Published:Updated:

`என்னுடனே அழைத்துச் செல்கிறேன்!' -மனைவி, குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மென்பொறியாளர்

தற்கொலை
தற்கொலை

``நான் மட்டும் தற்கொலை செய்துகொண்டால், என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எங்களின் பெற்றோர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும். உங்களுக்கு அவர்களை ஒரு சுமையாக மாற்ற எனக்கு விருப்பமில்லை."

ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயதான மென்பொறியாளர், பிரதீப். தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் அவருடைய செல்ஃபோனைத் தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர் திங்கள் கிழமை அன்று ஹஸ்தினாபுரத்தில் உள்ள வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். கதவைத் தட்டியும் எந்தப் பதிலும் கிடைக்காததால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

காவலர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். வீட்டிலுள்ள ஓர் அறையில் பிரதீப் மற்றும் அவரது மூத்த மகனின் உடல்களும் மற்றோர் அறையில் அவரது மனைவி மற்றும் இளைய மகனின் உடல்களும் கிடந்துள்ளன. மேலும், அவரது வீட்டிலிருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தற்கொலை மாதிரி
தற்கொலை மாதிரி
விகடன்

அந்தக் கடிதத்தில், ``வாழ்க்கையில் எதையாவது செய்ய விரும்பினேன். என்னுடைய வேலையை மட்டுமே நம்பி இருக்க விரும்பவில்லை. சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என விரும்பினேன். அப்போதுதான் என்னுடைய வீட்டுக்கடனை அடைக்க முடியும். இதற்காக சில அவசர முடிவுகளை எடுத்துவிட்டேன். கடன் கொடுத்தவர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்து பணத்தைக் கேட்டு அவசரப்படுத்தும்வரை, இந்த விஷயத்தின் தீவிரத்தை நான் உணரவே இல்லை" என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், ``என்னால் வீட்டை விற்க முடியாது. நான் நீண்ட காலமாக தூக்கமில்லாத இரவுகளை எதிர்கொண்டிருக்கிறேன். எனக்கு வாழ்வதற்குப் பயமாக இருக்கிறது. நான் மட்டும் தற்கொலை செய்துகொண்டால், என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எங்களின் பெற்றோர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும். உங்களுக்கு அவர்களை ஒரு சுமையாக மாற்ற எனக்கு விருப்பமில்லை. எனவே, நான் அவர்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இதுதான் எனது கடைசிச் செய்தி. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சரவண பவன் மேலாளர் தற்கொலை… நிர்வாகத்தின் மிரட்டலை எதிர்க்கும் ஊழியர்கள்!

கடந்த சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றிருந்த தன்னுடைய மகளை சீக்கிரமாகப் பள்ளியிலிருந்து பிரதீப் அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சாதாரணமாகக் கேட்டதற்கு, `உறவினரின் கல்யாணத்திற்குச் செல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார். இதற்கு முந்தைய நாள் இரவு பிரதீப் மற்றும் அவரது மனைவி சுவாதி தங்களது பெற்றோர்களிடம் செல்போனில் பேசியுள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை முதல் அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில்தான், தன்னுடைய பிள்ளைகள் மற்றும் மனைவியைக் கொன்று பிரதீப்பும் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை
தற்கொலை

சொந்தமாக பிசினஸ் தொடங்குவதற்கான முயற்சியில் வீட்டுக் கடன்களைத் தவிர பலரிடம் தனிப்பட்ட முறையில் கடனையும் அவர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கொலை மற்றும் தற்கொலை வழக்குகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப்பின் லேப் டாப் மற்றும் செல்ஃபோன் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

`கொலை.. தற்கொலை; கழுத்து  அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்!’- கேரளாவில் நடந்த துயரச் சம்பவம்
அடுத்த கட்டுரைக்கு