Published:Updated:

``தண்ணீர் கேட்டான், அது கூட கொடுக்கல!''- மும்பை போலீஸ் நிலையத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

போலீஸ் நிலையத்தில் இளைஞர் பலியான சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் நிலையம் முன்பு   போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

மும்பையில் போலீஸ் நிலையத்தில் 26 வயது இளைஞர் விஜய் சிங், பலியான சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சயான் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சிங். மார்க்கெட்டிங் பிரதிநிதியான இவருக்கும் அங்குள்ள தம்பதிக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பெண்ணை விஜய் சிங் தாக்கியுள்ளார். இது தொடர்பான புகாரில், விஜய் சிங்கை வடலா ட்ரக் டெர்மினஸ் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் விசாரணையின்போது, போலீஸார் தாக்கியதில் விஜய்சிங்குக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.

லாக்அப்பில் பலியான விஜய்சிங்
லாக்அப்பில் பலியான விஜய்சிங்

விஜய் நடிப்பதாகக் கூறி போலீஸார் மேலும் மேலும் அவரை அடித்துள்ளனர். இதனால், போலீஸ் நிலையத்திலேயே விஜய் சிங் பரிதாபமாக மரணம் அடைந்தார். போலீஸ் நிலையத்தில் இளைஞர் பலியான சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் உறவினர்கள், நண்பர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வடலா போலீஸ் நிலையம் முன்பு திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, விஜய் மரணத்துக்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் 3 கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் கூறியுள்ளார். போலீஸ் நிலையத்தில் விஜய் சிங்கை போலீஸார் தாக்கியபோது அங்கே இருந்த அவரின் நண்பர் அங்கித் மிஷ்ரா கூறுகையில், ``போலீஸார் தாக்கியதில் விஜய் சிங் நெஞ்சுவலியால் துடித்தார். அப்போது, தண்ணீர் தருமாறு கேட்டார், தண்ணீர்கூட போலீஸார் கொடுக்கவில்லை. போலீஸ் நிலையத்துக்கு வெளியே விஜய்சிங்கின் பெற்றோரும் இருந்தனர். விஜய் சிங்கை பார்க்க அவரின் பெற்றோரையும் அனுமதிக்கவில்லை.

மும்பையில் மக்கள் போராட்டம்
மும்பையில் மக்கள் போராட்டம்

பின்னர், திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் போலீஸார் கார் ஒன்றில் விஜய்சிங்கை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் விஜய் சிங் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விஜய் சிங் மரணத்துக்கு காரணமானவர்களை நாங்கள் சும்மாவிட மாட்டோம்'' என்றார். மும்பை ஜெ.ஜெ மருத்துவமனையில் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் முன்னிலையில் விஜய்சிங்கின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வறிக்கை வந்ததும் போலீஸார் மீது நடவடிக்கை பாயும் என்று மும்பை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.