு எல்லா ஆதாரங்களும் இருந்துச்சு.

கொஞ்ச நேரம் கழிச்சு, ‘மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்குப் போறோம். அங்க கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லணும். ‘அடிச்சாங்களா?’னு கேட்டா, ‘இல்லை’னு சொல்லணும். ‘மிளகாய்ப்பொடி போட்டியா’னு கேட்டா... ‘ஆமாம்’னு சொல்லணும்னு சொன்னாங்க. மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. வெளியேவெச்சு போலீஸ் எங்களை மிரட்டியிருந்ததால, போலீஸ் சொன்ன மாதிரி சொன்னோம். சட்டுனு மாஜிஸ்ட்ரேட் எங்களை ஜெயிலுக்கு அனுப்புறதா சொல்லிட்டார். `திக்’குனு ஆகிப்போச்சு.

“ஆதாரம் கேட்டாங்க... அடிச்சாங்க...” - கண்ணீர்ப் பெண்கள்... கதறவைத்த காக்கிகள்

ஜெயில்... கொரோனா... பெயில்!

அங்கிருந்து எங்களை கோயமுத்தூர் ஜெயிலுக்குக் கூட்டிட்டுப் போயி உள்ளே போட்டுட்டாங்க. ஒண்ணும் புரியாம அழுது தீர்த்தோம். எந்தத் தப்பும் செய்யாத எங்க மேல என்ன கேஸ் போட்டாங்கனுகூட எங்களுக்குத் தெரியாது. ஜெயில்ல என் ஃப்ரெண்டுக்கு கொரோனா வந்துடுச்சு. அதனால அவளை ஜாமீன்ல அனுப்பிட்டாங்க. நானும் அவகூட இருந்ததால, என்னை கண்டிஷன் பெயில்ல விட்டுட்டாங்க. திருப்பூர்ல இருந்தா பாதுகாப்பு இல்லைனு மதுரைக்கு வந்துட்டோம்.

ஒருத்தன் செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறான், தாங்க முடியலைனு போலீஸ்ல புகார் கொடுத்தா...ஆக்‌ஷன் எடுக்கலை, ஆதாரம் கேட்டாங்க. சரி ஆதாரத்தோட நின்னா... போலீஸ் எங்க மேலயே பொய் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. இது எந்தவகையில நியாயம்... இப்போ எங்க வாழ்க்கையே சூனியமாகிப்போச்சு” என்று அழுதார் பாதிக்கப்பட்ட பெண். இன்னும் விரிவாக அவர் விவரித்த விஷயங்கள் அதிர்ச்சி ரகம்.

தற்போது இந்தப் பெண்களுக்கு மதுரை ‘சோக்கோ அறக்கட்டளை’ நிர்வாகி, வழக்கறிஞர் செல்வகோமதி சட்டரீதியாக உதவிவருகிறார்.

குற்றம்சாட்டப்படும் சிவக்குமாரிடம் பேசினோம். “முழுக்க ஜோடிக்கப்பட்டதுங்க. எதுக்காக இப்படிப் பண்றாங்கனு எனக்குப் புரியலை. நான் பேசின ஆடியோவை மட்டும் வெளியிட்டிருக்காங்க. அவங்க பேசுனது எதையும் வெளியிடலை. என் கம்பெனியில போய் என்னைப் பத்தி விசாரிச்சுக்குங்க. என் மேல இதுவரைக்கும் ஒரு புகார்கூட கிடையாது” என்றார்.

‘‘பேச நேரமில்லை!’’

இன்ஸ்பெக்டர் கோமதி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கேட்பதற்காக, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றோம். ஆனால், ஸ்டேஷனுக்குள் இருந்த இன்ஸ்பெக்டர் கோமதி, மூன்றரை மணி நேரம் காத்திருந்தும் நம்மைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். இரவு 8:30 மணியளவில் ஸ்டேஷனிலிருந்து வெளிவந்தவர், “ஒரு ரிமாண்டுக்காக மாஜிஸ்ட்ரேட்டைப் பார்த்துட்டு ஜெயிலுக்குப் போகணும். இப்போதைக்குப் பேச நேரமில்லீங்க” எனச் சொல்லிவிட்டு காரில் ஏறிக் கிளம்பிவிட்டார். மறுநாள் காலை அவரை செல்போனில் தொடர்புகொண்டபோது, “விசாரணை அதிகாரி நான் கிடையாதுங்க. சம்பந்தமே இல்லாம என்கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க... செந்தில் பிரபுங்கிற எஸ்.ஐ-கிட்ட எதுவா இருந்தாலும் கேட்டுக்குங்க. அவர்தான் விசாரணை அதிகாரி” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

பல்லடம் எஸ்.ஐ செந்தில் பிரபுவைத் தொடர்புகொண்டோம், “சிவக்குமார்தான் என்னை வேலையைவிட்டு நிப்பாட்ட காரணம்னு அந்தப் பொண்ணு சொல்லுது. ‘கம்பெனியில என்னைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க’னு சிவக்குமார் சொல்றாரு. ரெண்டு பேரும் மாறி மாறிப் புகார் சொல்லிக்கிட்டு அடிச்சிக்கிட்டு, சம்பந்தமே இல்லாம பல்லடத்துலவெச்சு பிரச்னை நடந்துருக்குங்க” என்றார். அந்தப் பெண் சொன்ன புகார்கள் குறித்துக் கேட்டபோது, “நேர்ல வந்து அவங்களையே கேக்கச் சொல்லுங்க, பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

பல்லடம் டி.எஸ்.பி ஸ்ரீராமச்சந்திரன், “புகார் கொடுத்து போலீஸ் நடவடிக்கை எடுக்கலைனா, மேலதிகாரியைச் சந்திச்சிருக்கலாமே... அதை விட்டுட்டு கத்தி, கயிறுனு எடுத்துக்கிட்டு பக்காவா திட்டம்போட்டு சிவக்குமாரை அட்டாக் பண்ணியிருக்காங்க. பிளான் பண்ணி பொருளைக் கொண்டு வர்றது தற்காப்பா? ‘மிளகாப்பொடி போட்டதுல என் கண்ணு போயிருக்கும்’னு அந்த ஆள் புகார் கொடுக்குறாரு. எப்படிங்க நடவடிக்கை எடுக்காம இருக்க முடியும்... அந்தப் பொண்ணுங்க கட்டிப்போட்டு பண்ணின கொடுமையை நாங்களே நேர்ல போய் பார்த்தோமே...” என்றவர், “ஸ்டேஷன்ல அதிகாரிகள் மிரட்டி, அடிச்சதா சொல்றது, வெள்ளைத்தாள்ல கையெழுத்து வாங்கினதாச் சொல்றது எல்லாம் அப்பட்டமான பொய். கண்டிஷன் பெயில்ல வந்திருக்கிற அந்தப் பொண்ணுங்க ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துக் கூட போடுறதில்லை” என்றார்.

திருப்பூர் எஸ்.பி திஷா மிட்டல், “சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் மேனேஜர் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தனித்தனியாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கு. கேஸ் சம்பந்தமான பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்வது வழக்கமானதுதான். அந்த அடிப்படையில் போனை வாங்கியிருப்பாங்க. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் போலீஸ்கிட்டதான் வரணும். சட்டத்தைக் கையிலெடுக்கிறது சரியானதில்லை. `ஒருத்தர் என்னை அடிச்சிட்டாரு’னு 10 நாள் கழிச்சு அவரைப் போய் அடிக்கிறது எப்படி தற்காப்பு ஆகும். ரெண்டு சைடுலயும் தப்பு இருக்கு. விசாரணை போய்க்கிட்டு இருக்கு. இப்போதைக்கு வேற எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

‘புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று நீதிமன்றமே வருத்தப்பட்டிருக்கும் சூழலில், “திருப்பூரில் ஏராளமான பெண்கள் ஹாஸ்டலில் தங்கி மில்களில் வேலை பார்க்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பு எப்படி உறுதிசெய்யப்படுகிறது?” என்று திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டோம். “குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர்களும், சமூகநலத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வுநடத்திவருகிறார்கள். ஒரு சிறப்புக்குழு அமைத்து தற்போது நடந்திருக்கும் சம்பவம் குறித்து ஆய்வுசெய்யச் சொல்கிறேன்” என்கிறார்.

“ஆதாரம் கேட்டாங்க... அடிச்சாங்க...” - கண்ணீர்ப் பெண்கள்... கதறவைத்த காக்கிகள்

ஆதாரம் கேட்கக் கூடாது!

இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையம் சென்று ஆய்வாளரைச் சந்தித்துப் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது ‘ஆதாரம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று திருப்பி அனுப்பியிருக்கிறது காவல்துறை. `ஒரு பெண், பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாகப் புகாரளிக்க வரும்போது, அதற்கு ஆதாரம் கேட்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருப்பது காவல்துறைக்குத் தெரியாதா... அதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதுதான் காவல்துறையின் பணி என்பதை மறந்துவிட்டார்களா... ஒருவன் எவ்வளவு டார்ச்சர் கொடுத்திருந்தால் அந்த அப்பாவிப் பெண்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்?! `ஆபத்தின்போது ஒரு பெண் எப்படியான தற்காப்பு நடவடிக்கையிலும் ஈடுபடலாம்’ எனச் சொல்கிறது நீதிமன்றம். அதிலும் ஒரு இன்ஸ்பெக்டரே இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!

எவர் ஒருவரும், உரிய இடத்தில் உரிய நீதி கிடைக்காதபோது, நீதிக்கான போராட்டத்தில் அவர்களே இறங்குகிறார்கள். பெண்கள் விஷயத்தில் காவல்துறையின் அலட்சியம் எதன் பொருட்டும் ஏற்க முடியாதது. `நாம் நாகரிகம் அடைந்துவிட்டோம்’ என்று சொல்லிக்கொள்ள முடியாத வகையில், பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான குற்றங்கள் பெருகியபடியே இருக்கின்றன.

இதோ இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்து முடிக்கும், இந்த 15-வது நிமிடத்தில், அதாவது ‘ஒவ்வொரு 15 நிமிடத்திலும் இந்தியாவில் ஒரு பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள்’ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் நீதிபதிகள். ஒரு நாளைக்கு எத்தனை 15 நிமிடங்கள் என்பதையும், ஒரு நாளைக்கு நம்மைச் சுற்றியிருக்கும் பெண்களில் எத்தனை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் என்பதையும் நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஃப்.ஐ.ஆரிலும் குழப்பம்!

சம்பவம் நடந்த அன்று, இந்தப் பெண்களேதான் 100-க்கு போன் செய்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, குற்றவாளியை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, இவர்களைக் காவல் நிலையம் வந்து புகார் அளிக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. இவர்கள், அதன் பிறகுதான் காவல் நிலையம் சென்றிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பெண்கள்மீது போடப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், குற்றத்தில் சம்பந்தப்பட்ட சிவக்குமார், அவராகவே அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்று உதவி கேட்டு, நண்பரின் வீட்டில் இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை காவல் நிலையம் வந்து புகார் அளித்தாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏன் இந்த முரண்?

இரண்டு பெண்கள் மீதும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப் பட்டார்கள். ஆனால், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சிவக்குமார் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டிருக் கிறது... என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை பலமுறை கேட்டும், இந்த இதழ் அச்சேறும் வரை போலீஸ் தரப்பு சொல்லவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism