Published:Updated:

``கடவுளே நேரில் வந்து தீர்ப்பு சொன்ன மாதிரி இருந்துச்சு!" - டாக்டர் சுப்பையா மனைவி கண்ணீர் பேட்டி

சுப்பையா, சாந்தி

ஏழு ஆண்டுகளாகப் போராடி இந்த நீதியைப் பெற்றிருக்கும் டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தியிடம் பேசினோம்

``கடவுளே நேரில் வந்து தீர்ப்பு சொன்ன மாதிரி இருந்துச்சு!" - டாக்டர் சுப்பையா மனைவி கண்ணீர் பேட்டி

ஏழு ஆண்டுகளாகப் போராடி இந்த நீதியைப் பெற்றிருக்கும் டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தியிடம் பேசினோம்

Published:Updated:
சுப்பையா, சாந்தி

பல்வேறு பஞ்சாயத்துகள்… உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மூன்று தலைமுறைகளாக நீண்டுகொண்டிருந்த ஒரு சொத்துப் பிரச்னையில் 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்த வழக்கில், ஏழு பேருக்கு தூக்கு தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வெளியிட்டுள்ள அதிரடித் தீர்ப்பு தமிழகத்தில் பரபரப்பாகியிருக்கிறது.

மூன்று தலைமுறை பகை!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்புதான் மருத்துவர் சுப்பையாவின் சொந்த ஊர். சுப்பையாவின் தாய்மாமனான பெருமாளுக்கு நிறைய சொத்துகள். ஆனால், அவருக்கு குழந்தை இல்லை. எனவே, அன்னப்பழம் என்கிற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், சில நாள்களிலேயே பெருமாளோடு முரண்பட்டு பிரிந்து சென்றுவிடுகிறார் அன்னப்பழம். சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு குழந்தையோடு திரும்பி வந்த அன்னப்பழம் சொத்தில் பங்கு கேட்கிறார். `அது தன்னுடைய குழந்தை இல்லை’ என்று மறுக்கிறார் பெருமாள். அன்னப்பழம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் தெரிந்தபோதே தன் சொத்துகளை தன் தங்கையான அன்னக்கிளிக்கு எழுதி வைத்துவிடுகிறார். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, பெருமாள் இறந்துவிட, அன்னப்பழத்துக்கும் அன்னக்கிளிக்கும் சொத்து மோதல் ஆரம்பிக்கிறது… குறிப்பாக அஞ்சு கிராமத்தில் உள்ள இரண்டே கால் ஏக்கர் நிலத்தைக் குறிவைத்துதான் இந்த மோதல் ஆரம்பிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்னக்கிளியின் மகன் சுப்பையா படித்து பிரபல அரசு நரம்பியல் மருத்துவராகிறார். அன்னப்பழத்தின் மகன் பொன்னுசாமி அரசுப் பள்ளி ஆசிரியராகிறார். இருதரப்பும் சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை அடைந்தாலும் சொத்துச் சண்டை ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பொன்னுசாமிக்கு பாசில், போரீஸ் என்று இரண்டு மகன்கள்; சுப்பையாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்து அவர்களும் வளர்ந்தனர். சொத்துப் பிரச்னையும் தீராமல் வளர்ந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் அந்த நிலத்தை தன் மனைவி மேரி புஷ்பம் பெயருக்கு செட்டில்மென்ட் எழுதினார் பொன்னுசாமி.

சுப்பையா கொலை வழக்கு
சுப்பையா கொலை வழக்கு

2013-ம் ஆண்டு அரசு மருத்துவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சுப்பையா, முழுமூச்சாக தனது நிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது புதிதாக அமைக்கப்பட்டிருந்த நில அபகரிப்புப் பிரிவில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தையும் நாடினார். இது பொன்னுசாமியின் மகன்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பொன்னுசாமியின் மகன் பாசில் வழக்கறிஞராகவும், போரீஸ் இன்ஜினீயராகவும் இருந்த நிலையில், தங்களின் நண்பர்களான வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோருடன் சேர்ந்து டாக்டர் சுப்பையாவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கின்றனர். இந்த சதித்திட்டத்துக்கு பொன்னுசாமியும் அவரின் மனைவி மேரிபுஷ்பமும் சம்மதித்து துணைபோயிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் 2013 செப்டம்பர் 14 அன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் சுப்பையாவை, கூலிப்படையினர் வெட்டிச் சாய்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பையா, செப்டம்பர் 23-ம் தேதி இறந்துபோனார். சுப்பையா அளித்த வாக்குமூலம் மற்றும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இதில் சம்பந்தப்பட்ட பத்து பேரையும் கைது செய்தது காவல்துறை. படித்து சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் குடும்பத்தினர் சொத்துக்காக கொலை செய்யும் அளவுக்கு கொடூரமாக மாறியதைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமும் மிரண்டு போனது.

மருத்துவர் சுப்பையா
மருத்துவர் சுப்பையா

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன், அரசுத் தரப்பில் அப்ரூவராக மாறியதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜனுக்கு ஆயுள் தண்டனையும், பொன்னுசாமி மற்றும் அவரின் மகன்கள் உள்ளிட்ட மற்ற ஏழுபேருக்கும் தூக்குத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளாகப் போராடி இந்த நீதியைப் பெற்றிருக்கும் டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தியிடம் பேசினோம். ``இந்தத் தீர்ப்பால என் கணவர் உயிரோட திரும்பி வரப்போறதில்லை. ஆனாலும் சமூகத்துக்குத் தேவையான முக்கியமான தீர்ப்பா இதைப் பார்க்குறேன். இன்னொருத்தவங்க இப்படி தப்பு செய்யறதுக்கு யோசிப்பாங்கல்ல. என் கணவரை கொன்னவங்களுக்கு தண்டனை கிடைச்சிருச்சுன்னு எனக்கு சின்ன ஆறுதல், அவங்களுக்கு இந்தத் தண்டனை கிடைக்கலைன்னா ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்.

பொன்னுசாமி மற்றும் அவரின் மனைவி
பொன்னுசாமி மற்றும் அவரின் மனைவி

என் கணவரை கொன்னவங்களுக்கு எந்தத் தண்டனையும் வாங்கிக்கொடுக்க முடியாம போயிருச்சேங்கிற குற்ற உணர்வு வாழ்நாள் முழுக்க குத்திகிட்டே இருந்திருக்கும்… 2,872 நாள்கள் காத்திருந்தது வீண் போகலை…” என்றபோது பெரும் காத்திருப்புக்கான வலியும் அந்த வலிக்கான நிவாரணம் கிடைத்த ஆறுதலும் ஒரேசேர தென்படுகிறது சாந்தியின் குரலில்.

``எப்படி நாள்களை இவ்வளவு மிகச் சரியாகச் சொல்கிறீர்கள்?’’

``என் கணவர் இறந்துபோன நாள்தொட்டு ஒவ்வொரு நாளையும் நான் எண்ணிக்கிட்டே இருந்தேன். நாள்கள் ஆக ஆக இன்னும் நமக்கு நீதி கிடைக்கலையேன்னு தோணும். ஆனா, ஒருபோதும் நான் நம்பிக்கை இழக்கல. என்னைக்காவது ஒருநாள் நீதி கிடைக்கும்னு காத்திருந்தேன். ஏன்னா என் கணவர் சட்டத்தை ரொம்ப மதிச்சவர். சின்னச் சின்ன விஷயங்களில்கூட அவர் சட்டத்தை மீறினது கிடையாது. நாங்களும் அப்படித்தான். நாங்க நம்பின சட்டம் எங்களைக் கைவிடல.”

சுப்பையாவின் மனைவி மற்றும் மகள்கள்
சுப்பையாவின் மனைவி மற்றும் மகள்கள்

``மூன்று தலைமுறைகளாகத் தொடரும் சொத்துப் பிரச்னை… உங்கள் கணவர் உயிருக்கு குறிவைக்கப்படுகிறது என்பது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிந்ததா?”

``இப்படி கொலை நடக்கும்னு நான் எதிர்பாக்கலை. ஆனா கடைசி ஆறு மாசம் என் கணவர் எல்லா விஷயத்துலயும் அலர்ட்டாவே இருந்தார். எங்கே போனாலும் எதைச் செய்தாலும் ஒருவித முன்ஜாக்கிரதையுடன் செய்தார். எங்க வீட்ல ரெண்டு ராஜபாளையம் நாய்கள் இருந்துச்சு. வெளியே வரும்போது நாய்களை அவிழ்த்துவிட்டுத்தான் வெளியே வரணும்பார். ராத்திரியில நாய் குரைச்சா என்னன்னு உடனே செக் பண்ணுவார். வெளியில வரும்போது ஜன்னல் வழியாகப் பார்த்துட்டுத்தான் வெளியே வருவார். அவருடைய நடவடிக்கைகளெல்லாம் வித்தியாசமா இருந்தது. ஏன் என்னன்னு நாங்க கேட்கும்போது நாம தனி வீட்டில் இருக்கிறதால சேஃப்டியா இருக்கணும்னுதான் சொன்னார். வேற எதையும் என்கிட்ட வெளிப்படையா சொல்லலை. ஏன்னா என்னை ஒரு குழந்தை மாதிரிதான் அவர் பார்த்துகிட்டார். என்கிட்ட சொன்னா நான் ரொம்ப பயந்துருவேன்னு இப்படி ஒரு மிரட்டல் இருந்ததைப் பத்தியே என்கிட்ட அவர் சொல்லலை.’’

சுப்பையா, சாந்தி
சுப்பையா, சாந்தி

``அவர் கொலை செய்யப்பட்ட பிறகான நாள்களை இப்போ நினைக்கும்போது என்ன சொல்லத் தோன்றுகிறது..?”

`` அவர் என்னுடைய மாமா பையன்தான். அவருக்கும் எனக்கும் 9 வயது வித்தியாசம். சின்ன வயசுலயிருந்தே ரொம்ப விரும்பி நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம். அவர் ரொம்ப திறமையான டாக்டர். சேவை மனப்பான்மை அதிகம். ஞாயிற்றுக்கிழமைகள்ல ஏழைகளுக்கு இலவசமா ட்ரீட்மென்ட் பார்ப்பார். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நிறைய புத்தங்கள் படிப்பார். நிறைய டிராவல் பண்ணணும், ஜாலியா ஃபேமிலிகூட சுத்தணும்னு அவருக்கு நிறைய ஆசைகள் இருந்துச்சு. எங்களுடையது சின்ன குடும்பம்… ரெண்டு பொண்ணுங்க அப்புறம் நாங்க... அந்த சின்னஞ்சிறிய கூட்டைக் கலைச்சுட்டாங்க” காலத்தாலும் ஆற்ற முடியாத காயத்தால் கண்ணீர் வழிகிறது. துடைத்தபடி பேசுகிறார்…

`` எத்தனை பேர் லைஃபை காப்பாத்துன பெர்சன் தெரியுமா அவரு? 5,000-க்கும் மேற்பட்ட சர்ஜரி பண்ணிருக்கார். 28 வருடம் நியூரோ சர்ஜன். என் இழப்பை விடுங்க... சமூகத்துக்கான இழப்பை நினைச்சுப் பாருங்க… சமூகத்துக்கு இப்படியான ஒரு சர்ஜன் கிடைக்க எத்தனை வருஷம் ஆகும் தெரியுமா? அநியாயமா கொன்னுட்டாங்க. எல்லாம் எதுக்காக சொத்தைப் பிடுங்கறதுக்காக..!"

``ஏழு வருடங்களுக்கு மேலான நீதிமன்றப் போராட்டம் தீர்ப்பு வரும்போது எப்படி இருந்தது?’’

``என் ரெண்டு பொண்ணுக்கும் கல்யாணம் ஆகிருச்சு. பெரிய பொண்ணு துபாய்லயும் சின்ன பொண்ணு திருச்சியிலயும் இருக்காங்க. இந்தத் தீர்ப்புக்காக அவங்களும் வந்திருந்தாங்க. என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு காத்திருந்தோம். தீர்ப்பை நீதிபதி படிச்சபோது எங்களை அறியாம கண்ணீர் வந்துருச்சு. என் கணவரைப் பார்க்கணும்போல இருந்துச்சு. ஏதோ கடவுளே வந்து தீர்ப்பு சொல்றதுபோல இருந்துச்சு. நிஜமா… நான் அம்மனை ரொம்ப கும்பிடுவேன். எனக்கு நீதிபதி அல்லி மேடத்தை பார்க்கும்போது அந்த அம்மனே வந்து உட்கார்ந்திருந்தது மாதிரிதான் இருந்துச்சு. இந்த வழக்குல எங்களுக்காக வாதாடின அரசு வழக்கறிஞர் விஜயராஜ் சாரையும் என்னால மறக்க முடியாது.”

``இப்போ அந்த சொத்துக்களோட நிலைமை என்ன?’

``சொத்து என்கிட்டதான் இருக்கு. அதுல சில பகுதிகளை விற்கப் போறேன். அதை இனிமேல் வெச்சுருக்க விரும்பலை."