Published:Updated:

` `மொட்டைமாடி' டெக்னிக்; லட்ச லட்சமாக சம்பாத்தியம்' - 55 வீடுகளில் திருடிய ஹாக்கி வீரர் மைக்கேல்!

மலையரசு

சென்னையில் 55 வீடுகளில் திருடிய மைக்கேல் ஹாக்கிவீரர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல்
மைக்கேல்

சென்னை கே.கே.நகரில் கடந்த ஜனவரி மாதம் ஒரு வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் சிசிடிவி-யை ஆய்வு செய்தபோது கொள்ளையடித்தது பிரபல திருடன் ஆரிப்பிளிப்ஸ் மைக்கேல் எனத் தெரியவந்தது. ஒரே ஒரு சிசிடிவி-யில் மட்டுமே அவனது உருவம் தெரிந்தது. அவன் எப்படி வீட்டுக்குள் வருகிறான் கொள்ளையடித்தபின் எப்படி வெளியே செல்கிறான் என்ற விவரங்கள் எதுவும் இல்லை. அதேநேரம் போலீஸாரின் பிடியில் டிமிக்கி கொடுத்துவந்துள்ளான். இதற்கிடையே, கடந்த 3-ம் தேதி அன்று மயிலாப்பூரில் மோகன் என்பவரது கடையில் ரூ.1.80 லட்சமும், தங்க நகைகளும் களவு போயின.

கொள்ளை
கொள்ளை

இந்தத் திருட்டு தொடர்பாக இன்ஸ்பெக்டர் செந்தில் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் கொள்ளையில் கிடைத்த கைரேகைகள் மைக்கேலுடையது எனத் தெரியவரவே தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் போலீஸார். இறுதியில் சென்னை சென்ட்ரல் பகுதியில் சுற்றித்திரிந்த மைக்கேலை சுற்றிவளைத்துப் பிடித்தனர். பிடிபட்ட மைக்கேலிடம் இருந்து பணம், நகைகளைக் கைப்பற்றினர். போலீஸிடம் சிக்கிய மைக்கேல் திருட்டுத் தொழிலுக்கு வந்தது எப்படி? பிரபல திருடனாக மாறியது எப்படி என முழு ஹிஸ்டரியையும் சொல்லியுள்ளான்.

``வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என் சொந்த ஊர். இளம் வயதில் சென்னையில் உள்ள கல்லூரியில்தான் டிகிரி படித்தேன். பள்ளியில் படிக்கும்போதே ஹாக்கி விளையாட்டு பிடிக்கும். பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். கல்லூரியில் சேர்ந்த பிறகும் ஹாக்கி போட்டிகளில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டேன். ஒரு பெரிய ஹாக்கி வீரராக வர வேண்டும் என்பதே ஆசை. ஆனால், கல்லூரி படிப்பு முடிந்ததும் என் வாழ்க்கை திசை மாறியது. வேலை கிடைக்காமல் என் வாழ்க்கை மொத்தமாக மாறியது. இந்த நேரத்தில் எனக்குத் திருமணமும் ஆனது.

மைக்கேல்
மைக்கேல்

எனக்கு இரண்டு மனைவிகள். இரண்டு கல்யாணம் செய்த என்னால் அவர்களோடு குடும்பம் நடத்த போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால்தான் சின்னச் சின்னதாக திருட ஆரம்பித்த நான் அதில் கிடைத்த பணத்தால் திருடுவதையே தொழிலாக மாற்றிக்கொண்டேன். திருட்டால் லட்ச லட்சமாக சம்பாதித்தேன். வாழ்க்கையும் சந்தோஷமாக சென்றுகொண்டிருந்தது. ஒரு மனைவியை திருப்பத்தூரிலும், இன்னொரு மனைவியை சென்னையிலும் வைத்து குடித்தனம் நடத்திவந்தேன். 1994-ம் ஆண்டில் இருந்து இந்தத் தொழிலை செய்துவருகிறேன்" என்று கூறியுள்ளார்.

மொட்டைமாடி டெக்னிக்!

சிசிடிவி காட்சிகளில் சிக்காமல் திருடுவதில் கில்லாடியான மைக்கேல் இதுவரை 55 வீடுகளில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். விசாரணையில், `சிசிடிவி-யில் சிக்காமல் எப்படி திருடுகிறாய்?' என்ற கேள்வியையும் போலீஸார் நைசாக கேட்டுள்ளனர். முதலில் சொல்ல மறுத்தவன், பின்பு தனது தொழில் ரகசியத்தைச் சொல்லியுள்ளான். ``திருடுவதற்கு என சிறப்பு பயிற்சி எடுத்துள்ளேன். எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் அசால்டாக திறந்துவிடுவேன். சென்னையில் இப்போது எங்கு பார்த்தாலும் சிசிடிவி மயமாகிவிட்டது. இதனால் கொள்ளையடிக்கும்போது கேமராவில் சிக்கினால் போலீஸிடம் மாட்டிக்கொள்வேன் எனத் தெரியும்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு
கொள்ளையடிக்கப்பட்ட வீடு

இதனால் கொள்ளையடிக்கும் வீட்டை இரண்டு நாள்களுக்கு முன்பே தேர்வுசெய்து அங்குள்ள வழிகளை நோட் செய்துகொள்வேன். நள்ளிரவுதான் எனக்கு தகுந்த நேரம். நள்ளிரவு நேரம் கொள்ளையடிக்கச் செல்லும்போது நேரடியாக அந்த வீட்டுக்குள் நுழையவே மாட்டேன். கொள்ளையடிக்கும் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வேறுஒரு வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்று, அங்கிருந்து மொட்டைமாடி வழியாகவே நான் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன். அப்படிதான் இப்போதும் சென்றேன். ஆனால், கைரேகையால் சிக்கிக்கொண்டேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.