Published:Updated:

ஆரணி: பள்ளி மாணவிக்கு 4 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை! - முன்னாள் ஆசிரியர்மீது வழக்கு பதிவு!

புகாருக்குள்ளான ராஜா
புகாருக்குள்ளான ராஜா

ஆரணியில், பள்ளி மாணவிக்குத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை கொடுத்துவந்த புகாரில், முன்னாள் ஆசிரியர் ஒருவர்மீது போக்சோ சட்டப் பிரிவின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 32). திருமணம் ஆன இவர், 2016-ம் ஆண்டில் ஆரணியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தச்சமயம், அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறிப் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார் ராஜா. இந்தப் பழக்கத்தால், மாணவிக்குப் பாலியல்ரீதியாகவும் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆரணி மகளிர் காவல் நிலையம்
ஆரணி மகளிர் காவல் நிலையம்

இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ராஜா, ஆசிரியப் பணியிலிருந்து விலகி, அரசுப் பணியில் சேர்ந்தார். தற்சமயம் அவர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்துவருகிறார். பள்ளியிலிருந்து சென்ற பின்னரும், அந்த மாணவியுடனான தொடர்பை நீட்டித்திருக்கிறார் ராஜா. ஆரணியிலுள்ள வீட்டுக்கு அடிக்கடி வரும் ராஜா, மாணவியை அவரின் பெற்றோருக்குத் தெரியாமலேயே சந்தித்துப் பேசியிருக்கிறாராம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, ராஜாவின் இந்தத் தவறான செயல் நீடித்திருக்கிறது. அந்த மாணவி, இந்தக் கல்வியாண்டில்தான் ப்ளஸ் டூ முடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் ராஜாவிடம் தன் மகள் சிக்கியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார், மாணவியின் தாய். இதையடுத்து, ராஜாமீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மகளுக்குப் பாதுகாப்புக் கோரியும் தாய் திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

புகாருக்குள்ளான ராஜா
புகாருக்குள்ளான ராஜா

இந்தப் புகார் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு எஸ்.பி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, முன்னாள் ஆசிரியரும், இன்னாள் அரசு ஊழியருமான ராஜா மீது ‘போக்சோ’ சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்கிடையே, ராஜா தலைமறைவாகியிருப்பதால், அவரைத் தேடி தனிப்படை போலீஸார் ஆரணியிலிருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு விரைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு