`ஒரு நாள் பொறுங்கள்... உயிர்த்தெழுந்து வருவார்கள்!’ - மூடநம்பிக்கையால் மகள்களைக் கொன்ற பெற்றோர்

`சில சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படியும் கேட்டனர். இரண்டு பெண்களின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெற்றோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்’ என்றனர் போலீஸார்.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மதனப்பள்ளி சவநாகரில், புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியர் வசித்துவருகிறார்கள். இவர்கள் இருவருமே நன்கு படித்தவர்கள். புருஷோத்தம் பேராசிரியராகவும், பத்மஜா ஒரு கல்வி நிறுவனத்தின் தாளாளராகவும் பணியாற்றிவருகிறார்கள். இவர்களுக்கு அலேக்யா (27) , சாய் திவ்யா (22) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். முதல் மகள் அலேக்யா இந்திய வன மேலாண்மை நிறுவனத்திலும், பட்டதாரியான இரண்டாவது மகள் சாய் திவ்யா ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியிலும் படித்துவருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மகள்களும் வீட்டுலேயே இருந்துவந்திருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடுகொண்டவர்கள். இவர்கள் கடந்த சில மாதங்களாக தங்கள் வீட்டில் அற்புதங்கள் நிகழவிருப்பதாக சில பூஜைகள் செய்துவந்திருக்கிறார்கள். இந்தநிலையில், நேற்று இரவு தங்கள் இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். அப்போது அலறல் சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி, ``இருவருமே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சில விசேஷ பூஜைகளால் ஏதோ அற்புதங்கள் நடந்துவிடும் என்ற எண்ணத்தில், தங்களின் இரண்டு மகள்களையும் அடித்து கொலை செய்திருக்கிறார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ``அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள். மேலும், எங்களை திங்கள் கிழமை (இன்று) வந்து பாருங்கள்... எங்கள் மகள்கள் உயிரோடு இருப்பார்கள் என்று கூறினர். அதற்காகச் சில சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படியும் கேட்டனர். இரண்டு பெண்களின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், பெற்றோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்' என்று கூறினார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.