Published:Updated:

`300 டிக் டாக் வீடியோக்கள்; ஆண் நண்பர்களுடன் நட்பு!' -கடலூரில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்

ராஜேஸ்வரியுடன் குமரவேல்
ராஜேஸ்வரியுடன் குமரவேல்

டிக் டாக் வீடியோக்கள் மூலம் ஏற்பட்ட தவறான நட்பின் காரணமாக மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன் குமரவேல் (26). இவரும் நெய்வேலி திடீர் குப்பத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (25) என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் பண்ருட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர், மூடியிருந்த குமரவேல் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் ராஜேஸ்வரி இறந்துகிடந்தார். உடனே அவரது சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறையினர், அவருக்கு அருகிலிருந்த ஆட்டுக்கல், சோபாவின் அடியில் ரத்தக்கரையுடன்கூடிய இரும்புக் கம்பி உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்தனர்.

1,35,000 வீடியோக்களை நீக்கியது டிக் டாக்! - காரணம் என்ன?

தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், ராஜேஸ்வரியின் கணவர் குமரவேல் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குமரவேலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை பண்ருட்டி பகுதியில் பேருந்து ஏறுவதற்கு நின்றிருந்த குமரவேல் கைது செய்யப்பட்டார்.

போலீஸாரின் விசாரணையில் பேசிய குமரவேல், ``நாங்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். நான் கார் டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவேன். வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவள் கேட்ட சில பொருள்களை என்னால் வாங்கித் தர முடியவில்லை. அதனால் சில இளைஞர்களுடன் என் மனைவி தவறான நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அதை நான் பலமுறை கண்டித்தும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

டிக் டாக் செயலி
டிக் டாக் செயலி

சம்பவம் நடந்த அன்று எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் இரும்பு ராடால் என் மனைவியை சரமாரியாகத் தாக்கினேன். அதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர் இறந்துவிட்டது தெரிந்ததால், நான் என் குழந்தையுடன் தப்பிச் செல்ல முயலும்போது பிடிபட்டுவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்துப் பேசும் போலீஸார், ``டிக் டாக் செயலிக்கு அடிமையாகிவிட்ட ராஜேஸ்வரி, ஆண் நண்பர்கள் சிலருடன் தவறான நட்பை ஏற்படுத்திக் கொண்டார். தனது டிக்டாக் பக்கத்தில் பல ஆண்களுடன் பாடி நடித்ததுடன், அவற்றை டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றியும் இருக்கிறார். அதுகுறித்து குமரவேல் பலமுறை எச்சரித்தும் ராஜேஸ்வரி கேட்கவில்லை என்பதால்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் தனது டிக்டாக் பக்கத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு