Published:Updated:

`மொத்தக் கஷ்டமும் சேர்ந்து வந்து நிக்குது!' -காஞ்சி இளம்பெண் மரணத்தால் நிலைகுலைந்த குடும்பம்

மரணமடைந்த இளம்பெண்
மரணமடைந்த இளம்பெண்

ஓட்டைக் குடிசை ஒழுகி வீடெல்லாம் தண்ணியா நிக்குது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. மனசு நொறுங்கிக் கிடக்கும் நேரத்துலதான் எல்லா கஷ்டமும் வந்து நிக்குது.

காஞ்சிபுரம் இளம்பெண்ணின் மரணத்தால் அவரின் குடும்பமே நிலைகுலைந்துள்ளது. அந்தப் பெண் இறந்த சோகத்திலும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர் அவரின் பெற்றோர்.

விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்

காஞ்சிபுரம் அடுத்துள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இளம்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரை அழைத்துச் சென்ற ராஜேஷ் என்பவரைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் திரண்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் விளைவாக, தற்கொலை எனப் பதிவு செய்யப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டது. இளம்பெண் இழந்த துயரத்திலிருந்து மீளமுடியாமல் மொத்தக் குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆடுகளை மேய்க்க முடியாமலும் பிரசவத்துக்கு வந்த மூத்த பெண்ணை பராமரிக்க நேரம் இல்லாமலும் அவரின் குடும்பத்தினர் தவிக்கின்றனர். இந்த நிலையில் அந்தக் குடிசையில் ஒழுகும் மழைநீரால் வீடு முழுக்கவே சேறும் சகதியுமாய் விரவிக் கிடக்கிறது.

மரணமடைந்த பெண்ணின் தந்தையிடம் பேசினோம். “அவள் ரோஜா இறந்த பிறகுதான் போலீஸ் ஸ்டேஷன், கவர்மென்ட் ஆபீஸ் எல்லாம் போறேன். என்னென்னமோ சர்ட்டிஃபிகேட்லாம் கேட்குறாங்க. எனக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது. எங்க குடும்பத்துல யாருமே சரியா படிக்கல. பசங்களப் படிக்க வைக்கறதுக்கும் என்கிட்ட வசதி இல்லை. பெரிய பையன் குமரேசன் பத்தாவது படிச்சுட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போனான். இப்ப அந்த வேலையும் இல்லாம வீட்லதான் இருக்கான். அடுத்த பையன் அரவிந்தன் பன்னிரண்டாவதோட நின்னுட்டான்.

அரசு அலுவலகத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினர்
அரசு அலுவலகத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினர்

மேளம் அடிக்கக் கூப்பிட்டா போவான். கடைசி பையன் எட்டாவது படிக்கிறான். அவனும் மேளம் அடிக்கக் கூப்பிட்டா கிளம்பிடுவான். கையில கிடைக்குற காசை கொண்டுவந்து கொடுப்பாங்க. சின்னப் பொண்ணு இறந்ததிலிருந்து யாரும் வேலைக்குப் போகல. இந்த நேரத்துல பெரிய பொண்ணுக்குப் பையன் பொறந்திருக்கான். அவளுக்கு எதுவும் செய்ய முடியாம அங்க இங்க ஓடிக்கிட்டிருக்கேன். ஓட்டைக் குடிசை ஒழுகி வீடெல்லாம் தண்ணியா நிக்குது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. மனசு நொறுங்கிக் கிடக்கும் நேரத்துலதான் எல்லா கஷ்டமும் வந்து நிக்குது” எனச் சொல்லும் போதே தேம்பியழத் தொடங்கினார்.

இளம்பெண் மரணம் தொடர்பாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மதி.ஆதவன், `` வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி நிவாரணத் தொகையாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.5 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால் அதைப் பெறுவதற்கு சாதிச் சான்று அவசியம். இறந்து போன பெண், பள்ளிப் படிப்பை முடித்தபோது அவருக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. இதனால் பெண்ணின் பெற்றோர்களின் சாதிச் சான்றுகளைக் கேட்டோம். அவர்களுக்கும் எவ்வித சாதிச் சான்றுகளும் இல்லை.

உடனே அவர்களைக் காஞ்சிபுரத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு அழைத்து வந்து புதிதாக விண்ணப்பித்திருக்கிறோம். உடனடியாக சாதிச் சான்று கொடுப்பதாக சார்ஆட்சியர் சரவணன் உறுதி கொடுத்திருக்கிறார். சாதிச் சான்று கிடைத்தபிறகு மீண்டும் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் செல்ல இருக்கிறோம்.

மதி.ஆதவன்
மதி.ஆதவன்

குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் அரசு அலுவலகங்களுக்குப் பெண்ணின் பெற்றோர் அலைந்து கொண்டிருக்கின்றனர். சாதிச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் என அத்தனை சான்றிதழ்களையும் அரசு அலுவலகங்களில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ரோஜாவின் உடற்கூறாய்வு அறிக்கை வந்தால்தான், இந்த வழக்கு அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செல்லும். நாங்கள் அவருக்கு உதவியாக இருந்து அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு