Election bannerElection banner
Published:Updated:

ஹார்வி வெய்ன்ஸ்டீன்: நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 23 ஆண்டுகள் தண்டனை!-என்ன நடந்தது?

ஹார்வி
ஹார்வி ( Seth Wenig )

ஹார்வி மீதான புகார்களை மையமாகவைத்து, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா, ``பாலியல்ரீதியான தொந்தரவுக்கோ, தாக்குதலுக்கோ உள்ளான அனைத்துப் பெண்களும் `Me Too’ என்று பதிவிட்டால், இப்பிரச்னையின் அளவை மக்களுக்கு உணரவைக்கலாம்’’ என ட்வீட் செய்திருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் சார்பாக, அவரின் வழக்குரைஞர்கள் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். 69 வயதான பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி உட்பட பல்வேறு பெண்கள் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இந்தநிலையில், 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நியூயார்க்கில் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அந்தத் தீர்ப்பு குறித்துத்தான் தற்போது மேல்முறையீடு செய்ய ஹார்வி வெய்ன்ஸ்டீனின் தரப்பு முடிவு செய்துள்ளது.

ஹார்வி வெய்ன்ஸ்டீன்
ஹார்வி வெய்ன்ஸ்டீன்

யார் இந்த ஹார்வி வெய்ன்ஸ்டீன்?

ஹார்வி, ஹாலிவுட்டின் முடிசூடா மன்னன். அவர் நினைத்தால் அங்கு ஒரு கலைஞனை உருவாக்கி, உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைக்கவும் முடியும், பகைத்தால் அவனை உருக்குலைத்து ஓரங்கட்டவும் முடியும். திரையுலகின் மிக மரியாதைக்குரிய ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின்போது, 1966-லிருந்து 2016 வரை, கடவுளுக்கு நிகராக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 34 முறை விருது பெற்றவர்கள் நன்றி சொல்லியிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

இப்படி, ஹாலிவுட்டின் தயாரிப்பாளர்களில், தவிர்க்க முடியாத ஒரு ஜாம்பவான் ஹார்வி வெய்ன்ஸ்டீன். திரை உலகம் தாண்டி, அரசியலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கியமான ஆதரவாளர், கொடையாளர். ஆக, ஹார்விக்கு அரசியல் பலமும் உண்டு. அதுவும் அதீத பலம். எனவேதான் ஹார்வி, ஹாலிவுட்டின் கடவுளாகப் பார்க்கப்பட்டார். ஹார்வி, யாராலும் தொட முடியாத உயரத்திலிருந்தார். ஆனால், அது 2017-ம் ஆண்டு வரைதான். ஹார்வி மீது நடிகைகள் ரோஸ் மேக்கோவன், ஆஷ்லே ஜட் உட்பட பல பெண்கள், அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகப் புகார் எழுப்ப, அது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் விரிவாக வெளியானது. அமெரிக்கத் திரையுலகின் சர்வாதிகாரி ஹார்வி வெய்ன்ஸ்டீன் சரியத் தொடங்கியது அங்கேதான்.

அமெரிக்காவின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவு, துன்புறுத்தல், சீண்டல் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை அளித்தனர். ஹார்வி மீது புகார் தெரிவித்தவர்களில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மற்றும் ரோஸ் மெக்கோவன் உள்ளிட்ட திரை உச்சங்களும் அடங்குவர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த ஹார்வி, தன்மீது குற்றம்சாட்டியவர்களின் ஒப்புதலோடுதான் தான் உடலுறவு கொண்டதாகக் கூறினார்.

ஏஞ்சலினா ஜூலி, பால்ட்ரோ ஆகியோர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
ஏஞ்சலினா ஜூலி, பால்ட்ரோ ஆகியோர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஆனால், அவர் மீது எழுந்த அடுக்கடுக்கான புகார்களின் காரணமாக அவர் அங்கம்வகிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பதவிகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது தொடர்ந்து பல பாலியல் தாக்குதல் குற்றசாட்டுகள் வருவதால், அவரை ஆஸ்கர் குழுவிலிருந்து வெளியேற்ற 2017-ம் ஆண்டு ஆஸ்கருக்குப் பின்னணியிலிருந்து செயல்படும் அமைப்பு முடிவு செய்தது.

பதறவைத்த வாக்குமூலம்

ஹார்வி மீது தொடர் புகார்கள் எழுந்தாலும், நடிகை ஜெசிகா அளித்த சாட்சியம்தான் இந்தப் பிரச்னையின் வீரியத்தை உலகுக்கு உணர்த்தியது. ஒட்டுமொத்த உலகையும் பதறவைத்தது.

அவர் அளித்த சாட்சியத்தை அதே வரிகளில் தருகிறோம்... ``2012 இறுதியில் ஒரு பார்ட்டியில் தயாரிப்பாளர் ஹார்வியைச் சந்தித்தேன். திரைப்பட நாயகி ஆக வேண்டும் என்ற என் கனவை அவரிடம் பகிர்ந்தேன். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் என்னையும், ஒரு நண்பரையும் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு வரச் சொன்னார். நான் அந்த ஹோட்டல் அறைக்குச் சென்றதும், என்னைப் படுக்கையில் தள்ளி வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டார். என்னை வன்புணர்வு செய்து, என்மீது ஒரு முறை சிறுநீர் கழித்தார்” என்றார். இது சர்வதேச அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது.

ஹார்வி மீது குற்றம்சாட்டிய நடிகைகள்
ஹார்வி மீது குற்றம்சாட்டிய நடிகைகள்
theguardian.com

அமெரிக்காவில் `தி சோப்ரனோஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்த இத்தாலிய, அமெரிக்க நடிகையான ஆனபெல்லா ஸ்கியோராவும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டைச் சுமத்தினார். 1992-ல் நியூயார்க்கில் இருக்கும் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வலுக்கட்டாயமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தி நியூயார்க்கர் நாளிதழுக்கு நடிகை பேட்டி அளித்திருந்தார்.

வெய்ன்ஸ்டீன் குறித்து நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் என்னென்ன?

நியூயார்க்கில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அவற்றில் இரண்டு குற்றங்கள்தான் நிரூபிக்கப்பட்டன. 2006-ம் ஆண்டு தயாரிப்பு உதவியாளராக இருந்த மிரியம் ஹேலேவை பாலியல் வல்லுறவு செய்த குற்றமும், 2013-ம் ஆண்டு நடிகை ஜெசிகா மானை பாலியல் வல்லுறவு செய்த குற்றமும்தான் நிரூபிக்கப்பட்டன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பாலியல் வல்லுறவு குற்றத்தின் தீவிரம் எனக் கருத்தப்பட்டு, அவை வகைப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். அந்த வகையில் ஹார்விக்கு நீண்டகாலம் சிறைத் தண்டனை பெற்றுத்தரக்கூடிய வாய்ப்பு இருந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் அவருக்கு வெறும் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஹார்வி எதுவும் பேசவில்லை. ஆனால், தண்டனை வழங்கப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன் `மீ டூ’ இயக்கத்தால் தான் மிகுந்த குழப்பம் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்புக்கு பின் ஹேலே, தான் தாக்கப்பட்டது ``மனதளவில் என்னை நடுங்கவைத்துவிட்டது” எனத் தெரிவித்தார். ``பெண்ணாகவோ அல்லது மனுஷியாகவோ நான் எனது மதிப்பை இழக்கவில்லை. ஆனால், எனது தன்னம்பிக்கை சுக்குநூறாக உடைந்துவிட்டது’’ என்றும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது ஹார்வி தரப்பு வழக்கறிஞர்கள் வழங்கப்பட்ட தீர்ப்பில் பிழைகள் இருப்பதாக 166 பக்க மனு ஒன்றைத் தயார் செய்துள்ளனர். அதில் நீதிபதிகள் பாரபட்சமாக நடந்துகொண்டு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் என்றும் ஹார்வி தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹார்வி
ஹார்வி
Richard Drew

#MeToo இயக்கம்

இப்படியான சூழலில்தான் 2017-ம் ஆண்டு #MeToo இயக்கம் தொடங்கப்பட்டது. ஹார்வி மீதான புகார்களை மையமாகவைத்து, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா, ``பாலியல்ரீதியான தொந்தரவுக்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளான அனைத்துப் பெண்களும் `Me Too’ என்று பதிவிட்டால், இந்தப் பிரச்னையின் அளவை மக்களுக்கு உணரவைக்கலாம்" என ட்வீட் செய்திருந்தார்.அதைத் தொடர்ந்து கண்டங்கள் கடந்து, தேச எல்லைகள் தாண்டி பல்வேறு தரப்பினரும் #MeToo என்ற ஹேஷ்டேகுடன் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

- திலகவதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு