Published:Updated:

ஜோலார்பேட்டை: தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்! - மனமுடைந்த கர்ப்பிணியின் விபரீத முடிவு

தூக்கு
தூக்கு

கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால், மனமுடைந்த ஏழு மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலுள்ள ஜெயமாதா நகரைச் சேர்ந்தவர் திலீபன், பெயிண்டர் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி காவியா (வயது 21). இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் தன்சிகா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். தற்சமயம், காவியா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், திலீபன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த திலீபன் மனைவியிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் அக்கம், பக்கத்தினர் விவரிக்கிறார்கள்.

ஜோலார்பேட்டை காவல் நிலையம்
ஜோலார்பேட்டை காவல் நிலையம்

அன்றிரவு 10.30 மணி இருக்கும். தன் குழந்தையைப் பக்கத்து வீட்டுக்குத் தூக்கிச்சென்ற திலீபன், அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு உறவினர்களுக்குப் போன் செய்துள்ளார். பதற்றம் ஏதுமின்றி தன் மனைவி காவியா தூக்குப்போட்டுக் கொண்டதாகப் போனில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதைக்கேட்ட அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து திலீபனைப் பிடித்து வைத்துக்கொண்டு ஜோலார்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஏழு மாத கர்ப்பிணியான காவியா தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மருமகனே அடித்துக் கொன்றிருக்கலாம் எனவும் காவியாவின் தந்தை ராஜ்குமார், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

காவியா
காவியா

இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், திலீபனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை அதிகாரியான ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமியிடம் கேட்டபோது, ‘‘மரணமடைந்த காவியாவுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது. உடற்கூறாய்வின்போது, நானும் அருகிலிருந்தேன். அடித்து கொலை செய்திருப்பதற்கான காயங்கள் உடலில் ஏதுமில்லை. தாமாகவே தூக்கில் தொங்கியிருக்கிறார் என்றே பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள். தற்சமயம் வரை அந்தப் பெண்ணின் கணவன் திலீபனை விசாரணையில்தான் வைத்திருக்கிறோம். ஆர்.டி.ஓ அறிக்கையின் அடிப்படையில், அவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு