Published:Updated:

ஓராண்டுக்கும் மேல் கழிப்பறையில் அடைத்துவைக்கப்பட்ட பெண்; கணவர் கைது!- ஹரியானா அதிர்ச்சி

ஹரியானா அதிர்ச்சி
ஹரியானா அதிர்ச்சி

`நாங்கள் மீட்கும்போது அந்தப் பெண் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சுயநினைவற்று இருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த கழிப்பறை மிகவும் சிறியதாகவும், சுகாதாரமின்றியும் இருந்தது.’

ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்திலுள்ள ரிஷிபூரில் வசித்துவரும் நரேஷ்குமார் என்பவர், தன்னுடைய மனைவியை (வயது 35) கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தன் வீட்டுக் கழிப்பறையில் அடைத்து வைத்திருந்திருக்கிறார். இதையறிந்த மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் புதன்கிழமை அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்துவருகின்றனர்.

ஹரியானாவில் மீட்கப்பட்ட பெண்
ஹரியானாவில் மீட்கப்பட்ட பெண்
HT Photo

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி சுபாஷ், `சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு, அவருடைய கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தன் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதனாலேயே அவரைக் கழிப்பறையில் அடைத்துவைத்ததாகவும் அந்தப் பெண்ணின் கணவர் கூறுகிறார். இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து பானிபட் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர் ரஜினி குப்தா கூறுகையில், ``பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவலறிந்ததும், நாங்கள் குழுவாகச் சென்று அந்தப் பெண்ணை மீட்டோம். நாங்கள் மீட்கும்போது அந்தப் பெண் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சுயநினைவற்று இருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த கழிப்பறை மிகவும் சிறியதாகவும், சுகாதாரமின்றியும் இருந்தது. அந்தப் பெண்ணுக்குத் தேவையான உணவையும், நீரையும்கூட அவரது கணவர் நரேஷ்குமார் வழங்கவில்லை. அந்தப் பெண்ணால் நடக்கக்கூட இயலவில்லை. 17 வருடங்களுக்கு முன்னர் நரேஷ்குமாருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்’’ என்றார்.

`எனது மனைவி மனநிலை சரியில்லாதவர்; அதனாலேயே அடைத்துவைத்தேன்’ என நரேஷ்குமார் கூறுவதை ஏற்க முடியாது. அந்தப் பெண்ணை மீட்ட பிறகு, தனது குடும்ப உறுப்பினர்களை அவர் சரியாக அடையாளம் காட்டினார். நாங்கள் கேட்ட கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்தார்.
ரஜினி குப்தா - பானிபட் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்

மேலும், இவருக்கு மனநலம் பாதித்திருக்கிறது என்பதற்கான சான்று எதையும் அவரின் கணவர் நரேஷ்குமார் சமர்ப்பிக்கவில்லை என்றும் ரஜினி குப்தா குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான நரேஷ்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498A, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்றும், விசாரணை செய்துகொண்டிருப்பதாகவும் சனோலி காவல் நிலைய ஆய்வாளர் சுரேந்தர் டாஹியா தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு