Published:Updated:

`ஸ்பான்ஞ்சுக்குள் ஸ்பை கேமரா; மனைவியின் புது நட்பு!' - தூத்துக்குடிக்கு அதிர்ச்சி கொடுத்த படுகொலை

பசுவந்தனை
பசுவந்தனை

கிராமத்தில யாருக்கு எந்த உதவின்னாலும் உடனே செய்யறதால ராமமூர்த்திக்கு ஊருக்குள்ள நல்ல பேரு உண்டு. அதனால, அவரோட தவறான உறவைப் பத்திச் சொல்லியும் ஊர்க்காரங்க யாரும் நம்பலை. பலமுறை கண்டிச்சும் ரெண்டு பேருமே கேட்கலை.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகிலுள்ள புங்கவர்நத்தத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 58). இவர், மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே வாசுகி என்பவருடன் திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளனர். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வாசுகி பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில், மாரியம்மாள் (வயது 45) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில், கடைசி மகனைத் தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகிவிட்டது.

கொலை செய்யப்பட்ட மாரியம்மாள், ராமமூர்த்தி
கொலை செய்யப்பட்ட மாரியம்மாள், ராமமூர்த்தி

சண்முகம் மேளம் வாசிக்கும் தொழில் மட்டுமன்றி, சென்னையில் கட்டட வேலைகளுக்கும் சென்று வருவது வழக்கம். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 30) என்பவர், ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் திறந்துவிடும் பணியையும் மற்ற நேரங்களில் தாரை தப்பட்டை வாசிக்கும் தொழிலையும் செய்துவந்துள்ளார். இவருக்குத் திருமணமாகவில்லை. சண்முகத்தின் வீட்டின் எதிர்ப் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்த ராமமூர்த்தி, வீடுகட்டும் பணியைப் பார்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்வாராம்.

இந்த நிலையில், மாரியம்மாளுக்கும் ராமமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு இருவரையும் சண்முகம் கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அதிகாலை சுமார் 2 மணியளவில் வீட்டின் உள் அறையில் உறங்கிக்கொண்டிருந்த சண்முகம், ஏதோ சத்தம் கேட்டு எழுந்துள்ளார்.

சண்முகம்
சண்முகம்

முன் அறையில் மாரியம்மாளும் ராமமூர்த்தியும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தவர், ஆத்திரத்தில் அரிவாளால் இருவரையும் வெட்டினார். இதில், இருவரும் உயிரிழந்தனர். பின்னர், அரிவாளுடன் பசுவந்தனைக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை

போலீஸ் விசாரணையில் பேசிய சண்முகம், ``என் மனைவி மாரியம்மாளுக்கும் ராமமூர்த்திக்கும் இடையே தவறான உறவு இருந்துவந்தது. கிராமத்தில யாருக்கு எந்த உதவின்னாலும் உடனே செய்யறதால ராமமூர்த்திக்கு ஊருக்குள்ள நல்ல பேரு உண்டு. அதனால, அவனோட தவறான உறவைப் பத்திச் சொல்லியும் ஊர்க்காரங்க யாரும் நம்பலை. பலமுறை கண்டிச்சும் ரெண்டு பேருமே கேட்கலை.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

என் வயசு என்ன... அந்தப் பையன் வயசு என்ன... தேவையில்லாம என் புருஷன் சந்தேகப்படறார்னு ஊர்க்காரர்களிடம் மாரியம்மாள் சொல்லிவிட்டார். இதையடுத்து, ஊர்க்காரங்களும் சமாதானம் செய்துவைத்தனர். ஆனா, எனக்குச் சந்தேகம் தொடந்து இருந்துச்சு. ராமமூர்த்திக்கு நல்ல பெயர் இருப்பதால் யாரும் நம்ப மறுப்பதால், ஆதாரத்துடன் நிரூபிக்க முடிவு செஞ்சேன். செல்போன் கேமரா மூலமா ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிக்க முடிவு செஞ்சேன்.

சென்னையில இருந்து போன வாரம் 3 விலையர்ந்த செல்போன்களை வாங்கிட்டு வந்தேன். வீட்டின் வெளிப்பகுதி, உள்பகுதி, ஜன்னல் ஓரம்னு சாக்குப்பையை மடித்து, அதற்குள் தெர்மாகோல், ஸ்பான்ஞ்ச் வச்சு, கேமரா தெரியற அளவுக்குத் துளைபோட்டு, யாருக்கும் தெரியாமல் மறைச்சு வச்சேன். அதில் நான் இல்லாத நேரத்தில், ராமமூர்த்தி வீட்டுக்குள் வருவதும் ரெண்டு பேரும் தனிமையில் இருப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ஊர்க்காரர்களிடம் காண்பிச்சு, ராமமூர்த்தியோட மறுபக்கத்தைக் காட்டணும்னு முடிவு பண்ணேன்.

செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தஸ்பான்ஞ்சு
செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தஸ்பான்ஞ்சு

இதற்கிடையில், அதிகாலையில் வீட்டுக்குள் ரெண்டு பேரும் தனிமையில் இருப்பதைப் பார்த்தவுடன் ஆத்திரத்தில் வெட்டிக் கொன்றுவிட்டேன்” எனக் கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், சண்முகம் மறைத்து வைத்திருந்த 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு