Published:Updated:

திருவாரூர் : ஏடிஎம்-மில் கொள்ளை மற்றும் கொலை; 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

திருவாரூர் காவல்துறையினர்
திருவாரூர் காவல்துறையினர்

ஒருவர் மட்டும் பிடிபட மற்ற மூவர் தப்பிச் சென்றனர். அடுத்த சிறிது நேரத்தில் தப்பிய கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து, தாக்குதல் நடத்தி, பிடிப்பட்ட மற்ற ஒரு கொள்ளையனை மீட்க முயன்றனர்.

திருவாரூர் மாவட்டம், கூடூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நான்கு நபர்களை, திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்கள். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
சென்னை: `ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் யார்?!’ - நடித்துக் காட்டியதை வீடியோ எடுத்த போலீஸ்

திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலையிலுள்ள கூடூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டுவருகிறது. கடந்த 19.06.21 அன்று இரவு இரண்டு டூ வீலர்களில் வந்த நான்கு மர்ம நபர்கள், இந்த ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டதால், எதிர் வீட்டில் வசிப்பவர், ஏடிஎம் மையம் செயல்படக்கூடிய கட்டடத்தின் உரிமையாளரான தமிழரசன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். மேலும் ரோந்து காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அங்கு மக்கள் கூடியதால், கொல்ளையர்கள் நான்கு பேரும் டூ வீலர்களில் தப்பிச் செல்ல முயன்றனர். ரோந்து காவலர்களும்ம் பொதுமக்களும் துரத்திச் சென்றபோது, ஒருவன் மட்டும் பிடிபட்டான். மற்ற மூவரும் தப்பிச் சென்றனர். அடுத்த சிறிது நேரத்தில் மற்ற கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து தாக்குதல் நடத்தி, பிடிபட்ட மற்றொரு கொள்ளையனை மீட்க முயன்றனர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

அப்போது, ஏடிஎம் மையத்தின் கட்டட உரிமையாளர் தமிழரசன் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டார். மார்புப் பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டு, இதயம் பாதிக்கப்பட்டதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஏடிஎம் கொள்ளை முயற்சி மற்றும் தமிழரசன் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட புள்ளமங்கலத்தைச் சேர்ந்த விஜய், பிரதாப், ஆகாஷ், லட்சுமாங்குடியைச் சேர்ந்த மதன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணனுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். அதைத் தொடர்ந்து, இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாகப் பணிபுரிந்ததாக, திருவாரூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தினேஷ்குமார், திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த மாவட்டத்தில் குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு