Published:Updated:

சூதாட்ட விவகாரம்: 10 ஆண்டுகளாக மாமூல்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா வேலூர் போலீஸ்?

சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருப்பதால், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஏட்டு செல்வராஜைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த கௌராப்பேட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையினரின் துணையோடு சூதாட்டம் நடைபெறுவதாகப் புலம்புகிறார்கள், அந்தப் பகுதி மக்கள். திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் 23-ம் தேதியன்று இரவு, சூதாட்டம் விளையாடி 25 லட்சம் ரூபாயை வென்றார். அந்தப் பணத்துடன் காரில் ஊர் திரும்பிய அவரை வாணியம்பாடி அருகிலுள்ள வளையாம்பட்டு மேம்பாலத்தில் மடக்கிய ஆறு பேர் கும்பல், ரூ.11 லட்சத்தைப் பறித்துக்கொண்டு தப்பியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னரே, பேரணாம்பட்டில் நடைபெறும் சூதாட்ட விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது.

சூதாட்டம்
சூதாட்டம்

குடியாத்தம் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரரான பிரபாகரன் என்கிற இளையராஜா, அவரின் உறவினர் ஆறுமுகம் ஆகிய இருவரும்தான் சூதாட்டம் நடத்திவருவதாகவும் தெரியவந்திருக்கிறது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலுள்ள நபர்களும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பலர் சூதாட்டம் ஆட வருகிறார்கள். மாலை 3 மணிக்குத் தொடங்கும் சூதாட்டம் 6:30 மணிக்கெல்லாம் முடிந்துவிடுகிறது. நாளொன்றுக்கு நான்கு கோடி ரூபாய் வரை பணம் புரளுகிறது. பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுவதால், இங்கு வரும் நபர்கள் உரிமம் பெறாத கைத்துப்பாக்கிகளையும் வைத்திருக்கிறார்கள். சூதாட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் ஐம்பத்துக்கும் மேற்பட்ட அடியாட்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூதாட்டம் நடைபெறுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக வாரந்தோறும் லட்சக்கணக்கான ரூபாயை, பேரணாம்பட்டு காவல்துறையினர் மாமூலாக வாங்கியிருப்பதும், உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றிருக்கிற. முதல்நிலைக் காவலர் தொடங்கி இரண்டாம் நிலைக் காவலர், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் வரை தகுதிக்கேற்ப மாமூல் பணம் பங்கிடப்பட்டிருக்கும் தகவலும் வெளியானது. இதையடுத்து, பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசனையும், தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜியையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார், வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார். ஆனாலும், காவல்துறை மீதான சர்ச்சை ஓயவில்லை. பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சூதாட்ட விவகாரத்தில், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு செல்வராஜ்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு செல்வராஜ்

இதனால், பிரச்னையின் வீரியத்தைக் குறைக்க ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி செல்வகுமார். அதேநேரம், இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியாக, கடுமையான நடவடிக்கை எதுவும் பாயவில்லை.

தனி ராஜ்ஜியம் செய்யும் தனிப்பிரிவு?!

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணியமர்த்தப்பட்டிருக்கும் தனிப்பிரிவு காவலர்கள், அந்தந்த மாவட்ட எஸ்.பி-யின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பவர்கள். இவர்கள் காக்கி உடை அணியாமல் பணியாற்றுவார்கள். மரம் முறிந்து விழுவது முதல் சட்ட விரோதச் செயல்கள் வரை அனைத்துச் சம்பவங்களின் ஃபைனல் ரிப்போர்ட்டையும் எஸ்.பி-யிடம் சமர்பிப்பதுதான் இவர்களது பணி. தனிப்பிரிவில் இருப்பவர்களை மற்ற பிரிவு அதிகாரிகள்கூட பகைத்துக்கொள்ள மாட்டார்கள். குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து என அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றும் காவலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை காவல் நிலைய மாறுதலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாவட்ட மாறுதலும் செய்யப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில், சூதாட்ட விவகாரம் பூதாகரமாக வெடிக்க, வேலூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த அசோகன், பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, தனிப்பிரிவிலுள்ள 14 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 22 போலீஸாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், பேரணாம்பட்டு தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ் மட்டும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக, பேரணாம்பட்டிலேயே பணிபுரிந்துவந்த ஏட்டு செல்வராஜ் சூதாட்டம், சாராய கும்பல்களுடன் நட்பு பாராட்டிவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வேலூர் எஸ்.பி செல்வகுமார்
வேலூர் எஸ்.பி செல்வகுமார்

எஸ்.பி-க்கு இதுவரை சூதாட்டம் குறித்த எந்ததொரு ரிப்போர்ட்டையும் கொடுக்காமல், குற்றத்துக்குத் துணை போயிருப்பதால், ஏட்டு செல்வராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறது, எஸ்.பி அலுவலக தரப்பு. அதேபோல், சூதாட்ட கும்பலுடன் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் நெருக்கம் காட்டியதாகப் புகார் பறக்கிறது. அது தொடர்பாகவும், உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இவ்வளவு சர்ச்சைகளுக்கும் காரணமான, பேரணாம்பட்டு சூதாட்ட கும்பல் கூண்டோடு தலைமறைவாகியிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில், சூதாட்ட கும்பலிடமிருந்து மாமூல் பணத்தை வாங்கி போலீஸாரிடம் கொடுத்துவந்தது, அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர் எனச் சொல்லப்படுகிறது.

அதேபோல், வேலூர் மாநகரத்திலுள்ள காகிதப்பட்டறை, டோல்கேட் உட்பட பல்வேறு இடங்களிலும் சூதாட்ட கிளப்புகள் இயங்கிவருவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட காவல்துறை என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த விவகாரம் குறித்து வேலூர் எஸ்.பி செல்குமாரிடம் கேட்டபோது, ``10 ஆண்டுகளாக நடைபெறுவதாகத் தெரியவில்லை. எப்போதாவதுதான் நடப்பதாகக் தெரிய வந்திருக்கிறது. அது, ரிமோட் ஏரியா. இன்டீரியர் பிளேஸ். இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ணுறதுதான் தனிப்பிரிவு வேலை. அதைச் சரியாக செய்யாததுனால தனிப்பிரிவு ஏட்டுவைச் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். இருந்தாலும், சூதாட்டத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு