அலசல்
Published:Updated:

தொடரும் பெண் சிசுக் கொலைகள்...

பெண் சிசுக் கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் சிசுக் கொலைகள்

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தக் கொடூரம்?

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தில் பெண்சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவர் கைதாகி 15 நாள்கள்கூட ஆகாத நிலையில், மார்ச் 19-ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தில் பெண்சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் தாயும் பாட்டியும் கைதாகியுள்ளனர். அடுத்தடுத்து பெண்சிசுக் கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதால், இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தக் கொடூரம் தொடருமோ என்று சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தேனி மாவட்ட சைல்டு லைன் அலுவலர் ராஜாவிடம் பேசினோம். ‘‘மார்ச் 15-ம் தேதி பெண் சிசுக் கொலை சம்பந்தமாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 16-ம் தேதி, ஆண்டிபட்டி வட்டம் சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர், ஊர் நல அலுவலர் ஆகியோருடன் இரண்டு போலீஸார் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்குச் சென்றோம்.

கவிதா, செல்லம்மாள்
கவிதா, செல்லம்மாள்

மொட்டனூத்துப் பஞ்சாயத்தில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் பலரும் வேலை தேடி திருப்பூர், கோவை பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். கிராமத்தில் ஒரே ஒரு வீடு மட்டும் இருந்தது. அதில் சுரேஷ் - கவிதா தம்பதியினர், சுரேஷின் தந்தை முத்துச்சாமி, தாய் செல்லம்மாள் ஆகியோர் வசித்துவந்தனர். விசாரித்ததில், அவர்கள்தான் சம்பந்தப் பட்டவர்கள் எனத் தெரிந்தது. பிறந்து ஆறே நாளில் இறந்துவிட்டதாகக் கூறினர். காரணம் கேட்டதற்கு, பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. உடனடியாக மாவட்ட சமூகநலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தோம்.

சிசுக் கொலை.... - 
விசாரணை...
சிசுக் கொலை.... - விசாரணை...

தொடர்ந்து மொட்டனூத்து வி.ஏ.ஓ-வான தேவி, மார்ச் 18-ம் தேதி ராஜதானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 19-ம் தேதி காலை, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டது. கவிதா மற்றும் செல்லம்மாள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். கள்ளிப்பால் ஊற்றித்தான் இந்தக் கொலையைச் செய்துள்ளனர்’’ என்றார்.

ஆண்டிபட்டி சமுதாய நலச் செவிலியர் சாந்தி, ‘‘கவிதாவுக்கு, பிப்ரவரி 26-ம் தேதி தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் ஆரோக்கியமான நிலையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம் என்பதால், 28-ம் தேதியே வீட்டுக்குச் சென்றுவிட்டனர். கவிதாவுக்கு ஏற்கெனவே 10 மற்றும் 8 வயதுள்ள இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அடுத்ததாக ஒருமுறை பிரசவித்து, கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்காவது முறையாகக் கருவுற்று குழந்தை பிறந்துள்ளதால், `ஹை ரிஸ்க் மதர்’ பட்டியலில் கவிதா வைக்கப்பட்டார். இதன்மூலம், கவிதாவை கிராம செவிலியர் கண்காணித்துக்கொள்வார். நான், சுழற்சிமுறையில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று `ஹை ரிஸ்க் மதர்’ பட்டியலில் உள்ள பெண்களை ஆய்வுசெய்வேன்.

அப்படித்தான் மார்ச் 9-ம் தேதி கவிதாவின் வீட்டுக்குச் சென்று, ‘குழந்தையைப் பார்க்க வேண்டும்’ என்றேன். `மஞ்சள் காமாலை வந்து 2-ம் தேதியே குழந்தை இறந்துவிட்டது. புதைத்து விட்டோம்’ என்றார் கவிதா. நான் அடுத்தடுத்து கேள்வி கேட்டதும், என்னை போகச் சொல்லி விரட்டினர். இருவர் மீதும் சந்தேகம் வரவே, என்னுடைய மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அதன் அடிப்படையில் விசாரணை செய்து இருவரும் கைதுசெய்யப்பட்டிருக் கின்றனர்’’ என்றார்.

தொடரும் பெண் சிசுக் கொலைகள்...

ராஜதானி போலீஸாரிடம் பேசியபோது, ‘‘சம்பவ நேரத்தில் கவிதாவின் கணவர் சுரேஷ் மற்றும் மாமனார் முத்துச்சாமி இருவரும் இல்லை. இருவருக்கும் குற்றத்தில் தொடர்புள்ளதா என விசாரித்துவருகிறோம். குற்றத்தில் அவர் களுக்கும் தொடர்பு இருந்தால், கண்டிப்பாகக் கைதுசெய்யப்படுவர்’’ என்றனர்.

கடந்த நூற்றாண்டிலேயே வழக்கொழிந்துவிட்டது என நினைத்த பெண் சிசுக் கொலைகள் மீண்டும் தொடர்வது, வேதனையிலும் வேதனை!