Published:Updated:

`ரூ.1,500 கோடி பணம்; 5,500 ஏக்கர் நிலம் இருக்கு!' - அதிரவைத்த பணமோசடி புகார்

இந்த ஃபைனான்ஸ் கம்பெனியில் பணத்தைப் போட்டு ஏமாந்துட்டோமேன்னு இதுவரை 23 அப்பாவி பொதுமக்கள் தற்கொலை செஞ்சுக்கிட்டு செத்துப் போயிட்டாங்க. அடுத்த உசுரு போறதுக்குள்ள எங்களோட பணத்தை இந்த கலெக்டர்தான் மீட்டுக் கொடுக்கணும்.

Complaint
Complaint

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய `டிஸ்க் அக்ரோ டெக் லிமிடெட்’ என்னும் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், `எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் பணத்தை முதலீடு செய்தால், அந்தப் பணத்தை நாங்கள் நிலத்தில் முதலீடு செய்வோம். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை எதிர்காலத்தில் உங்களுக்கு கூடுதல் வட்டியுடன் பணமாகவோ அல்லது குறைந்த விலையில் நிலமாகவோ கொடுப்போம்’ என ஏஜென்ட்டுகள் மூலமாக பொதுமக்களிடம் கடை விரித்திருக்கின்றனர். முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் என்றவுடன், பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஃபைனான்ஸ் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டியிருக்கின்றனர்.

`டிக் டாக் மோகத்தால் பணம், நகையை இழந்துவிட்டேன்!- சிவகங்கை பெண் கண்ணீர்

`எங்களுக்கு 5,500 ஏக்கர் நிலம் இருக்கு. 1,500 கோடிக்கு மேல் எங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறது. எனவே, உங்க பணத்தை நாங்க ஏன் ஏமாத்தப் போறோம். எங்க கம்பெனியில நம்பிக்கையோட பணத்தைப் போடலாம்’ என ஏஜென்ட்டுகள் சொல்ல, நம்பிக்கையோடு பொதுமக்களும் இருந்ததை எல்லாம் விற்று கம்பெனியில் முதலீடு செய்திருக்கின்றனர். இருக்கின்ற நகை, நிலத்தையெல்லாம் அடகு வைத்து முதலீடு செய்தது மட்டுமல்லாமல், சிலர் குறைந்த வட்டிக்குப் பணத்தை வாங்கி அதை இந்த மோசடிக் கம்பெனியில் கொட்டியிருக்கின்றனர். அப்புறமென்ன, பணத்தைப் போட்ட எல்லாருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. சதுரங்க வேட்டை சினிமா பாணியில், இனி இந்த ஊர்ல ஏமாற எவனும் இல்லை எனத் தெரிந்தபிறகு கடையைச் சாத்திவிட்டு கம்பி நீட்டியிருக்கின்றனர். இதில் ஏமாந்தவர்கள் ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பணத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுக்க திரளாக வந்திருந்தனர்.

மனு கொடுக்க வந்த ஸ்ரீரமேஷ் என்பவரிடம் பேசினோம். ``முதலீட்டுப் பணத்துக்கு அதிக வட்டி, குறைந்த விலையில் வீட்டு மனைகள் என்ற ஏஜென்ட்டுகளின் ஆசை வார்த்தையில் விழுந்துட்டோம். நிறைய பேரை கம்பெனியில் முதலீடு செய்ய வைத்தால், கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனச் சொல்ல, பலரும் ஏஜென்ட்டாக உருவாகி கைக்குச் சிக்கியவர்களையெல்லாம் முதலீடு செய்ய வைத்திருக்கின்றனர்.

Sri Ramesh
Sri Ramesh

அந்தவகையில், இந்தக் கம்பெனி தமிழ்நாடு முழுக்க பல லட்சம் பேரிடம் 5,000 கோடிக்கு மேல் ஏமாத்தியிருக்கிறார்கள். ஈரோட்டுல மட்டும் 50,000 பேரிடம், 70 கோடி ரூபாயை மோசடி செஞ்சிருக்காங்க. இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 9 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் மூலமாக ஆறு மாத காலத்துக்குள் முதலீட்டாளர்களுக்குப் பணத்தை செட்டில் செய்யச் சொல்லி நீதிபதி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல தடை ஆணைகளை வாங்கி, பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

ஃபைனான்ஸ் கம்பெனிக்குச் சொந்தமான 944 சொத்துகளை ஏலத்தில் விட உயர்நீதிமன்றம் உத்தவிட்டும், இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்த ஒரு நிறுவனம் மட்டுமல்ல இவர்களுடைய துணை நிறுவனங்களிலும் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர்.

Receipt
Receipt

அந்த நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஃபைனான்ஸ் கம்பெனியில் பணத்தைப் போட்டு ஏமாந்துட்டோமேன்னு இதுவரை 23 அப்பாவி பொதுமக்கள் தற்கொலை செஞ்சுக்கிட்டு செத்துப் போயிட்டாங்க. அடுத்த உசுரு போறதுக்குள்ள எங்களோட பணத்தை கலெக்டர்தான் மீட்டுக் கொடுக்கணும்” என்றனர்.