Published:Updated:

ராமநாதபுரம் : காதல் திருமணம்... மனக்கசப்பு; விவகாரத்து விசாரணை! - ஆசிரியையை வெட்டிக் கொன்ற கணவர்

ராமநாதபுரம் ; ஆசிரியை வெட்டிக் கொலை.
ராமநாதபுரம் ; ஆசிரியை வெட்டிக் கொலை. ( உ.பாண்டி )

ராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து தொடர்பான விசாரணைக்கு சிவபாலா சென்றிருக்கிறார். விசாரணை முடிந்த நிலையில் அங்கிருந்து அவரைப் பின் தொடர்ந்து வந்த சரவணன், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் சிவபாலாவைச் சரமரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

விவகாரத்து வழக்கில் ஆஜராகிவிட்டு, வீடு திரும்பிய தனியார் பள்ளி ஆசிரியை கணவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை சிவபாலா.
கொலை செய்யப்பட்ட ஆசிரியை சிவபாலா.
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், சக்கந்தியான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். வாகன ஓட்டுநரான இவர், பரமக்குடியில் வசித்துவருகிறார். இவருக்கும், ராமநாதபுரம் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவரும் சிவபாலா (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தை இருக்கிறார்கள்.

இதற்கிடையே மனைவி சிவபாலாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சரவணன், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், சிவபாலா தனது கணவர் சரவணனிடமிருந்து விவகாரத்து கோரியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

ரத்த வெள்ளத்தில் சிவபாலா
ரத்த வெள்ளத்தில் சிவபாலா
உ.பாண்டி

இந்தநிலையில், இன்று காலை ராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து தொடர்பான விசாரணைக்கு சிவபாலா சென்றிருக்கிறார். விசாரணை முடிந்த நிலையில் அங்கிருந்து ஹாக்கி விளையாட்டு அரங்கம் வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த சரவணன், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் சிவபாலாவைச் சரமரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்தநிலையில் வெட்டிப்பட்ட சிவபாலாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அந்தப் பகுதியில் சென்றவர்கள் தப்பி ஓடிய சரவணனை மடக்கிப் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம், கேணிக்கரை காவல் நிலைய போலீஸார் சரவணனைக் கைதுசெய்து, கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளைக் கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்ட சரவணன். (பழைய படம்)
கைதுசெய்யப்பட்ட சரவணன். (பழைய படம்)
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து உயிரிழந்த சிவபாலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை ஆகியோர் பார்வையிட்டனர். காவல்துறை தலைமை அலுவலகங்கள், நீதிமன்றம், விளையாட்டு அரங்கம் ஆகிவை நிறைந்த பரபரப்பான பகுதியில் பட்டப் பகலில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு