Published:Updated:

``கவலைப்படாதே, தப்பித்துப் போ!''-போதைக் கும்பலிடமிருந்து காதலியை காப்பாற்றிய காதலனின் கடைசி நிமிடம்

ஜீவித்குமார்
ஜீவித்குமார்

கொள்ளிடம் ஆற்றங்கரையில், தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவரை, போதை வாலிபர்கள் கடுமையாகத் தாக்கி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார். இவரது மகன் ஜீவித்குமார், திருச்சி அண்ணா பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்த ஜீவித், துறையூர் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்கு அவ்வப்போது வந்துசெல்வது வழக்கம்.

கைதான கோகுல்
கைதான கோகுல்

இந்தநிலையில், ஜீவித்துக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண், திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ படித்துவருகிறார். காதலர்களான இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த 30-ம் தேதி மாலை 3 மணியளவில், கொள்ளிடம் பழைய பாலம் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட போதைக் கும்பல் ஒன்று, காதலர்கள் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்துள்ளது. இதைப் பார்த்த ஜீவித், அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.

சுஜித் வீட்டுக்கு வந்த முதல்வரிடமிருந்து விஜயபாஸ்கர் விலகி நின்றது ஏன்?

தொடர்ந்து அந்தக் கும்பல், `வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவோம்' என மிரட்டியதுடன், ஜீவித்தை தாக்கிவிட்டு, வினிதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த ஜீவித், வினிதாவிடம்... "என்னைப் பற்றி கவலைப்படாதே.. நீ இங்கிருந்து தப்பித்துப் போ" என்றாராம்.

போதையில் இருந்த கும்பலிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பியோடிய வினிதா, அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார். விரைந்து வந்த பொதுமக்கள், 2 பேரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதில், 3 பேர் தப்பித்துவிட்டனர். முன்னதாக அந்தக் கும்பல், ஜீவித்தை கொள்ளிடம் ஆற்றில் வீசிவிட்டது.

மீட்கப்பட்ட உடல்
மீட்கப்பட்ட உடல்

போலீஸ் விசாரணையில், அவர்கள் மண்ணச்சநல்லூரை அடுத்த தேவிமங்கலத்தைச் சேர்ந்த ராமர் மகன் கலையரசன் மற்றும் புள்ளம்பாடி மணக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் கோகுல் என்பதும் தெரியவந்தது. இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும் தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் சில்மிஷம் செய்ததும் தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸில் சிக்கிய கோகுல் மற்றும் கலையரசன், “போதையில் இருந்த நாங்கள், தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை வீடியோ எடுத்தோம். அதைவைத்து அவர்களை மிரட்டிப் பணியவைத்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய நினைத்தோம். அப்போது ஏற்பட்ட தகராறில், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜீவித் கொள்ளிடம் ஆற்றில் குதித்துவிட்டான்” எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைதான கலையரசன்
கைதான கலையரசன்

ஆனால் ஜீவித்தின் உறவினர்களோ, “ஜீவித்துக்கு நன்றாக நீச்சல் தெரியும். இந்தக் கும்பல், அவனைத் தாக்கிக் கொலைசெய்யும் நோக்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் வீசிவிட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம். இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட கோகுல் என்பவர், ஜீவித்தை ஆற்றில் தள்ளிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாயமான ஜீவித்குமாரை ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் தேடிவந்தனர்.

`அந்த தம்பி இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க!'- சுஜித் விழுந்த குழியைப் பார்த்து கலங்கிய குழந்தைகள்

இதனிடையே, பொன்னுரங்கபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடக்கரையில் ஜீவித் குமாரின் புத்தகங்கள் மற்றும் செல்போன்கள் இருந்த கைப்பை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புப்படை வீரர்கள், 14 கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் மாணவர் ஜீவித் கிடைக்கவில்லை.

மாணவனின் பை
மாணவனின் பை

இதனிடையே, திருச்சி பனையபுரத்தில் இளைஞர் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அது, ஜீவித் உடலா என்பது குறித்து அடையாளம் காண்பிப்பதற்காகத் தந்தை செந்தில்குமார், தாய் உமாமகேஸ்வரி ஆகியோரை போலீஸார் அழைத்துச்சென்றனர். அவர்கள், `இது எங்கள் மகன் தான்' எனக் கூறி கதறி அழுதனர். பின்னர், மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு