Published:Updated:

`கோயிலுக்கு 12 பூட்டு; பட்டியலின மக்களின் திருமணத்தை நடத்த எதிர்ப்பு!’ - அரியலூரில் அதிர்ச்சி

பட்டியலின மக்கள்  திருமணம் செய்திட எதிர்ப்பு தெரிவித்த மாற்று சமூகத்தினர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயிலுக்குப் `பூட்டு' போட்ட சம்பவம் அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரங்கேறியுள்ளது.

பூட்டு போடப்பட்ட கோயில்
பூட்டு போடப்பட்ட கோயில்

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்துள்ளது நமக்குணம். இந்த ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மற்றும் செல்வி ஆகியோரின் மகன் அருண் ஸ்டாலினுக்கும் செந்துறையை அடுத்துள்ள மணக்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் திவ்யாவுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கோயிலுக்குப் பூட்டு
கோயிலுக்குப் பூட்டு

அதைத்தொடர்ந்து, மணமகன் அருண் ஸ்டாலினின் பக்கத்து ஊரான சொக்கநாதபுரம் சீனிவாச பெருமாள் கோயிலில் திருமணத்தை நடத்திட இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

சுற்றுவட்டார கிராம மக்கள் திருமணம் செய்யும், அந்தக் கோயில் அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. அதனால், கோயில் நிர்வாகத்தில் முறைப்படி பணம் செலுத்தி ரசீது வாங்கிய அருண் ஸ்டாலின், திருமணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார்.

`கோயிலுக்கு 12 பூட்டு; பட்டியலின மக்களின் திருமணத்தை நடத்த எதிர்ப்பு!’ - அரியலூரில் அதிர்ச்சி

கடந்த 10-ம் தேதி காலை 11மணிக்குத் திருமணம். முதல்நாள் இரவு பெண் அழைப்பு முடிந்து, மறுநாள் காலை மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரின் உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள நமங்குணம் வந்தனர்.

அங்கிருந்து மேளதாளம் முழங்க மணமக்கள் சொக்கநாதபுரம் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். அப்போதுதான், கோயில் கதவு 12 பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

காதலுக்குத் தடையா இருந்த சாதி; உயிரை மாய்த்த நர்ஸ்!- சென்னையில் சோகம்

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் செந்துறை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த செந்துறை காவல் ஆய்வாளர் ராஜ்குமார், வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

உறவினர்கள்
உறவினர்கள்

விசாரணையில், ``இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பட்டியலின சமூகத்தினர் திருமணம் செய்வதற்கு, அப்பகுதியில் வாழும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், அதை மீறி திருமணங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பக்கத்து ஊர்க்காரர்கள் கோயிலில் திருமணம் செய்யக் கூடாது என பிரச்னை செய்தனர். அதையடுத்தே, பக்கத்து ஊரான அருண் ஸ்டாலின் திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட்டு இரவோடு இரவாக, கோயிலை யாரும் திறக்கக்கூடாது என 12 பூட்டுகள் போட்டது தெரியவந்தது.

திருமணத்தின் போது
திருமணத்தின் போது

தொடர் விசாரணையில் போலீஸாரிடம், ``இது எங்கள் மூதாதையர் கட்டிய கோயில். எங்கள் பகுதியில் உள்ள கோயிலில், அவர்கள் திருமணம் செய்வதை எப்படி அனுமதிக்க முடியும்” என மாற்றுச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாற்றுச் சமூகத்தினர் 5 சாவிகளை மட்டுமே கொடுத்தனர். மீதம் உள்ள சாவிகள் தங்களிடம் இல்லையெனக் கைவிரித்தனர். அதையடுத்து போலீஸார், சாவியில்லாத பூட்டுகளை உடைத்து கோயிலைத் திறந்தனர். ஒருவழியாக 2 மணியளவில் அருண் ஸ்டாலின் மற்றும் திவ்யா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.

நம்மிடம் பேசிய அருண் ஸ்டாலினின் வழக்கறிஞர் சசிக்குமார், ``அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் இது. இங்கு திருமண வயதுடைய யார் வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். உள்ளூர்க்காரர்கள், இந்தச் சமூகத்தினர்தான் திருமணம் செய்யணும் எனத் தடைபோட முடியாது. அதுமட்டுமல்லாமல், அருண் ஸ்டாலின் திருமணத்துக்காக ஒரு வாரத்துக்கு முன்பாகவே பணம் செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.

இப்படியிருக்க, திருமணத்தைத் தடுக்கத் திட்டமிட்ட சிலர், கோயிலுக்குப் பூட்டுப்போட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் திரண்டிருந்தார்கள். முன்னெச்சரிக்கையோடு, அதிகாரிகளுக்குத் தகவல்கொடுத்து, இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை உடைத்து திருமணம் நடத்தினோம்.

வழக்கறிஞர் சசிக்குமார்
வழக்கறிஞர் சசிக்குமார்

இதில் கொஞ்சம் மாறியிருந்தாலும் சாதிய மோதலுக்கு வழிவகுத்து இருக்கும். ஏற்கெனவே பொன்பரப்பி போன்ற ஊர்களில் நடந்த சம்பவங்களிலிருந்து செந்துறை பகுதி மெல்ல அமைதி திரும்புகிறது. இந்நிலையில், பட்டியலின திருமணம் நடத்திட எதிர்ப்பு தெரிவித்து பூட்டுப் போட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராதவகையில், கோயிலுக்குப் பூட்டு போட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றார்.

தப்பிக்க, பெண் வேடம்; அடித்துக் கொன்றதாக உறவினர்கள் கண்ணீர்! - சர்ச்சையில் அரியலூர் போலீஸ்

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மணமக்கள்
மணமக்கள்

சில வருடங்களுக்கு முன்பு, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் அய்யனார், வீரனார், முனியப்பர் சுவாமி கோயிலில், பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் பூட்டுப் போட்டனர். 144 தடை உத்தரவு என அப்போது அந்தப் பகுதியே பரபரப்பானது. இந்நிலையில், மீண்டும் ஒரு கோயிலுக்கு பூட்டுப் போடப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.