Published:Updated:

`அதுதான் எங்களால தாங்க முடியல!’- உரிமையாளருக்காக உயிரைவிட்ட நாய்

செ.சல்மான் பாரிஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

வீர மரணம் அடைந்த வளர்த்த நாய்....!

dog
dog

தன்னை வளர்த்தவர்களின் உயிரைக் காப்பற்ற எதிரிகளுடன் போராடி உயிர்விட்ட நாயின் பாசத்தையும் வீரத்தையும், கணவரின் உயிரைக் காக்க கொலைகாரர்களுடன் சண்டையிட்டு காயமடைந்த பெண்ணையும் மதுரை ஜீவா நகர் மக்கள் நெகிழ்ச்சியாகப் பேசி வருகிறார்கள்.

dog
dog

ரவுடிகளின் தாக்குதலில் யதேச்சையாக போய் சிக்கிக்கொண்டு கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிலையில், தன்னை வளர்த்தவர்களைக் காப்பாற்ற சென்று உயிர்விட்டதாக தற்போது வந்துகொண்டிருக்கும் தகவலால் அந்த நாயை அனைவரும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் செந்தில். அப்பளக் கம்பெனி நடத்திவருகிறார். கடந்த 13-ம் தேதி இவரிடம் வேலை செய்யும் முத்துக்குமார் என்பவரைத் தேடிக்கொண்டு கையில் கத்தி, அரிவாளுடன் ஒரு கும்பல் வந்துள்ளது.

இவர்களைப் பார்த்ததும் முத்துக்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். அதனால் கடுப்பான அக்கும்பல், அப்பளக் கம்பெனியின் உரிமையாளரான செந்திலை தாக்கத் தொடங்கியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அவர் மனைவி தமிழ்ச்செல்வி, கணவரைத் தாக்கும் கும்பலுடன் சண்டைக்குச் சென்றார். அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து அந்தக் குண்டர்களுடன் சண்டை போட்டார். அப்போது பட்டாக்கத்தியால் ஒருவன் வெட்ட அவர் கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் தொடர்ந்து சண்டை போட்டிருக்கிறார். இந்த நேரத்தில் இந்தச் சண்டையை பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் வளர்த்த நாய் ஆவேசமாக குறைத்தபடி அந்த முகமூடிக் கும்பல் மீது பாய்ந்தது.

senthil
senthil

ஆனால், நாயென்றும் பார்க்காமல் அந்த ரவுடிகள் பட்டாக்கத்தியால் நாயின் வயிற்றில் வெட்ட ரத்தம் வழிய கீழே விழுந்து நாய் அப்போதே மரணமடைந்தது. இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதி மக்கள், நாய் கொல்லப்பட்டதும் கடும் கோபத்துடன் அந்தக் கும்பலைத் தாக்க திரண்டு வர, உடனே அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.

அதன்பின் வெட்டுப்பட்ட செந்திலும், தமிழ்ச்செல்வியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் கேள்விப்பட்டு ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியிலிருந்து சிசிடிவிக்களை ஆய்வுசெய்து கொலைக்கும்பலை அடையாளம் கண்டு 7 பேரைக் கைது செய்தனர். இதில் இருவர் மைனர்.

dog
dog

தாங்கள் தாக்கப்பட்டதைவிட 12 வருடமாக உயிராக வளர்த்த நாய் கொல்லப்பட்டதுதான் செந்தில்-தமிழ்ச்செல்வி தம்பதிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் கட்டியுள்ள வீட்டுக்கருகிலேயே நாயை அடக்கம் செய்துள்ளவர்கள், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.