Published:Updated:

கள்ளச்சாராயம் காய்ச்சி `டிக் டாக்' வீடியோ! - தேனியில் சிக்கிய 4 இளைஞர்கள்

கள்ளச்சாராயம் காய்ச்சி கைதானவர்கள்
கள்ளச்சாராயம் காய்ச்சி கைதானவர்கள்

கள்ளச்சாராயம் காய்ச்சியதாகக் கடந்த 10 நாள்களில் 15 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுவரும் நிலையில், வீட்டின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி அதை டிக் டாக்கில் பதிவிட்ட 4 இளைஞர்கள், போலீஸாரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு, பெரியகுளம் என அடுத்தடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அடுத்தடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக, டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் தொடரும் கள்ளச்சாராய மோகம் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கண்காணிக்க நான்கு தனிப்படைகள் அமைத்துள்ளார்.

கள்ளச்சாராயம் காய்ச்சும் டிக் டாக் பதிவு
கள்ளச்சாராயம் காய்ச்சும் டிக் டாக் பதிவு
ஒரு வாரத்தில் 13 பேர்.. தேனி போலீஸுக்கு அதிர்ச்சிகொடுக்கும் கள்ளச்சாராயம்!

இந்நிலையில், போடி புதுக்காலனியைச் சேர்ந்த பிரதீப், விவேக், சரவணன், பிரபாகரன் ஆகியோர் வீட்டின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர். இதை அறிந்த போடி நகர் காவல்துறையினர், வீடியோ பதிவிட்டது யார் என்ற விசாரணையில் இறங்கியபோது, நால்வரும் பிடிபட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ``கள்ளச்சாராயம் காய்ச்சுவதைப் பற்றி இணையதளத்தில் படித்துவிட்டு, வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் காய்ச்சியுள்ளனர். அதை டிக் டாக்கில் பதிவிட்டதும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நால்வரை கைது செய்திருக்கிறோம். அவர்களிடம் இருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்றனர்.

`ஊரடங்கு முடிந்தால்தான் நிதியாம்!’ - ஓபிஎஸ்-க்கு கோரிக்கை வைக்கும் தேனி தோல் பாவைக்கூத்துக் கலைஞர்

தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு ஏற்ப, கள்ளச்சாராயம் காய்ச்சியது மட்டுமல்லாமல் கெத்து காட்ட, அதை டிக் டாக்கில் பதிவிட்டு மாட்டிக்கொண்ட நான்கு இளைஞர்களைப் பற்றி தேனியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. அவர்கள் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு