Published:Updated:

குடோனில் அடைப்பு; 5 நாள் சித்ரவதை!- வேலைக்குச் சென்ற திருப்பூர் சிறுமிக்கு வாலிபரால் நடந்த கொடுமை

திருப்பூர் மாவட்டத்தில், வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sexual Harassment
Sexual Harassment

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பொட்டிக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரஸ்வதி (பெயர் மாற்றம்). பட்டியலினத்தைச் சேர்ந்த சரஸ்வதி, 12 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்துவிட்டார். சரஸ்வதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

girl's house
girl's house

மூத்த மகளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (27) என்பவர், சித்தாள் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக சரஸ்வதியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து, குடும்பச் சூழல் காரணமாகத் தனது 14 வயது மகளை வேலைக்கு அனுப்பிவைத்திருக்கிறார் சரஸ்வதி. ஆனால், இரவு 10 மணியாகியும் மகள் வீட்டுக்கு வரவில்லை. சுப்பிரமணியின் வீட்டுக்குச் சென்று பார்த்தால், அவரும் அங்கு இல்லை.

village
village

அவரது போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சரஸ்வதி குடும்பத்தினர், மகளை பல இடங்களில் தேடியுள்ளளனர். கிட்டத்தட்ட ஐந்து நாள்களுக்குப் பிறகுதான் மகள் கிடைத்துள்ளார்.

இதுகுறித்து சரஸ்வதி, “என் மகளைப் பார்த்தபோது, அவள் அழுது கொண்டிருந்தாள். அழைத்துச் சென்ற முதல் நாளே சுப்பிரமணி, ‘உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. நாம் சேர்ந்து வாழலாம்’ என்று ஆசைவார்த்தை கூறி, காலில் இருந்த கொலுசை அடகு வைத்துள்ளார். பிறகு திருப்பூர், பாலக்காடு என்று பல்வேறு இடங்களுக்கு மிரட்டி அழைத்துச்சென்று கொடுமைப்படுத்தியுள்ளார். ஆனால், எங்கும் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக மங்கலம் வந்து, குடோனில் அடைத்துவைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.

Sexual Abuse
Sexual Abuse

சுப்பிரமணியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். சுப்பிரமணி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், என் மகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிசெய்து பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.

எவிடென்ஸ் அமைப்பின் உண்மை கண்டறியும் குழு, இந்த சம்பவம் தொடர்பாக கள ஆய்வுசெய்துள்ளனர். இதுகுறித்து எவிடென்ஸ் கதிர், “குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை அவருக்கு, பிணை வழங்கக் கூடாது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நீடித்த மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் வழங்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.