துபாய்: தாயின் இறுதிச் சடங்குக்குச் செல்ல முடியாத விரக்தி! சக ஊழியரை 11 முறை கத்தியால் குத்திய நபர்

துபாயில் பணியாற்றிவந்த இந்தியர் ஒருவர், தனது தாயின் இறுதிச் சடங்குக்குச் செல்ல முடியாத ஆத்திரத்தில் சக ஊழியரை 11 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 38 வயதான நபர், தன்னை இந்தியாவுக்கு அனுப்பாத ஆத்திரத்தில், உடன் பணியாற்றும் 25 வயது நபரைக் கத்தியால் குத்தியிருக்கிறார். இது குறித்த விசாரணை துபாய் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துபாயில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை விடுமுறையில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப அந்த நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக 22 பேரை விமான நிலையத்துச் செல்லத் தயாராகும்படி 25 வயதான ஊழியர் ஒருவர் சக ஊழியர்களிடம் கூறியிருக்கிறார். அப்போது இந்தியாவைச் சேர்ந்த 38 வயது தொழிலாளி, தனது தாயின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், தான் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அவரிடம் கூறியிருக்கிறார். இதனால், தனது பெயரையும் பட்டியலில் சேர்க்கும்படியும் கூறியிருக்கிறார். ஆனால், அவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
அதற்கு அடுத்த நாள், அவரின் தாயார் இறந்துபோன தகவல் கிடைத்திருக்கிறது. ஆத்திரமடைந்த 38 வயது ஊழியர், தனது பெயர் விடுமுறையில் செல்லும் ஊழியர்கள் பட்டியலில் இடம்பெறாதது குறித்து 25 வயது ஊழியரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அதற்கு அவர்,`இது நான் எடுத்த முடிவல்ல. நிர்வாகம் எடுத்த முடிவு’ என்று கூறியிருக்கிறார். உடனே, தனது அறைக்குக் கோபமாகச் சென்ற 38 வயது ஊழியர், கையில் கத்தியுடன் திரும்பியிருக்கிறார். ஆத்திரத்தில், அந்த 25 வயது ஊழியரை மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பதினோரு முறை கத்தியால் குத்தியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த 25 வயது ஊழியர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த விவகாரத்தில் 38 வயது ஊழியர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.