Published:Updated:

பாகிஸ்தான்: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ஒரு நாட்டின் தேசிய நினைவுச்சின்னத்தில் வைத்து 400-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரு இளம்பெண்ணுக்குப் பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் இந்த மாதம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல், `பாகிஸ்தான்' தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14-ம் தேதியன்று கொண்டாடிவருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் கடந்த 14-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் தேசிய நினைவுச்சின்னமான மினார்-இ-பாகிஸ்தான் வளாகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து ஓர் இளம்பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, அடித்துத் துன்புறுத்தி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாட்டின் தேசிய நினைவுச்சின்னத்தின் அருகில் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து ஓர் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மினார்-இ-பாகிஸ்தான் நினைவுச்சின்னத்தில் வைத்து 400-க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல்ரீதியாகக் கொடுமை செய்யப்பட்ட அந்த இளம்பெண், லாகூர் பகுதியைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலம் என்பது தெரியவந்திருக்கிறது. டிக்-டாக் வீடியோக்களால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தனக்கு உருவாக்கிவைத்திருக்கும் அந்தப் பெண், பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று மினார்-இ-பாகிஸ்தான் நினைவுச்சின்னத்துக்கு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார்.

அங்கு, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டிக்-டாக் வீடியோ ஒன்று பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த இளம்பெண்ணைச் சுற்றிவளைத்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் அவரைக் கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அதனால், அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டிருக்கிறார். அதையடுத்து, அங்கு இன்னும் கூடுதலாகக் கூடிய நபர்கள் இளம்பெண்ணிடமும், அவருடன் வந்திருந்த நண்பர்களிடமும் இருந்த தங்க நகைகள், பணம், செல்போன்களைக் களவாடிவிட்டு, அவர்களின் ஆடைகளைக் கிழித்து அட்டகாசம் செய்திருக்கின்றனர்.

தாலிபன்களை ஆதரிக்கும் சீனா, பாகிஸ்தான்; இந்தியாவுக்கு நெருக்கடியா?!

தொடர்ந்து, அங்கு குழுமியிருந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் டிக்-டாக் பிரபலமான அந்தப் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு அவரைப் பல முறை அந்தரத்தில் தூக்கிப் போட்டு ஆர்ப்பரிப்பில் கூச்சலிட்டனர். எதிர்பாராதவிதமாக அந்தக் கூட்டத்தில் சிக்கிய அந்த இளம்பெண் கதறி அழுதபடி உதவிக்கு அழைத்தும் அங்கிருந்த யாரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. டிக்-டாக் பிரபலத்துக்கும், அவருடைய நண்பர்களுக்கும் நேர்ந்த கொடுமைகளைக் கூட்டத்திலிருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. அதிர்ச்சியுடன் இணையவாசிகள் அந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து, தேசிய அளவில் டிரெண்டாக்கினார்கள்.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சுதந்திர தினத்தன்று அந்நாட்டின் நினைவுச்சின்னத்தில்வைத்து இளம்பெண்ணுக்கும், அவரின் நண்பர்களுக்கும் நடந்த உச்சகட்ட கொடுமைகள் பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொதித்துப்போன மக்கள் சம்பவம் குறித்து அரசுத் தரப்பில் உடனடியாக விளக்கமளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு அரசை வலியுறுத்தினர். மினார்-இ-பாகிஸ்தானில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் குறித்து லாகூர் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தரைத் தொடர்புகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரின் நண்பர்களும் மினார்-இ பகுதி காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தற்போது 300-க்கும் மேற்பட்டோரை அதிரடியாகக் கைதுசெய்திருக்கின்றனர்.

`சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில்கூட ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் இருக்கிறதா?’ என்று பெண்ணிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு