Published:Updated:

தங்கச் சுரங்கத்தில் விழுந்து தவித்த யானை உயிரோடு புதைக்கப்பட்டதா?அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுரங்க குழியில் யானையின் சடலம்
சுரங்க குழியில் யானையின் சடலம்

தங்கம்‌ சேகரிக்கும் கும்பலுக்கு இது தெரிந்திருந்தும் வனத்துறைக்குத் தெரிவிக்காமல் யானை துடிதுடித்து உயிரிழிக்கும் வரை காத்திருந்தோ அல்லது உயிருடனோ யானைமீது மண்ணைக் கொட்டி புதைத்திருக்கின்றனர்.

வனமும் வன உயிர்களும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் அவற்றுக்கெதிரான செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனத்துக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

வனத்துறையினர்
வனத்துறையினர்

தமிழ்நாட்டின் சிரபுஞ்சி என்று முன்னர் அழைக்கப்பட்டு வந்த தேவாலா, இன்றைக்கு சட்டவிரோத தங்க சுரங்கங்களின் தலைநகரம் என்ற மோசமான பெயரைப்‌ பெற்றிருக்கிறது. ஆங்கிலேயர்‌ ஆட்சியின் போது தேவாலா, நாடுகாணி மலைத்தொடர்களில் தங்கத் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்து, சுரங்கங்களை தோண்டினர். அங்கிருந்து வெட்டியெடுக்கப்பட்டத் தங்கங்களை மேலை நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தங்கச் சுரங்கங்களைக் கைவிட்டனர். தற்போது தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சட்டவிரோதமாக இரவு பகலாக தங்கம் வெட்டியெடுத்து கேரளாவுக்குக் கடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால், தங்க வேட்டைக்காகத் தோண்டப்படும் சுரங்கக் குழிகளுக்குள் தவறி விழுந்து ஏராளமான வன விலங்குகள் உயிரிழக்கும் துயரமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சட்டவிரோத தங்க சுரங்க குழி
சட்டவிரோத தங்க சுரங்க குழி

இதேபோல் கடந்த வாரம் இந்தப் பகுதிக்கு உணவு தேடி வந்த யானைக் கூட்டத்தில் இருந்த பெண் யானை குட்டி ஒன்று தங்கச் சுரங்கக் குழியில் தவறி விழுந்தது‌. வழக்கத்துக்கு மாறான யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டு வந்த வனத்துறையினர், அந்த குட்டியைக் குழியிலிருந்து மீட்டனர். இரண்டு‌ நாள் போராட்டத்துக்குப் பிறகு அந்தக் குட்டியைத் தாய் யானை இருக்கும் கூட்டத்துடன் சேர்த்து வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், இதே பகுதியில் உள்ள மற்றொரு சுரங்கக் குழிக்குள் ஆண் காட்டுயானையின் உடல் பாகங்கள் மண்ணில் புதைந்த நிலையில், தந்தங்கள் மட்டும் வெளியில் தென்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக உயர்‌ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்களோடு ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்துறையினர்
வனத்துறையினர்

ஆண் யானையின் இறப்பு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``சட்டவிரோத தங்கச் சுரங்கம் அமைந்துள்ள வனப்பகுதியானது, முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் மற்றும் கேரளாவின் வயநாடு, நிலம்பூர் பகுதிகளைக்‌ கடக்க யானைகள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. கேரளாவில் இருந்து வரக் கூடிய யானைகள் இந்த வழியாகவே முதுமலைக்கு வந்து செல்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்த வழியாக வந்த ஆண் காட்டுயானை ஒன்று தங்கச் சுரங்கத்திற்குள் தவறி விழுந்திருக்கிறது. தங்கம்‌ சேகரிக்கும் கும்பலுக்கு இதுகுறித்து தெரிந்திருந்தும் வனத்துறைக்குத் தெரிவிக்காமல் யானை துடிதுடித்து உயிரிழிக்கும் வரை காத்திருந்தோ அல்லது உயிருடனோ மண்ணைக் கொட்டி யானையை புதைத்திருக்கிறார்கள்.

கூடலூர் பகுதியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சுரங்கத்தில் கொட்டப்பட்ட மேல் மண் அடித்து செல்லப்பட்ட நிலையில், தந்தத்துடன் கூடிய யானையின் மண்டை ஓடு வெளியில் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து யானையின் எலும்பு கூடு தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த யானைக்கு 15 வயது இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நாடுகாணி வனச்சரகத்தில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

சுரங்க குழியில் யானையின் சடலம்
சுரங்க குழியில் யானையின் சடலம்
பிரமாண்ட தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டதா யானை? குற்றவாளியை நெருங்கும் வனத்துறை!

இதுகுறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ஹரிஹரன் கூறுகையில் , ``தேவாலா பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்கங்கள் உள்ளன. யானைகளின்‌ முக்கியமான வழித்தடத்தில் 45 மீட்டருக்கும் மேல் ஆழமுள்ள சுரங்கங்களை சட்ட விரோதமாகத் தங்க படிமங்கள் சேகரிக்கும் கும்பல்கள் தோண்டியிருக்கின்றனர். இத்தகைய பள்ளத்தில் ஏராளமான வன விலங்குகள் விழுந்து உயிரிழக்கின்றன. புலி, சிறுத்தை, மான் போன்ற பல்வேறு வகையான வனவிலங்குகளும் இந்த சுரங்கங்களுக்குள் விழுந்து இறந்திருக்கலாம். குழியில் விழுந்து உயிருக்கு போராடிய யானையை உயிரோடு புதைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சுரங்கங்களை மூடுவதுடன், சட்டவிரோதமாக தங்க படிமங்கள் சேகரிக்க செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு