Published:Updated:

மீண்டும் துளிர்விடும் பெண் சிசுக் கொலை!

பெண் சிசுக் கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் சிசுக் கொலை

உசிலம்பட்டி அவலம்

‘‘என்ன சொல்றதுன்னே தெரியல. தோண்டி அந்தக் குழந்தைய எடுத்தப்ப, எந்தச் சிதைவும் இல்லாம அப்படியே தூங்குவதுபோல இருந்துச்சு. பாத்ததும் மனசே நொறுங்கிப்போச்சு!’’

- உடைந்து அழும் குரலில் பேசுகிறார், செக்கானூரணி இன்ஸ்பெக்டர் அனித்தா. புதைக்கப்பட்டுவிட்டது என நினைத்த பெண் சிசுக்கொலை மீண்டும் துளிர்விட்டிருப்பது, சமூக ஆர்வலர்களின் நெஞ்சில் சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள புள்ளேரிப்பட்டி கிராமத்தில் பிறந்து 33 நாள்கள் ஆன பெண் குழந்தை ஒன்று, மார்ச் 5-ம் தேதியன்று அதன் தாய், தந்தை மற்றும் தாத்தாவால் எருக்கம்பால் ஊற்றிக் கொல்லப்பட்டிருக்கிறது. குழந்தையைக் கொன்ற வைரமுருகன், சவுமியா மற்றும் வைரமுருகனின் தந்தை சிங்கம் ஆகியோர், இப்போது சிறையில் இருக்கின்றனர்.

பெண் சிசுக் கொலை
பெண் சிசுக் கொலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

30 ஆண்டுகளுக்கு முன்பு, இதே உசிலம்பட்டிப் பகுதியில்தான் பெண் சிசுக்கொலைகள் அதிகளவில் நடந்தன. அதை முதன்முதலில் அட்டைப்பட கட்டுரை மூலமாக வெளியுலகுக்குச் சொன்னது ஜூனியர் விகடன்தான். அதன் பிறகு தன்னார்வ நிறுவனங்கள் அங்கே குவிந்தன. விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடந்தன. இயக்குநர் பாரதிராஜா இதை ‘கருத்தம்மா’ என்ற பெயரில் திரைப்படமாகப் பதிவுசெய்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா, ‘தொட்டில் குழந்தை’த் திட்டத்தை அறிவித்தார். இதனால், ஏராளமான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டன. ‘சிங்கப்பெண்ணே...’ என்று தமிழகமே பெண்களைப் போற்றும் இந்தச் சூழலில்தான் இப்படியொரு சம்பவம் நடந்து எல்லோரையும் அதிரவைத்திருக் கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘புள்ளைய வளர்க்கக் கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருந்தா நான் வளர்த்திருப்பேனே... பாவிமக்க பச்சப்புள்ளையை இப்படிப் பண்ணி ருச்சுகளே...’’ என்று கதறுகிறார் 80 வயதாகும் பொன்னாத்தா. பிறந்து 33 நாள்களே ஆன குழந்தையை எருக்கம்பால் கொடுத்துக் கொலை செய்த வைரமுருகன்-சவுமியா தம்பதியின் பாட்டிதான் இவர். கேட்பவர் நெஞ்சைக் கொதிக்க வைக்கும் செயலைச் செய்துவிட்டு பேரன், பேத்தியுடன் மகனும் சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில், அந்தச் சிறிய வீட்டில் தனியாக பேதலித்துக் கிடக்கிறார் பொன்னாத்தா.

பெண் சிசுக் கொலை
பெண் சிசுக் கொலை

இந்த வழக்கை விசாரித்த செக்கானூரணி இன்ஸ்பெக்டர் அனித்தாவிடம் பேசினோம். ‘‘புள்ளேரிப்பட்டியில் குழந்தையைக் கொன்னுட்டதா யாரோ ஒருத்தர் போலீஸ் எமர்ஜென்சி நம்பருக்குத் தகவல் சொல்லிருக்காரு. அதைவெச்சுதான் நாங்க அந்த ஊருக்குப் போய் விசாரிச்சோம். ஆரம்பத்துல எங்களுக்கு எந்த க்ளுவும் கிடைக்கல. ஊர்க்காரங்க எந்தத் தகவலையும் சொல்லல. அதுக்குப் பின்னாலதான் வைரமுருகன்-சவுமியாமேல சந்தேகம் வந்துச்சு. விசாரிச்சதுல ஒப்புக்கிட்டாங்க. இது குற்றம்கிறது தெரிஞ்சும் செஞ்சிருக்காங்க.

ஜூனியர் விகடன் 4-12-85 இதழ் அட்டை
ஜூனியர் விகடன் 4-12-85 இதழ் அட்டை

கூலி வேலை பார்க்கும் அவங்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கு. இந்த நிலையில ரெண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால, எருக்கம்பால் கொடுத்து கொன்னதா சொன்னாங்க. நாட்டுல குழந்தை இல்லாதவங்க நிறையபேர் இருக்கும்போது, அந்தக் குழந்தையை அரசாங்கக் காப்பகத்துல சேர்த்திருக்கலாம். ஏன், எங்ககிட்ட கொடுத்திருந்தாகூட நாங்க அதை வளர்க்க ஏற்பாடு செஞ்சிருப்போம். அறியா மையாலயும் இயலாமை யாலயும் இப்படிப் பண்ணியிருக் காங்க... என்ன சொல்றதுன்னே தெரியல.

அனித்தா
அனித்தா

அந்தக் குழந்தைய தோண்டி எடுத்தப்ப, எந்தச் சிதைவும் இல்லாம அப்படியே தூங்குவது போல இருந்துச்சு. பாத்ததும் மனசே நொறுங்கிப்போச்சு! பிள்ளைகளை வளர்க்க அரசு எவ்வளவோ உதவி செய்யுது. பெண் குழந்தையை வளர்க்கிறதுல உள்ள மூடத்தனமும் உறவினர்களோட டார்ச்சரும்கூட இதுக்குக் காரணமா இருக்கலாம். இதுபோன்ற சமூகக்கொடுமை இந்தப் பகுதியில் இனி நடக்காத வகையில நாங்க தொடர்ந்து கண்காணிப்புல இருப்போம்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உசிலம்பட்டி தாசில்தார் செந்தாமரையும், ‘‘இந்தப் பழக்கம் இந்தப் பகுதியில் எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்’’ என்றார்.

வைரமுருகன் - சவுமியா -  சிங்கம் - பொன்னாத்தா
வைரமுருகன் - சவுமியா - சிங்கம் - பொன்னாத்தா

அந்தக் கிராமத்தில் வலம்வந்து பல்வேறு பெண்கள் மற்றும் பெரியவர்களிடம் பேசியவகையில் நமக்குத் தெரிந்த விஷயம், இந்தப் பெண் சிசுக் கொலைக்கான அடிப்படைக் காரணம், அங்குள்ள வரதட்சணை பிரச்னைதான். பெண்பிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்தே கடனாளியான பல குடும் பங்கள் அங்கு இருக்கின்றன. வரதட்சணையை அதிகமாக வாங்குவதை அங்கு உள்ள இளை ஞர்களே பெருமையாகப் பேசுகின்றனர். அதனால் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகிறது. அதுவே பெண்களின் மெளன மான கோரிக்கையாகவும் உள்ளது.

சிங்கப்பெண்களைப் போற்றா விட்டாலும் பரவாயில்லை... புதைக்க வேண்டாம்!