Published:Updated:

`மிட்டாய் வாங்கித் தருகிறேன்!’-காட்பாடி சிறுமி பாலியல் வழக்கில் முதியவரை தண்டித்த நீதிமன்றம்

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பாலியல் தொல்லைகொடுத்த மோகன்தாஸ்
பாலியல் தொல்லைகொடுத்த மோகன்தாஸ்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காடு கம்மவார் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (64). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். கடந்த 30.07.2017 அன்று, அவரின் வீட்டருகே நான்கு வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.

காட்பாடி காவல் நிலையம்
காட்பாடி காவல் நிலையம்

அந்தச் சிறுமியிடம், கடைக்கு அழைத்துச்சென்று சாக்லேட் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, மோகன்தாஸ் தூக்கிச் சென்றுள்ளார். கடைக்குச் செல்லாமல் தன் வீட்டுக்குள் சென்று, பேத்தி வயது என்றும் பார்க்காமல் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்துள்ளார்.

பின்னர், `இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது; கொன்னுடுவேன்’ என்று பயமுறுத்தி, அந்தச் சிறுமியை அவள் வீட்டுக்கே கொண்டுபோய் விட்டுள்ளார். சிறுமியும், பயத்தில் பெற்றோரிடம் எதையும் சொல்லவில்லை. அன்றிரவு, திடீரென சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மோகன்தாஸ்
மோகன்தாஸ்

பெற்றோர், மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே சிறுமிக்கு நடந்த கொடுமை தெரியவந்தது. அதையடுத்து, முதியவர் மோகன்தாஸ் மீது காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 

போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மோகன்தாஸைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை, வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணையில், மோகன்தாஸ் மீதான பாலியல் புகார் நிரூபணமானது. முடிவில், நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார்.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

முதியவர் மோகன்தாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, முதியவர் மோகன்தாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.