Published:Updated:

`அவளுக்கு நல்லநேரம்.. எனக்குக் கெட்டநேரம்!' -மனைவியைக் கொல்ல கூலிப்படையை அமர்த்திய கணவன்

சந்தோஷ்
சந்தோஷ்

தவறான நட்புக்கு இடையூறாக இருந்த மனைவியைக் கூலிப்படையை ஏவி கணவனே கொலை செய்ய முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை அடுத்த அம்மாபாளையம் காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (30), கார்பெண்டர். இவரும் ஜெயந்தி (27) என்பவரும் காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி, பைக்கில் மனைவியை அழைத்துக்கொண்டு ஆரணிக்குச் சென்ற சந்தோஷ் அன்றிரவு 8 மணிக்கு ஊர் திரும்பினார். அம்மாபாளையம் ஏரிக்கரை அருகே வந்தபோது, பைக்கை திடீரென மறித்த இரண்டு மர்ம நபர்கள் ஜெயந்தியின் முகத்தில் மட்டும் மிளகாய்ப் பொடியை தூவி கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

கைதுசெய்யப்பட்ட 3 பேர்
கைதுசெய்யப்பட்ட 3 பேர்

இதனால் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில், கண்ணமங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பைக்கை மறித்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்திலும் இல்லை. அப்படியிருக்கையில், கணவன் சந்தோஷை ஒன்றும் செய்யாமல் ஜெயந்தியை மட்டும் வெட்டியது ஏன் என்பது குறித்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக, கணவன் சந்தோஷை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.

சந்தோஷ் கொடுத்த வாக்குமூலத்தில், `` எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இது, நாளடைவில் என் மனைவி ஜெயந்திக்குத் தெரியவந்தது. தவறான உறவை விடுமாறு அவர் கண்டித்தார். மனைவியைவிடவும் எனக்கு அந்தப் பெண்ணைத்தான் பிடித்திருந்தது. இதற்கு இடையூறாக உள்ள மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். அதற்காக கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேரிடம் 1 லட்ச ரூபாய் கூலி பேசினேன். அட்வான்ஸாக ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். பணம் பெற்றுக்கொண்ட கூலிப்படையினர் நான் திட்டம் போட்டுக் கொடுத்தபடி சம்பவ இடத்தில் தயாராக காத்திருந்தனர். அந்த இடத்தை நெருங்கியபோது பைக் ஹாரனை அடித்தேன்.

சந்தோஷ்
சந்தோஷ்

இதில், அலர்ட்டான கூலிப்படையினர் பைக்கை மறித்து என் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி ஜெயந்தி மயக்கமடைந்தாள். அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். ஆனாலும், என் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அனுமதித்தேன். அவளுடைய நல்லநேரம், பிழைத்துக்கொண்டாள். நான் மாட்டிக்கொண்டேன்’’ என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இதையடுத்து, கணவன் சந்தோஷை கைதுசெய்த போலீஸார் கூலிப்படையைச் சேர்ந்த அம்மாபாளையம் புதிய காலனியைச் சேர்ந்த விஜயகுமார், கண்ணமங்கலம் காலனிப் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ஆகியோரையும் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம், கண்ணமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு