Election bannerElection banner
Published:Updated:

மதுரை: கொரோனா பணிக்குச் சென்ற மருத்துவர்மீது போலீஸ் தாக்குதல்! - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

டாக்டர் தமிழரசன்
டாக்டர் தமிழரசன்

கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காவல்துறையினர் கடுமையாக நடந்துகொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகிறார்கள்.

கொரோனா பணிக்காக அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்த டாக்டரை, சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தி காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறை சோதனை
காவல்துறை சோதனை

கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை யாரும் மறக்கவில்லை. அந்த வழக்கில் தொடர்புடைய ஒன்பது காவல்துறையினர் சிறையில் இருந்துவருகிறார்கள்.

மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கிய அந்தச் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் உயரதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

ஆனாலும், அது போன்ற பல சம்பவங்கள் மீண்டும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அதிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காவல்துறையினர் கடுமையாக நடந்துகொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகிறார்கள்.

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்

இந்தநிலையில்தான் `கொரோனா பணிக்காக டூ வீலரில் அவசரமாகச் சென்றுகொண்டிருந்த நான் காவல்துறையால் தாக்கப்பட்டேன்’ என்று அரசு ஹோமியோபதி டாக்டர் தமிழரசன் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிய டாக்டர் தமிழரசனிடம் பேசினோம். ``மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது கொரோனா பிரிவில் பணியாற்றிவருகிறேன். கடந்த 10-ம் தேதி இரவு கூரியரில் மருந்துகளை அனுப்பிவிட்டு டூ வீலரில் வந்துகொண்டிருந்தேன். அப்போது பி.பி.குளம் பெட்ரோல் பங்க் அருகில் எஸ்.ஐ.கார்த்திக் தலைமையில் காவலர்கள் என் வண்டியை மறித்து ஆவணங்களைக் கேட்டனர். நான் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்ஷூரன்ஸ் பேப்பர்கள் அனைத்தையும் கொடுத்தேன். வாங்கி வைத்துக்கொண்டவர்கள் ஒன்றும் சொல்லாமல் ஓரமாக நிற்கச் சொன்னார்கள். `நான் ஒரு டாக்டர், தற்போது கொரோனா பணிக்காக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பேப்பர்ஸை சரிபார்த்துவிட்டு அனுப்புங்க சார்' என்றேன்.

டாக்டர் தமிழரசன்
டாக்டர் தமிழரசன்

ஆனால், அதற்கு எஸ்.ஐ-யும் அவருடன் மஃப்டியிலிருந்த போலிஸும் என்னை முறைத்துவிட்டு, `நீ டாக்டர்னா பெரிய இவனா... நிக்க மாட்டியா.. .போய் என்னத்தைக் கிழிக்கப்போறே...’ என்றவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்று அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் எஸ்.ஐ-யும், அவருடன் இருந்த போலீஸும் ஆவேசமாக என்னை மாறி மாறி முகத்தில் அறைந்தனர். பொது இடமென்றும் பாராமல் ஆபாசமாகத் திட்டினார்கள். மிருகத்தனமாக நடந்துகொண்டதை எதிர்த்துக் கேட்ட என்னை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

அங்கு ஒரு மணி நேரம் நிற்கவைத்து குற்றவாளியை விசாரிப்பதுபோல் விசாரித்தனர். அசிங்கமாகத் திட்டினார்கள். குடிக்கத் தண்ணீர்கூடத் தரவில்லை. பின்பு இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச் சென்றனர். நான் அவரிடம் நடந்ததைக் கூறினேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினேன். அதற்கு அவர், வெளியில் காத்திருக்குமாறு கூறினார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அப்போதும் என்னிடம் வந்த எஸ்.ஐ கார்த்திக்கும் அடித்த போலீஸும் `நீ என்னதான் எங்கள் மீது புகார் கொடுத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது. நீ நிம்மதியா வாழ முடியாத அளவுக்கு வழக்குகளைப் போட்டு நாசமாக்கிடுவோம்' என்று மிரட்டிவிட்டுச் சென்றனர்.

அதோடு அங்கிருந்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். இனி காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்காது என்பதால் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். தற்போது மனித உரிமை ஆணையம் என் வழக்கை எடுத்திருக்கிறது. நான் சார்ந்த டாக்டர் சங்கமும் மாவட்டவாரியாக புகார் அனுப்பிவருகிறது. என் மீதான காட்டுமிராண்டித்தனமான தால்குதலுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் முறையிடுவேன்" என்றார்.

டாக்டர் தமிழரசன்
டாக்டர் தமிழரசன்

இந்தச் சம்பவம் மதுரை மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தல்லாகுளம் காவல் நிலையத்தில் இப்படி ஒரு சம்பவமே நடக்காததுபோல் கூறிவருகிறார்கள். ஆனால், கமிஷனர் இந்தப் புகாரை தற்போது விசாரித்துவருகிறார்.

இதற்கிடையே டாக்டர் தமிழரசன் தாக்கப்பட்டது சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவையில் ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களை எஸ்.ஐ தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதன் விளைவாக சம்பந்தப்பட்ட எஸ்.ஐ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் டாக்டரைத் தாக்கிய எஸ்.ஐ உட்பட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மக்கள் கேள்வியெழுப்பிவருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு