Published:Updated:

வேலை தொடங்கி காதல் வரை... பெருகும் சைபர் க்ரைம்!

சைபர் க்ரைம்
பிரீமியம் ஸ்டோரி
News
சைபர் க்ரைம்

பாதுகாத்துக் கொள்வது எப்படி?

படம்: என்.கார்த்திக்

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஜோஸின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக வெளியாகி யிருக்கும் தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹேக் செய்தது சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான்தான் என்று குற்றச்சாட்டு நிலவுவதால், இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.நா உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரரான ஜெஃப் பெஜோஸுக்கே இந்த நிலைமை என்றால், சாமானியர்கள் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

ஆன்லைனில் பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து தப்பிக்க மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும், சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவின் துணை ஆணையர் நாகஜோதியிடம் பேசினோம்.

‘‘ஆன்லைன் பணப்பரிவர்த்தனை எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ அந்தளவுக்கு மோசடிகளும் பெருகியுள்ளன. ‘உங்களுக்கான ஸ்பெஷல் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது’, ‘உங்கள் ஏ.டி.எம் கார்டு பிளாக்காகப்போகிறது’ - இப்படி உங்களைத் தூண்டும் வகையிலோ பதற்றத்துக்குள்ளாக்கும் வகையிலோ சம்பந்தமே இல்லாமல் குறுந்தகவல்கள் அல்லது போன்கால்கள் வந்தாலோ பொதுமக்கள் ஏமாந்துவிடக் கூடாது.

நாகஜோதி
நாகஜோதி

இன்னும் சில மோசடி கும்பல்கள், பெரிய வங்கிகள் அல்லது நிறுவனங்களின் பெயர்களில் கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப் பட்டிருப்பதாக குறுந் தகவல்கள் அனுப்பும். அப்படி அனுப்பப்படும் லிங்க்கை ஆர்வக்கோளாறில் டச் செய்துவிட்டோமெனில், போலி வெப்சைட்டுகள் ஓப்பன் ஆகும். அதில்

ஏ.டி.எம் கார்டு விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அடுத்த சில நிமிடங்களிலேயே உங்கள் வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் மொத்தமும் காணாமல்போய்விடும். ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டு டைப் செய்ய அலுத்துக்கொண்டு, சிலர் தங்களது பாஸ்வேர்டை ‘சேவ்’ செய்து வைக்கின்றனர். அதுவும் ஆபத்து. தவறான லிங்க் அனுப்பி உங்களது போனை ஹேக் செய்துவிட்டார்கள் என்றால், உங்கள் பணப்பரிவர்த்தனை தொடர்பான பாஸ்வேர்டுகளை எளிதில் எடுத்துவிடுவார்கள்.

வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 15 பேரை சமீபத்தில் கைதுசெய்தோம். வங்கியில் கடன் பெற வேண்டுமானால் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டியிருக்குமல்லவா? ஆனால், இந்த மோசடிப் பேர்வழிகள் `எந்தவித ஆவணமும் இல்லாமல் கடன் வாங்கித் தருகிறோம்’ என்பார்கள். `உங்களுக்கு கடன் கிடைத்துவிடும். உங்களது வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் 10,000 ரூபாய் வைத்திருங்கள்’ என்பார்கள். அதன் பிறகு லாகவமாக உங்கள் வங்கிக்கணக்கின் விவரங்களை வாங்கும் அவர்கள் உங்கள் பணத்தைச் சுருட்டிவிடுவார்கள்” என்றவரிடம்,

‘‘வேலை வாங்கித் தருவதாகக்கூட ஆன்லைனில் மோசடி நடக்கிறதே?’’ என்று கேட்டோம்.

ஜெஃப் பெஜோஸ் - முகமது பின் சல்மான்
ஜெஃப் பெஜோஸ் - முகமது பின் சல்மான்

‘‘இப்போதெல்லாம் இளைஞர்கள் பல வெப்சைட்டு களில் வேலைக்காகப் பதிவு செய்கின்றனர். அந்த வெப்சைட்டுகளிலிருந்து மொபைல் நம்பர்களை எடுக்கும் மோசடி பேர்வழிகள், ‘வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறோம். வாட்ஸப்பிலேயே இன்டெர்வியூ’ என நம்பவைத்து சில லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, எஸ்கேப் ஆகிவிடுவார்கள். வேலை வாங்கித் தருவதாக மட்டுமல்ல, சமூக வலைதளங் களில் காதல் வலை வீசி மோசடி செய்யும் கும்பலும் நிறைய இருக்கின்றன. நம்பிக்கையாகப் பேசி, உயிருக்கு உயிராகப் பழகுவதுபோல் நடித்து ஒருகட்டத்தில் ‘கடும் ஆபத்தில் சிக்கியிருக்கிறேன், அம்மாவுக்கு ஆபரேஷன்...’ போன்ற விதவிதமான காரணங்களைச் சொல்லி பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகும் மோசடி பேர்வழிகளும் இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களால் பணத்தை இழப்பதுடன், கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடும்.

இப்படியான கும்பல்கள் மோசடி செய்த தொகையை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றிக்கொண்டே இருப்பதால், இவர்களின் பணப்பரிவர்த்தனையை கண்காணிப்பதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆன்லைன் மூலமாக வங்கி மோசடி நடைபெற்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்புகொண்டு வங்கி அட்டையை பிளாக் செய்ய வேண்டும். 24 மணி நேரத்துக்குள் போலீஸில் புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்டெடுப்பதற்கு சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் வழிகாட்டுதலில், சைபர் குற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்டுள்ளோம். துண்டுப் பிரசுரங்களையும் அளிக்கிறோம். சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் எங்கள் ஸ்டாலும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக உள்ளது. சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து இருபுறமும் பார்த்து எப்படி பாதுகாப்புடன் செல்கிறோமோ, அதைப் போலத்தான் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை யையும் பாதுகாப்புடன் கையாள வேண்டும்” என்றார்

கண்ணுக்குத் தெரியாத எதிரி, கைவிரல் நுனியில் காத்திருக்கிறான்... ஜாக்கிரதை!