தேனி: `ரூ.7,000 கொடுத்தால்தான் மின் இணைப்பு! - விஜிலென்ஸில் சிக்கிய மின்வாரியப் பொறியாளர்

வீட்டுக்குப் புதிய மின் இணைப்புப் பெற விண்ணப்பித்த நபரிடம், லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ளது பரமத்தேவன்பட்டி. இங்கு வசித்துவரும் சின்னப்பாண்டி என்பவர், அதே ஊரில், அரசு மானியத்தில் வீடு கட்டிவருகிறார். அந்த வீட்டுக்கு மின் இணைப்புக் கோரி, சின்னமனூர் மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். மேலும், புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையாக ரூ.2,800 கட்டியிருக்கிறார். இருந்தபோதும், மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் காலதாமதம் செய்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், உதவி மின் பொறியாளர் பூமிநாதன், `மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றால், ரூ.7,000 கொடுக்க வேண்டும்’ என சின்னப்பாண்டியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சின்னப்பாண்டி, பூமிநாதனிடம் தொகையைக் குறைக்க பேரம் பேசவே, இறுதியாக ரூ.3,000 கொடுத்தால், மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்வதாக பூமிநாதன் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பூமிநாதன் பணம் கேட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் சின்னப்பாண்டி.

நேற்று மாலை, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியசீலன், ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீஸார், சின்னப்பாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூ.2,800 கொடுத்து அனுப்பினர். அந்தப் பணத்தை பூமிநாதன் வாங்கியிருக்கிறார். அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பூமிநாதனைக் கையும் களவுமாக பிடித்தனர். அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட மின்சார வாரிய உதவிப் பொறியாளர் கைதுசெய்யப்பட்டிருப்பது, சின்னமனூர் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.