Published:Updated:

` 2 மனைவிகளும் ஓடிட்டாங்க... மன உளைச்சல் சார்!' -ஈரோடு ரயில் நிலையத்தைப் பதறவைத்த போதை ஆசாமி

மோப்ப நாய், வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினருடன், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முழுக்கச் சல்லடை போட்டு வெடிகுண்டைத் தேடியிருக்கின்றனர் போலீஸார்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ்

நவம்பர் 3-ம் தேதி மாலை சுமார் 4.15 மணி. சென்னைக் காவல்துறைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. போனில் பேசிய நபர், `என் பேரு இப்ராஹிம். காஷ்மீரிலிருந்து தளபதி என்னை அனுப்பி வெச்சாரு. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்லயும் பஸ் ஸ்டாண்டிலும் குண்டு வெச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வெடிச்சிடும். முடிஞ்சா மக்களைக் காப்பாத்துங்க..’ எனப் பேசிவிட்டு, போனை கட் செய்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் ஈரோடு எஸ்.பி-க்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.

`போலி ஃபேஸ்புக் ஐ.டி; தோழி, குடும்பத்தினரின் ஆபாச படங்கள்!' - சைக்கோ அதிகாரியை வளைத்த சென்னை போலீஸ்

உடனே ஈரோடு எஸ்.பி சக்திகணேசன், ஏடிஎஸ்பி பொன்கார்த்திக்குமார் தலைமையில் ஒரு போலீஸ் டீமை, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பியிருக்கிறார். மோப்ப நாய், வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினருடன், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முழுக்கச் சல்லடை போட்டு வெடிகுண்டைத் தேடியிருக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் முழுக்க போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பயணிகள் பலத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து, ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவரை போலீஸார் விசாரித்திருக்கின்றனர். லிங்கராஜோ, `நவம்பர் 1-ம் தேதி போதையில என் செல்போனை எங்கேயோ விட்டுட்டேன் சார். சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. என்னை விட்டுடுங்க சார்!’ எனக் கதறியிருக்கிறார். இதையடுத்து 1-ம் தேதிக்குப் பிறகு, அந்த செல்போன் எண்ணிலிருந்து சென்ற அழைப்புகளை வைத்துப் போலீஸார் அலசியுள்ளனர்.

அதில், கோவையைச் சேர்ந்த சந்தோஷ் (41) என்பவரிடம் போன் இருப்பது தெரியவர, சந்தோஷின் புகைப்படத்தைப் பெற்று தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இதற்கிடையே, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சந்தோஷின் செல்போன் சிக்னல் கிடைத்திருக்கிறது. அதைவைத்து, ரயில்வே ஸ்டேஷன் முழுக்க போலீஸார் பலத்த ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். அப்போது, ரயில்வே ஸ்டேஷன் அருகே தூங்கிக்கொண்டிருந்த நபரை தட்டி எழுப்பிய போது, அது சந்தோஷ் எனத் தெரியவந்திருக்கிறது.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்

உடனே அவரை, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அப்படியே தூக்கிச் சென்று முறையாகக் கவனித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், `எனக்கு ரெண்டு கல்யாணம் நடந்தும், பொண்டாட்டிங்க என்னைவிட்டுட்டு வேற நபர்களோட ஓடிப் போயிட்டாங்க. சிறுமுகையில் ஒரு நூல் மில்லில் வேலை செஞ்சேன். வேலை ரொம்ப சிரமமாக இருந்துச்சு. வழக்கத்தைவிட அதிகமா சரக்கடிக்க ஆரம்பிச்சேன். குடும்பத்தை நினைச்சு கடுமையான மனஉளைச்சல் வேற. எதுக்குடா கஷ்டப்பட்டுக்கிட்டு, ஜெயிலுக்குப் போனா வேளாவேளைக்கு நல்ல சோறு கிடைக்குமுன்னு விளையாட்டா, போதையில போன் போட்டுட்டேன். என்னை மன்னிச்சி விட்டுருங்க சார்!’ எனக் கலங்கியிருக்கிறார்.

`என்னையா கடிக்கிறாய்..!' - பாம்பைக் கடித்துத் துப்பிய போதை வாலிபர்

இதுகுறித்துப் பேசிய ஈரோடு போலீஸார், “ போதையில் லிங்கராஜ் தொலைத்த போன் எப்படியோ, சந்தோஷ் கையில் சிக்கிவிட்டது. வேலைக்குப் போகாமல், குடித்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தார் சந்தோஷ். லிங்கராஜ் போன் மூலமாக 100-க்கு போன் அடித்து எங்களைப் பதறவைத்துவிட்டான்.

நாங்கள் கைது செய்யும்போதுகூட, செம போதையில்தான் இருந்தான். மக்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துவது, பீதியை ஏற்படுத்தும் நோக்கில் தவறான அழைப்பு விடுப்பது, மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுவது, குற்றம் செய்யும் எண்ணத்தில் செயல்பட்டது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்திருக்கிறோம்” என்கின்றனர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி.