Published:Updated:

`அபார நினைவுத் திறன்; 93 கொலைகள்; 50 ஆண்டுகள்!' - அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய சீரியல் கில்லர்

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சீரியல் கில்லர் என சாம்லிட்டில் என்பவரை அறிவித்திருக்கிறது, அந்நாட்டு விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ.

சாமுவேல்
சாமுவேல் ( FBI )

கலிஃபோர்னியா மாகாணத்தில் 3 பெண்களைக் கொலை செய்ததற்காக, கடந்த 2014-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார் சாமுவேல். இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அதற்காக கலிஃபோர்னியா மாகாணச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர், கடந்த 50 ஆண்டுகளாக 93 கொலைகளைச் செய்திருப்பதாகக் கொடுத்திருக்கும் வாக்குமூலம், அமெரிக்க அதிகாரிகளை அதிர வைத்திருக்கிறது.

சாமுவேல்
சாமுவேல்

அமெரிக்காவின் 19 மாகாணங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், போதைக்கு அடிமையானவர்கள் என 93 பேரைக் கொலை செய்திருப்பதாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் பிரபல சீரியல் கில்லர்களாக அறியப்பட்ட டெட் பன்டி மற்றும் ஜெஃப்ரி டாமெர் ஆகியோர், செய்ததாகக் கூறப்படும் கொலைகளின் எண்ணிகையைவிட, இது அதிகம் என்கிறார்கள் எஃப்.பி.ஐ அதிகாரிகள்.

Vikatan

இந்த வழக்கில், முதலில் வாய் திறக்காமல் அமைதிகாத்த சாமுவேலிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு, அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார் டெக்சாஸ் காவல்துறை அதிகாரி ஜேம்ஸ் ஹாலண்ட், 79 வயதான சாமுவேலிடம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 700 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கொண்ட விசாரணையின் முடிவிலேயே கொலைகள் குறித்த தகவல்கள் வெளியே வந்திருக்கிறது.

சாமுவேல் வரைந்த படங்கள்
சாமுவேல் வரைந்த படங்கள்

இதுகுறித்துப் பேசிய ஜேம்ஸ் ஹாலண்ட், ''முதலில் கொலைகள் குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருந்த அவர், தொடர் விசாரணையில் கொஞ்சம் கொஞ்சமாக அவரது செயல்பாடுகள் குறித்து அவர் என்னிடம் பேசத் தொடங்கினார். 93 கொலைகளை அவர் செய்திருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது நினைவுத்திறன் அபாரமானது. கொலைகள் நடந்த இடங்கள், கொலை செய்யப்பட்ட பெண்கள் என 1970-களில் நடந்த சம்பவங்களைக்கூட திரையில் ஓடும் காட்சிகளைப் போல் அவர் என்னிடம் விவரித்தார். அவர் கூறிய தகவல்களைச் சரிபார்த்தபோது, அந்த இடங்கள் குறித்த அவரது நினைவுத்திறன் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. ஓவியம் வரைவதில் ஈடுபாடு இருப்பதாக சாமுவேல் கூறியதை அடுத்து, கொலை செய்தவர்கள் முகங்களை வரைந்துகொடுக்குமாறு கேட்டோம். இதுவரை அவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை அவர் வரைந்து கொடுத்திருக்கிறார். அதன்படி, அந்தப் பெண்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றுவருகிறது'' என்றிருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சீரியல் கில்லர் இவர்தான் என்று அறிவித்திருக்கிறது, எஃப்.பி.ஐ. அவரால் கொல்லப்பட்ட 50 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில் பல, விபத்துகளாகவும் பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத வழக்குகளாகவும் இருந்ததாக எஃப்.பி.ஐ கூறுகிறது. கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களும் உதவ வேண்டும் என்று அறிவித்து, அதற்கென சாமுவேல் வரைந்த படங்கள் மற்றும் அவர்களைப் பற்றி வீடியோக்களுடன் பிரத்யேக இணையதளத்தையே எஃப்.பி.ஐ வடிவமைத்திருக்கிறது. கொலை செய்தது குறித்து பேசும் சாமுவேல், அவை தனக்கு மனநிறைவைத் தந்ததாகவும், பலருக்கு அதன்மூலம் விடுதலை கொடுத்ததாகவும் கூறி அதிரவைத்திருக்கிறார்.

சாமுவேல்
சாமுவேல்

இதுகுறித்துப் பேசிய எஃப்.பி.ஐ-யின் விசாரணை அதிகாரி கிறிஸ்டி பலாஸோலோ (Christie Palazzolo), ``சாமுவேல் மெக்டவல் என்று அழைக்கப்படும் இவர், குத்துச்சண்டைப் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்கக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். 3 கொலைகள் மட்டுமல்லாது அத்தனை கொலைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும்'' என்கிறார்.

இந்த விவகாரம், அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.