Published:Updated:

ஆசை, அடிக்‌ஷன், அபாயம்... மிரட்டும் விபரீத விளையாட்டுகள்!

விபரீத விளையாட்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
விபரீத விளையாட்டுகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஆன்லைன் கேம் பிரச்னைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பிறகு அது அரசால் தடைசெய்யப்படுகிறது. இதனால் எந்த நன்மையும் இல்லை

ப்ளூ வேல், பப்ஜி, ரம்மி என உயிர்களைக் காவு வாங்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் பெயர்கள்தான் மாறிக்கொண்டேயிருக்கின்றன; பிரச்னைகள் ஓய்ந்தபாடில்லை. ஆன்லைன் விளையாட்டு தொடர்பாகச் சமீபத்தில் பல தற்கொலைகள் நடந்திருக்கின்றன. விளையாட்டுக்காக உயிரையே மாய்த்துக்கொள்ளும் எண்ணம் ஏன் ஏற்படுகிறது, இது போன்ற விளையாட்டு களிலுள்ள அபாயங்கள் என்னென்ன, அவற்றைத் தவிர்ப்பது எப்படி, உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டோம்...

கார்த்திகேயன்,

சைபர் க்ரைம் வழக்கறிஞர்


“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஆன்லைன் கேம் பிரச்னைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பிறகு அது அரசால் தடைசெய்யப்படுகிறது. இதனால் எந்த நன்மையும் இல்லை. காரணம் நாம் பெயர்களைத்தான் தடை செய்கிறோமே தவிர, விளையாட்டுகளை அல்ல. நாளையே அதே விளையாட்டு வேறொரு பெயரில் ப்ளே ஸ்டோரில் வந்துவிடும். எனவே, நாம் நிலையான ஒரு தீர்வைத்தான் தேட வேண்டும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது, திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு இருப்பதுபோல ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் ஓர் ஒழுங்குமுறை வாரியத்தை (Regulatory Board) அரசு அமைக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில், யார் வேண்டுமானாலும் ஒரு ஆப்-ஐ உருவாக்கி, அதை பிளே ஸ்டோரில் அப்லோடு செய்ய முடியும். அரசிடமிருந்து எந்தவித அனுமதியும் வாங்கத் தேவையில்லை. அதைத் தவிர்க்க, ஒரு ‘ஆப்’ பிளே ஸ்டோருக்கு வருவதற்கு முன்பாக, ஆணையம் அனுமதி அளித்தால் மட்டுமே அப்லோடு செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

ஆசை, அடிக்‌ஷன், அபாயம்... மிரட்டும் விபரீத விளையாட்டுகள்!

ஆன்லைன் கேம்ப்ளிங் விளை யாட்டுகள் எல்லா நாடுகளிலுமே இருக்கின்றன. ஆனால், அவற்றை ஒழுங்குபடுத்தியிருக் கிறார்கள். சீனாவை எடுத்துக் கொண்டால், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் விளையாட முடியும். பணம் கட்டி விளையாடும் ஆட்டங் களில் ஒரு நாளைக்கு இருபது டாலருக்கு மேல் கட்டி விளையாட முடியாது. அதுவும்கூட தினமும் விளையாட முடியாது. இது போன்ற ஒழுங்குமுறைகள், ‘சைபர் அடிக்‌ஷன்’ ஆகும் வாய்ப்பைக் குறைக்கும்.

பள்ளிகளைப் பொறுத்தவரை நிஜ உலகத் துக்கும், இணைய மெய்நிகர் உலகத்துக்குமான வேறுபாட்டை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். உதாரணமாக, ஜப்பானில் பள்ளிகளில் ‘சைபர் ஃபாஸ்டிங்’கைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது, வாரத்தில் இரண்டு நாள்கள் எந்த டிஜிட்டல் கேட்ஜெட்டையும் மாணவர்களைப் பயன்படுத்த விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நம் நாட்டில் மெய்நிகர் உலகத்தில்தான் பெரும்பாலானவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அதனால்தான், அவர்களைப்பற்றிச் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வந்தாலே உடனடியாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது உலகத்தின் சிறு பகுதிதான் என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். அதைக் கற்பிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.”

கார்த்திகேயன், ஷாலினி, பாலு சுவாமிநாதன்,ஆயிஷா நடராஜன்
கார்த்திகேயன், ஷாலினி, பாலு சுவாமிநாதன்,ஆயிஷா நடராஜன்

ஷாலினி, மனநல மருத்துவர்

“நாம் சாப்பிடும் உணவு எப்படிக் கடைசியில் குளூக் கோஸாக மாறுகிறதோ, அதேபோலத்தான் நாம் பார்க்கிற, பேசுகிற, நுகர்கிற அனைத்து விஷயங்களும் நம் மூளையில் ரசாயனமாகப் பதிவாகும். இந்த விளையாட்டுகளும் அப்படித்தான், ஆன்லைன் விளையாட்டுகளில் அடிக்ட் ஆனவர்களுக்கு திடீரென அது மறுக்கப்படும்போது மனச்சோர்வு, பதற்றம், சுய வெறுப்புணர்வு போன்றவை உண்டாகும். அந்த சுய வெறுப்புணர்விலிருந்துதான் தற்கொலை எண்ணங்கள் உண்டாகின்றன.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிக்ட் ஆகி, தன் இயல்பைத் தொலைத்த குழந்தை களுக்கு, இளைஞர்களுக்கு சைக்கோதெரபி போன்ற மனநலச் சிகிச்சைகள் முறையாக வழங்கப்பட வேண்டும். குழந்தைகளென்றால், அவர்களை அடிப்பது, திட்டுவது, மிரட்டுவது போன்ற விஷயங்களை அறவே தவிர்க்க வேண்டும். அன்பாகப் பேசி மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பொதுவாக, பதின் பருவத்தில்தான் அதிகமான மனநோய்கள் ஏற்படுகின்றன. அதனால், 12 வயதுக்குப் பிறகு குழந்தைகளின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும்.’’

பாலு சுவாமிநாதன்,

கூடுதல் கண்காணிப்பாளர், சைபர் க்ரைம் (ஓய்வு)


‘‘ஆன்லைன் சூதாட்ட கேம்களில் அந்தப் பக்கம் நின்று விளையாடுவது மனிதன் அல்ல, இயந்திரங்கள். `ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் தொழில்நுட்பம், ஆரம்பத்தில் மக்களின் ஆசையைத் தூண்டி விளையாடச் செய்கிறது. ஆரம்பத்தில் விளையாடும் நபருக்குப் பணமும் கிடைக்கிறது. தொடர்ந்து விளையாடும்போது தன்னிடமிருக்கும் பணத்தை லாகவமாக எதிர்முனையிலிருக்கும் இயந்திரம் எடுத்துக்கொள்கிறது. பணத்தை இழந்தவர்கள் அதே விளையாட்டிலேயே சம்பாதிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இழந்த பணத்தை மீட்பது முடியாத காரியம். பணத்தை இழந்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் செல்கின்றனர். `இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும்’ என்று ஆசையைத்‌ தூண்டும் விளம்பரங்களில் துளியும் உண்மை இல்லை. இந்தச் சூதாட்டங்கள் முழுவதுமாக அரசால் தடைசெய்யப்பட வேண்டும்.’’

ஆசை, அடிக்‌ஷன், அபாயம்... மிரட்டும் விபரீத விளையாட்டுகள்!

ஆயிஷா நடராஜன்,

எழுத்தாளர், கல்வியாளர்

“எவ்வளவு முயன்றாலும் பெரும்பாலான பெற்றோர் களால் குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவிட முடிவதில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான இந்த இடைவெளிதான் பல பிரச்னைகளுக்கும் முதன்மையான காரணம். குழந்தைகள் தம் வேலைகளுக்குத் தொந்தரவாக இல்லாமலிருந்தாலே போதும் எனப் பெற்றோர் நினைக்கிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் இணையத்தில் விதவிதமான ‘ஆப்’களை டௌன்லோடு செய்து பலவிதமான கேம்களை விளையாடுகிறார்கள். அதில் குழுவாக இணைந்து விளையாடும் பல விளையாட்டுகள் இருக்கின்றன. எதிரில் இருப்பவர்கள் என்ன வயதினர், யார் என்பதே தெரியாது. இது குழந்தைகளுக்குப் பல அபாயங்களை உருவாக்கும். இதில், பாதிப்படையப்போவது குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, வாழ்க்கையும் தான்!”