Published:Updated:

கோவை மாணவி தற்கொலையும், சமூக அவலமும் - மாறவேண்டியது யார்? மாற்றியமைக்கப்பட வேண்டியது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவை மாணவி தற்கொலையும், சமூக அவலமும்
கோவை மாணவி தற்கொலையும், சமூக அவலமும்

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், வழமையாகிக்கொண்டிருக்கும் குற்றங்களுக்கு என்ன காரணம்? இந்த சமூக அவலம் எப்போது தீரும்? மாறவேண்டியது யார்? மாற்றியமைக்கப்பட வேண்டியது என்ன? என்பதைப் பற்றி புதிய கண்ணோட்டத்தில், புதிய வழிமுறைகளை வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களின் குரல்களைக் கேட்போம்.

பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய, பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவையில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிப்போட்டது. இதேபோன்று பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் எதிரான கொடூர குற்றங்கள் நம் நாட்டில் நாளுக்குநாள், நிமிடத்திற்கு நிமிடம் எங்காவது ஒருமூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. #JusticeFor---- என்ற #ஹேஷ்டேக்கின் பின்னோட்டில் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு பெண்குழந்தையின் பெயர் இடம்பெற்று, இணையவெளிகளிலும் பொதுத்தளங்களிலும் நீதி கேட்கும் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், வழமையாகிக்கொண்டிருக்கும் குற்றங்களுக்கு என்னதான் காரணம்? இந்த சமூக அவலம் எப்போதுதான் தீரும்? மாறவேண்டியது யார்? மாற்றியமைக்கப்பட வேண்டியது என்ன? என்பதைப் பற்றி புதிய கண்ணோட்டத்தில், புதிய வழிமுறைகளை வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களின் குரல்களைக் கேட்போம்.

`உளவியல் சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும்!’

கோவை பாரதியார் பல்கலைக்கழக முனைவர் பட்டப்படிப்பு மாணவி, திவ்யபாரதி:

``கோவை மாணவி தனது ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை பலவித கோணத்தில் ஒவ்வொருவரும் அணுகுகிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், குற்றவாளிகளுக்கு உடனடி மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே பிரதான பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் குற்றம் நடந்த பின்னர் அதற்கான தண்டனைகளாக இருக்குமே தவிர, குற்றம் நடப்பதற்கு முன்பாக, குற்றம் நிகழ்வதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இல்லை. வெகுசிலர், பெண் குழந்தைகளின் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும், பள்ளி சீருடை திருத்தம் வேண்டும், பாலியல் கல்வி கொடுக்க வேண்டும் எனவும் பொதுப்படையாக கூறிவருகிறார்கள்.

திவ்யபாரதி
திவ்யபாரதி

இந்த பொதுக்கருத்துக்கள் பெண் குழந்தைகள்/பெண்கள் மீதான தீவிர பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி மறுபடியும் வீட்டிற்குள் பூட்டிவைக்கும் சிந்தனைக்கு தள்ளிவிடும். அல்லது ஒருவரின் கண்களைக் கட்டிவிட்டு "பார்த்து போகவும், பார்த்து போகவும் " என்று கூறிடும் அர்த்தமற்ற வார்த்தையாக மட்டுமே இருந்துவிடும்.

ஆனால், பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான மூலக்காரணங்கள், நிகழ்த்தும் குற்றவாளிகளின் எண்ணவோட்டங்கள், புறநிலை, அகநிலை, சூழ்நிலைக்காரணிகள் பற்றி உளவியல் ரீதியில் யாரும் அணுகுவதில்லை. அதனடிப்படையில் தீர்வுகாணவும் முயல்வதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. உதாரணமாக, ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை அவர்கள் தனது அடுத்த சந்ததிக்கான ஆபத்து என்று கருதுகிறார்கள். குற்றத்துக்கான வேர்க்காரணிகளை கண்டறிந்து, அவற்றை கவனமாக கையாளுவதால் ஒப்பீட்டளவில் அங்கு பாலியல் குற்றங்கள் குறைவாக நிகழ்கிறது. ஆனால், இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெண்கள் சார்ந்த எண்ணத்திலும், கலாசாரம் சார்ந்த அணுகுமுறையாலுமே கையாளப்பட்டு வருகிறது. எனவேதான் நாம் தோல்வி அடைந்து கொண்டே வருகிறோம்.

திவ்யபாரதி
திவ்யபாரதி

பாலியல் செய்கை என்பது இனப்பெருக்கத்திற்கான (Reproduction) ஒரு கருவியாக மட்டுமே இல்லாமல் உளவியல் ரீதியான அதீத மகிழ்வுணர்வாக (Pleasurable Activity) பரிணாமம் அடைந்து விட்டது. ஒரு அதீத ஆதிக்க மனநிலையை நிலைநாட்டவும் ஒருவர் பெண்குழந்தைகளிடம் வன்கொடுமை இழைக்கிறார்கள் என்ற உளவியல் சிக்கலையும் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற, செயல்களால் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்க, இவற்றை செய்யும் "Habitual sex Offenders and Sexual predators"-களை இனம் காண வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள், குணக்கோளாறுகளை சமூக உளவியல் (social psychology) கோட்பாடுகள் அடிப்படையில் உளவியல் நிபுணர்களைக்கொண்டு ஆய்வுசெய்யவேண்டும். தரவுகளை சேகரித்து அதனடிப்படையில், மக்களுக்கு அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடரும் பாலியல் குற்றங்களை, அரசாங்கத்தின் தனது தீர்வு நோக்கிய அணுகுமுறைகளால்தான் படிப்படியாக தடுக்க முடியும்"

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பெற்றோர்கள் குழந்தைகளின் நண்பர்களாக இருக்க வேண்டும்!’

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப்போராடும் சமூக செயற்பாட்டாளர், பிரியா மனோகரன்:

``போக்சோ' போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் நடக்க காரணம் என்ன என்று ஆராயும் போது, நம் சமூக குடும்ப அமைப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய சூழலில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருக்க வேண்டும். குழந்தைகள் தங்களிடம் எதையும் மனம்விட்டு பேசக்கூடிய ஒரு ஸ்பேஸை உருவாக்கித்தர கொடுக்கவேண்டும். பயம், பதட்டம் இல்லாமல் வெளிப்படையாக அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் தைரியமிக்கவர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

பிரியா மனோகரன்
பிரியா மனோகரன்

அதேபோல, இந்திய குடும்ப கட்டமைப்பில் இருக்கும் பெற்றோர்கள் பெரும்பாலும், தங்களின் குடும்ப மானம், மரியாதை போன்றவற்றை பெண்களை சார்ந்தே வைத்திருக்கிறார்கள். அதுவே பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளியில் சொல்லவிடாமல் தடுக்கிறது. தன்னால் குடும்ப மானம் போய்விடும் என்று பயந்து உளவியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். இது தவறு செய்பவர்களுக்கு சாதகமாகப் போய்விடுகிறது. இதுபோன்ற பிற்போக்குத்தனங்கள் முதலில் சமூக அமைப்பிலிருந்து களையப்பட வேண்டும். பெண் உடல் புனிதம் என்ற கட்டமைப்பு எல்லாம் கடந்து உடலை பற்றிய புரிதலையும் தெளிவையும் ஏற்படுத்த வேண்டும்.

“இது தற்கொலை அல்ல... நிர்வாக கொலை!” - ‘சின்மயா’ மாணவி மரணம்... கொந்தளிக்கும் கோவை

இனிவரும் காலங்களிலாவது, பள்ளிகளில் "பாலியல் கல்வி திட்டங்களை "அமல்படுத்த வேண்டும். அரசு சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். அந்த குழு நம்பிக்கைத்தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதன்மூலமே, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்துநிறுத்த முடியும்."

`ஆண்மை, பெண்மை கற்பிதங்களை ஒழிக்க வேண்டும்!’

பெண்ணியச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான நிர்மலா கொற்றவை:

``பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதை தடுக்க ஆண்மை, பெண்மையை ஒழிக்க வேண்டும். அதிர்ச்சி கொள்ள வேண்டாம். ஆண், பெண், மாற்றுப் பாலினம் என்பது உயிரியல் அடையாளம். ஆனால் ஆண்மை பெண்மை என்பது சமூகம் வகுத்திருக்கும் நடத்தை விதிகள். இதன் விளைவாக பெண்கள் பெண்மைக்குள், வீட்டிற்குள் முடக்கப்பட்டு பலவீனமாக்கப்பட்டுவிட்டார்கள். ஆணைச் சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். இதனால் ஆணே உயர்ந்தவன், பெண்ணை காப்பவன், பெண் அவனுக்கு சேவை செய்ய பிறந்தவள் என்றும், ஆணின் வேட்கையை தீர்க்க வேண்டியவள் என்னும் எழுதா விதியும் நிலைபெற்று விட்டது.

நிர்மலா கொற்றவை
நிர்மலா கொற்றவை

தனிச் சொத்து சேர்க்கும் குடும்ப அமைப்பின் விளைவு இது. ஆண் பெண் குழந்தை வளர்ப்பு தொடங்கி சமூகத்தில் உழைப்பாளியாக இருப்பது வரை ஆண் பெண் இடையே நிலவும் பிரிவினையை ஒழிக்க வேண்டும். பாலின சமத்துவம் பற்றிய கல்வி, பிரசாரங்கள் உடனடி தேவை. ஊடகங்களில் பெண் சித்தரிப்பை நெறிப்படுத்த வேண்டும். பெண் பற்றிய கருத்தியல்களை மாற்றாமல் பெண்களுக்கெதிரான குற்றங்களை வெறும் சட்டங்கள், கடுமையான தண்டனைகள், மரண தண்டனை மூலமெல்லாம் தடுக்க இயலாது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு