Published:Updated:

அரசு வேலை தருவதாக கோடிகளைச் சுருட்டிய பெண்!

மெடிக்கல் சர்டிஃபிகேட்... பயோமெட்ரிக் ரேகைப் பதிவு... அச்சு அசலாக நடந்த இன்டர்வியூ...

பிரீமியம் ஸ்டோரி

அரசு வேலை என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாகவே “5 லட்சம் ரூபாய் கொடுத்தால், கால்நடை மருத்துவமனையில் வேலை. 12 லட்ச ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு வேலை” என்று ரீல்விட்டு, பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாயைச் சுருட்டியிருக்கிறார். கடந்த ஆட்சியில் இவர்மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது போலீஸார் கல்யாணியைக் கைதுசெய்து விசாரித்துவருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகிலுள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் கல்யாணி. இவரிடம் தலா 12 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனும், அவரின் உறவினர் மதிவதனியும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுக்க, கல்யாணியையும் அவரின் சகோதரர் செந்தில்குமாரையும் கைதுசெய்திருக்கிறது போலீஸ். இதையடுத்து, பலரும் புகார் கொடுப்பதற்காக ஸ்டேஷனில் குவிய... கல்யாணியின் மோசடி அம்பலமாகியிருக்கிறது.

அரசு வேலை தருவதாக கோடிகளைச் சுருட்டிய பெண்!

இந்த ‘மெகா வேலைவாய்ப்பு மோசடி மேளா’ குறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பாஸ்கர் விவரித்தபோது நமக்கே தலை கிறுகிறுத்துபோனது... ‘‘ஓடப்பள்ளி ஊராட்சிமன்ற உறுப்பினராக இருந்த கல்யாணி, அ.தி.மு.க-வில் உள்ளூர் மகளிரணிப் பொறுப்பிலும் இருந்தார். பலருக்கும் அவர் முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவது உள்ளிட்ட உதவிகளைச் செய்ததால், அவர்மீது ஊர் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

பி.இ முடித்த என் மகன் நந்தகுமாருக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் எக்ஸிகியூட்டர் அலுவலர் பதவியும், எம்.எஸ்சி படித்த என் மகளுக்குத் திட்ட அலுவலர் பதவியும் வாங்கித் தருவதாகச் சொல்லி, தலைக்கு 12 லட்சம் ரூபாய் கேட்டார். அங்கே இங்கே புரட்டி 24 லட்ச ரூபாயை கல்யாணியிடம் கொடுத்தேன். அதேபோல், என் உறவினர்களான ஜெகதீஸ்வரனுக்கும் மதிவதனிக்கும் வேலை வாங்கித்தருவதாகச் சொல்ல... அவர்களிடமும் தலா 12 லட்சம் வாங்கி, 24 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இன்டர்வியூ என்று சொல்லி இவர்கள் நான்கு பேரையும் கோயம்புத்தூருக்கு அழைத்துக்கொண்டு போனார். `மெடிக்கல் ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் இருந்தால்தான் வேலை கிடைக்கும்’ என்று சொல்லி தனியார் மருத்துவமனையில் மெடிக்கல் செக்கப் செய்தார்கள். கோயம்புத்தூரில் அலுவலகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றவர், பயோ மெட்ரிக் பதிவுக்காக லேப்டாப்பில் கைரேகையைப் பதிவு செய்தார். பிறகு உயரதிகாரிகள் தோரணையில் வந்த இரண்டு பேர் கேள்விகளைக் கேட்டுவிட்டு, ‘இன்டர்வியூ முடிந்தது’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

அரசு வேலை தருவதாக கோடிகளைச் சுருட்டிய பெண்!

ஊருக்கு வந்த பத்தே நாள்களில், ‘அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் ரெடி’ என்று ஆளுக்கு ஒரு பேப்பரைக் கொடுத்தார் கல்யாணி. அரசு முத்திரை, சீல் உள்பட அத்தனையும் ஒரிஜினல்போலவே இருந்தன. தொடர்ந்து, ‘வேலையில் ஜாயின்ட் பண்ணுங்க’ என்று சொல்லி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றவர், ‘ஆபீஸர் லீவு... அடுத்த வாரம் வந்து ஜாயின்ட் பண்ணிக்கலாம்’ என்று சொல்லி ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். இப்படியே இரண்டு வாரங்கள் கழிந்த பிறகே நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தோம். கல்யாணியிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. இதையடுத்து, அவர்மீது புகார் கொடுத்தும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் புகாரை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால், 2018-ல் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு போட்டேன். கல்யாணி ஆஜராகாததால், அந்த வழக்கு இப்போது நிலுவையில் இருக்கிறது’’ என்றார்.

இந்தச் சம்பவத்துக்கு முன்பாக 2016-ல் தன் மகனின் வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்த ஆனந்த் என்பவரின் தந்தை தங்கராசு, பணம் பறிபோனதால் மனமுடைந்து கல்யாணியின் வீட்டுக்கு முன்பாகத் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். நம்மிடம் பேசிய அவரின் மகன் ஆனந்த், ‘‘அரூரிலுள்ள என் சகோதரர் சித்தார்த்தனின் வேலைக்காக எங்கப்பா தங்கராசு 11 லட்சம் ரூபாயை கல்யாணிகிட்ட கொடுத்தார். மத்திய அரசின் ரூரல் டெவலப்மென்ட் துறையில, 56,000 ரூபாய் சம்பளத்தில் வேலைன்னு சொல்லி ஜாப் ஆர்டரை கல்யாணி கொடுத்தார். ஒரு கட்டத்துல கல்யாணி ஏமாத்திட்டார்னு தெரிஞ்சு, அப்பா அவர்கிட்ட பணத்தைக் கேட்டப்ப திருப்பித் தரலை... அதனால, மனசு உடைஞ்சவர், 2016-ல கல்யாணி வீட்டுக்கு முன்னாடி தீக்குளிச்சுட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாஜிஸ்ட்ரேட்டிடம் மரண வாக்குமூலம் கொடுத்துட்டு இறந்துட்டாரு. அதுக்கு அப்புறம் பள்ளிப்பாளையம் போலீஸார், கல்யாணி மேல தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கைப் பதிவு பண்ணினாங்க. ஆனா, மூணே மாசத்துல கல்யாணி வெளியில் வந்துட்டாங்க.

ஆனந்த்
ஆனந்த்

இப்போ ஆட்சி மாறினதுக்குப் பிறகுதான் கல்யாணி மேல சார்ஜ் ஷீட் போட்டு, வழக்கு கோர்ட்டுக்கு வந்திருக்கு. எனக்கு தெரிஞ்சு 36 பேரை இப்படி ஏமாத்தி மூணு கோடி ரூபாய்க்கு மேல மோசடி செஞ்சுருக்காங்க. இப்போதான் பாதிக்கப்பட்டவங்க ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிருக்காங்க. இந்த மோசடியை அவங்க தனியாளா செஞ்சிருக்க முடியாது. அவங்களுக்குப் பின்னாடி பெரிய நெட்வொர்க்கே இருக்கணும்’’ என்றார்.

சுற்றுவட்டார மக்களிடம் பேசியபோது, “அந்தம்மாவுக்கு அ.தி.மு.க-வுல சில வி.ஐ.பி-கள் சப்போர்ட் இருக்குது. கடந்த ஆட்சியில இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மினிஸ்டரோட பொதுக்கூட்டங்களுக்கு வேன்ல ஆட்களை கல்யாணி அழைச்சுக்கிட்டுப் போவாரு. அந்தச் செல்வாக்கால்தான் கடந்த ஆட்சியில் பலமுறை இவர்மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கலை” என்றார்கள்.

இந்த வழக்கை விசாரிக்கும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அம்பிகாபதி, ‘‘இப்போதுதான் ஒவ்வொருவராகப் புகார் அளித்துவருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணியிடம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை தெரிந்துவிடும். இந்த மோசடியில் கல்யாணிக்கும், அவரின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. வேறு நெட்வொர்க் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

குறுக்குவழி எப்போதுமே ஆபத்துதான்... ஏமாற்றுபவர்களுக்கு மட்டுமல்ல... ஏமாறுபவர்களுக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு