Published:Updated:

`உயர் அதிகாரிகள் முதல் பொது மக்கள் வரை தேடிய 6 வயதுச் சிறுமி!'- கேரளாவை உலுக்கிய மரணம்

சிறுமி
சிறுமி

``என்னுடைய மகள் யாருடைய வீட்டிற்கும் சென்று விளையாட மாட்டாள். யார் மீதும் சந்தேகம் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை."

கொல்லம் மாவட்டத்திலுள்ள எலாவூர் எனும் பகுதியைச் சேர்ந்த தேவானந்தா என்ற சிறுமி கடந்த வியாழக்கிழமை காலை காணாமல் போயுள்ளார். அக்கம் பக்கத்தில் சிறுமியைத் தேடிய பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் சிறுமியின் புகைப்படங்களைப் பகிர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில், அவரது வீட்டின் அருகில் சிறுமியின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுமி
சிறுமி

பிரதீப் குமார் மற்றும் தன்யாவின் ஆறு வயது மகளான தேவானந்தா ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் காணாமல் போனதாகக் காவல்நிலையத்தில் அவரது தாய் புகார் அளித்துள்ளார். தன்யா, தனது வீட்டின் அருகே துணி துவைக்கச் சென்றபோது தேவானந்தாவும் அவரைப் பின் தொடர்ந்துள்ளார். சிறுமியை வீட்டில் இருக்கும்படி தன்யா கூறியதால், சிறுமி வீட்டிற்குச் சென்றுள்ளார். இதை தன்யாவும் கவனித்திருக்கிறார். ஆனால், சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பி வரும்போது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்ததாகவும் தனது மகளைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

`பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை' - உ.பி-க்கு அதிர்ச்சி கொடுத்த 16 வயதுச் சிறுமி

இது தொடர்பாக தன்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, ``என்னுடைய மகள் யார் வீட்டிற்கும் சென்று விளையாட மாட்டார். யார் மீதும் சந்தேகம் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்றும் கூறியுள்ளார். இவர், காவல்துறையினரிடம் அளித்த புகாரை அடுத்து அதிகாரிகளும் அக்கம்பக்கத்தினரும் தீவிரமாகத் தேட ஆரம்பித்தனர். மம்மூட்டி, மோகன்லால் போன்ற பிரபலங்கள் உட்பட பல நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து தேடினர். இதுதொடர்பான வதந்திகளும் பின்னர் பரவ ஆரம்பித்தது. காவல்துறையினரும் வதந்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

சிறுமி
சிறுமி

நேற்று இரவு காவல்துறையினர் 50 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்து தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். கேரளாவின் எல்லைகளில் உள்ள காவல்துறையினருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. குழந்தைகள் உரிமைகள் ஆணையம் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலரும் இந்தப் பணியில் ஈடுபட்டனர். வீட்டின் அருகில் இருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் நீச்சல்வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், அவருடைய உடல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. சேற்றில் சிக்கி இருந்ததால், உடலைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என அப்பகுதியினர் கூறியுள்ளனர். எனினும், காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`உதவி கேட்க வந்த இடத்தில் மயங்கிவிழுந்த சிறுமி!' - சேலம் ஆட்சியர் அலுவலக சோகம்
அடுத்த கட்டுரைக்கு