Published:Updated:

`சச்சின் உள்ளிட்ட செலிபிரிட்டிகளுக்கு விற்கப்பட்ட ஏரி நிலம்?’ - அதிரவைத்த ரியல் எஸ்டேட் மோசடி

சச்சின்
சச்சின்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தொடங்கி பிரபல சினிமா நட்சத்திரங்கள் வரை ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது.

ஹைதராபாத் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம்`ஸ்ரீ ஆதித்யா ஹோம்ஸ்’. இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோட்டா ரெட்டிக்கும், அவருடன் அந்நிறுவனத்தில் பணியாற்றியவரும், உறவினருமான சுதீர் ரெட்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மிகப்பெரிய முறைகேடு தற்போது அம்பலமாகியுள்ளது. நீர் நிலைகளையொட்டி, இயற்கை சூழலில் வீடுகள் கட்டலாம் என மிகப்பெரிய அளவில் செய்யப்பட்ட விளம்பரங்களால், மிகப்பெரிய நட்சத்திரங்கள் வரை ஸ்ரீ ஆதித்யா ஹோம்ஸ் நிறுவனத்தை அணுகியிருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்
representational image

2008-ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் சுமார் 6 ஏக்கர் நிலத்தை ஆதித்யா நிறுவனம் மூலம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழில் நடிகை நயன்தாராவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இந்த நிறுவனம் அதே பகுதியில் நிலங்களை விற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர்களுக்கு விற்கப்பட்ட இடம், ஏரி நிலம் என்றும் அதில் கட்டுமானங்கள் செய்ய முடியாது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இதை முறைகேடாக இந்த நிறுவனம் இவர்களுக்கு விற்றிருப்பதாகத் தகவலை வெளியிட்டுருப்பவர் ஸ்ரீ ஆதித்யா ஹோம்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோட்டா ரெட்டியின் உறவினரான சுதீர் ரெட்டிதான்.

என்ன பிரச்னை?

கோட்டா ரெட்டிக்கும் சுதீர் ரெட்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு ஒரு போலியான துப்பாக்கி வழக்கும் காரணமாக சொல்லப்படுகிறது. இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுதீர் ரெட்டி மீது கோட்டா ரெட்டி தனது துப்பாக்கியை திருடிவிட்டதாக ஒரு புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் சுதீர் ரெட்டி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில் அந்தக் குற்றசாட்டு போலியானது என சுதீர் ரெட்டி தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் கோட்டா ரெட்டிதான் சுதீர் ரெட்டியிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து, வீட்டில் வைக்கச் சொன்னதாக தகவல் வெளியானது.

கோட்டா ரெட்டி
கோட்டா ரெட்டி

இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரிக்க, கோட்டா ரெட்டி, மீண்டும் வழக்கு தொடுத்தார். சுதீர் ரெட்டி சில முக்கிய ஆவணங்களைத் திருடிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தன் மீது போலியான வழக்குகளை தொடுப்பதாகக் கோட்டா ரெட்டி மீது, சுதீர் ரெட்டி புகார் அளித்துள்ளார். இருவருக்கிடையே ஆன இந்தக் கருத்து வேறுபாடே தற்போது சுதீர் ரெட்டி பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

கட்டுமானத்துக்கு தகுதி இல்லாத ஏரி நிலங்களை பல பிரபலங்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக சுதீர் ரெட்டி தெரிவித்திருக்கிறார். ஹைதராபாத் நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த இடத்தின் மீதுதான் தற்போது அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் இந்தப் பகுதி இருக்கிறது. கிட்டதட்ட 4 கிராமங்களில் இருக்கும் 3,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் ருபாய் கொடுத்து வாங்கப்பட்ட இடம், பல நட்சத்திரங்களுக்கு ஏக்கருக்கு சுமார் 1 கோடி ருபாய் அளவுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அன்று இது தொடர்பாகப் பேசிய சுதீர், ``பல நட்சத்திரங்கள் நிலங்களை வாங்கி இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் அவர்களின் பெயரிலே நிலத்தைப் பதிந்தார்கள் எனத் தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

சச்சின்
சச்சின்

The Daily Guardian ஊடகத்திடம் பேசிய சுதீர் ரெட்டி, ``இந்த நிறுவனம், ஏரி நிலம் என்பதை மறைத்து, சச்சினுக்கு 6 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளது. தலா ஒரு ஏக்கர் நிலத்தை நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா ஆகியோருக்கு விற்றுள்ளனர். அவர்களுக்கு அதில் கட்டுமானம் செய்ய அனுமதி கிடைக்காது என முன்னரே தெரிவிக்கப்படவில்லை. அதில் கட்டுமானங்கள் எதுவுமே செய்ய முடியாது. அரசாங்க தரவுகளின்படி இது முழுக்க முழுக்க ஏரி நிலம். கோட்டா ரெட்டி அவர்களிடம், இந்த நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ளலாம் என்று சொல்லியே விற்றார்” என்றார். மேலும், கோட்டா ரெட்டி வம்ஸி ராம் பில்டர்ஸ் என்னும் நிறுவனத்தையும் ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில புகார்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்,

எனினும் கோட்டா ரெட்டி இந்தப் புகார்களை மறுத்திருக்கிறார். ``நான் தனிப்பட்ட முறையில் எந்த நட்சத்திரங்களுக்கும் நிலங்களை விற்கவில்லை. நான் கூட எனக்கே அந்தப் பகுதியில் இடம் வாங்கி இருக்கிறேன். அனைவரும் விவசாயிகளுடம் இருந்துதான் நிலத்தை வாங்கினோம். இந்த விற்பனை நடந்ததெல்லாம் 2008-ம் ஆண்டில், அதாவது 12 வருடங்களுக்கு முன்னர். இதில் முறைகேடு நடந்திருந்தால் அவர்கள் புகார் அளிக்காமல் இருந்திருப்பார்களா?” என்றார். இதுதொடர்பாக எந்தவொரு புகாரும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்பதை அந்தப் பகுதி காவல்துறையும் உறுதி செய்திருக்கிறது

மோசடி
மோசடி
Representational Image

எனினும், இந்தப் புகார்களின் அடிப்படையில் காவல்துறை கோட்டா ரெட்டி மற்றும் அவர் மகன் ஆத்தியா ரெட்டி ஆகியோரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு