Published:Updated:

கொரோனா காலத்திலும் குழந்தைகள் மீது அதிகரிக்கும் பாலியல் அத்துமீறல்கள்... அரசின் கவனத்துக்கு!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில், 35 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா ஊரடங்கு மத்தியிலும் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் குறையவில்லை என்பதுதான் மனதைப் பதறவைக்கின்றன.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையிலும்கூட, கடந்த ஒரு மாதத்தில் தேசிய அளவில், குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்த 4.6 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாக மத்திய அரசின் சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பு அதிரவைக்கிறது. அதில், 18,200 புகார்கள் குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் என்றும், 898 புகார்கள் குழந்தைத் திருமணங்கள் தொடர்பானவை எனவும், சமீபத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கூறியுள்ளார்.

பாதிக்கப்படும் குழந்தைகள்!

இதுகுறித்து திருச்சி வழக்கறிஞர் சூர்யா கூறுகையில், “கொரோனா ஊரடங்கில் மொத்த தேசமே முடங்கிக்கிடக்கிறது. இப்போதுகூட, பிஞ்சுக் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுல்லாமல், கடந்த ஒரு மாதத்தில், நேரடித் தொலைபேசி மற்றும் காவலன் செயலி மூலம் பெண்கள் பாதிப்பு குறித்த 2,963 புகார்கள் வந்துள்ளதாக தமிழகக் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. குடும்பத்தில் பெண்களுக்கு பாதிப்பு எனில் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். இது இப்படியெனில், ஊரடங்குக்குப் பிறகு பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரிக்கும் என எச்சரிக்கிறது யுனிசெப் நிறுவனம். அப்படி நடந்தால், குழந்தைகளின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகும்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரி படம்

இந்த ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் குறைந்தபாடில்லை. திருச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் நடந்துவருகின்றன. கோவையில், 9-ம் வகுப்பு மாணவி கர்ப்பமான விவகாரத்தில் சிக்கிய 10 பேரில் 7 பேர் பள்ளி மாணவர்கள். இவை வெளியில் தெரிந்தவை மட்டுமே. வெளியே தெரியாத பாலியல் அத்துமீறல்கள் ஏராளம். ஊரடங்கில், குழந்தைகளின் உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அரசு உறுதிசெய்யவில்லை. இதனால், சென்னை போன்ற பெருநகரங்களில்கூட, குழந்தைகள் உணவுக்காகக் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார் வேதனையுடன்.

அரசுக்கு அக்கறை இல்லையா..?

நம்மிடம் பேசிய குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிலர்,

“கொரோனா தடுப்புப் பணிகளில் சுகாதாரம், வருவாய்த் துறை மற்றும் காவல் துறை ஈடுபட்டாலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு சமூக நலத்துறைக்குத்தான் இருக்கிறது. ஆனால், அந்தத் துறை கொஞ்சம் விலகியே நிற்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் மூடப்பட்டன. அங்கிருந்த குழந்தைகளுக்கான உணவு, பாதுகாப்பு, மருத்துவம் வழங்குவது குறித்து அரசிடம் எந்தவித திட்டமிடலும் இல்லை.

குழந்தைகள்
குழந்தைகள்

இதுமட்டுல்லாமல், சென்னை கெல்லீஸில் இயங்கிவரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 5 பெண் குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது 35 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவியிருக்காது. மேலும், காப்பகங்களில் தங்கியிருந்த மற்ற குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இது இப்படியெனில், கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில், குழந்தைகள் காப்பகம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கும் முக்கியப் பொறுப்பான, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடம் தொடர்ந்து காலியாகவே உள்ளது.

இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் A3i கொரோனா வைரஸ்... தமிழகத்தின் நிலை என்னவாகும்? #ExpertOpinion

விலகி நிற்கும் சமூக நலத்துறை!

சில வருடங்களுக்கு முன்பு, அமைச்சர் சரோஜா, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக இருந்த பெண் அதிகாரியை மிரட்டும் ஆடியோ வெளியானது. அந்த விவகாரத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் பணியாற்றிய 16 குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். அதன்பிறகு, அந்த இடத்துக்கு யாரையும் நியமிக்கவில்லை. காவல் துறையிலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக மாவட்ட அளவில் ஏடிஎஸ்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்களும், ஊரடங்கு பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி நிற்கிறது” என்கிறார்கள் வேதனையுடன்.

டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்
டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்

இதுகுறித்து தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர், டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்திடம் கேட்டோம்.

“கொரோனா ஊரடங்கு காரணமாக, குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. அதனால், ஊரடங்கு காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கூடியுள்ளன எனக் கூறிவிட முடியாது.

ஆன்லைன் வகுப்பு குழந்தைகளின் உளவியலைப் பாதிக்கும்!

ஊரடங்கு காரணமாக குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், அவர்கள் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகக்கூடும். இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதால், அவர்களின் மனநிலை மேலும் பாதிக்கக்கூடும். குறிப்பாக பெற்றோர், குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அதிலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர், கூடுதல் கவனத்துடன் இருத்தல் அவசியம். அதுமட்டுமல்லாமல், பெற்றோர் தங்களின் கோபங்களை குழந்தைகள்மீது திணிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் 22 வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டுவருகிறோம்” என்றார்.

அசுத்தமான பொருள்களையோ  விலங்குகளையோ தொடுவதால் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு!

இறுதியாக, தமிழக சமூக நலத்துறைச் செயலாளர் மதுமதியிடம் பேசினோம். “கொரோனா பேரிடர் சூழலில், தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறோம். கொரோனா முடிந்தபிறகு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

குழந்தைகளின் நலனில் அரசு கூடுதல் கவனம் செலுத்துமா..?

அடுத்த கட்டுரைக்கு