Published:Updated:

`மாணவரைத் தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது!’ - 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொடூரமாக தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்
கொடூரமாக தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்

சிதம்பரம் அரசுப் பள்ளி மாணவரை வகுப்பறையில் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறது காவல்துறை.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டு வருகிறது நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் நேற்று முட்டி போட வைத்திருக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிதம்பரம் நந்தனார் அரசு மேல்நிலைப் பள்ளி
சிதம்பரம் நந்தனார் அரசு மேல்நிலைப் பள்ளி

அந்த வீடியோ காட்சியில் வகுப்பறையில் மாணவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றனர். வகுப்பறையின் நுழைவு வாயிலில் முட்டி போட்டிருக்கும் ஒரு மாணவரின் தலை முடியை பிடித்துக்கொண்டு முதுகில் பிரம்பைக் கொண்டு கொடூரமாகத் தாக்குகிறார் அந்த ஆசிரியர். வலி பொறுக்க முடியாமல் முட்டி போட்டபடியே துள்ளும் அந்த மாணவனை கோபம் அடங்காமல் காலால் எட்டி எட்டி உதைக்கிறார் ஆசிரியர். வகுப்பின் பின் வரிசையில் இருக்கும் மாணவர் ஒருவரால் மொபைல் போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவிலிருக்கும் +2 வகுப்பின் இயற்பியல் பாட ஆசிரியரான சுப்பிரமணியன் தனது மாணவர்களுக்கு அதிகமான வீட்டுப் பாடங்களைக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று வகுப்புக்கு வந்த ஆசிரியர் சுப்பிரமணியன் குறிப்பிட்ட இரண்டு மாணவர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்று தலைமை ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு ‘அந்த மாணவர்கள் தினமும் வருகிறார்களே, இன்று அவர்களை வகுப்பில் பார்த்தேனே!’ என்று கூறியிருக்கிறார் தலைமையாசிரியர்.

கைது!
கைது!

அப்போதுதான் அந்த மாணவர்கள் தனது வகுப்புக்கு மட்டும் வருவதில்லை என்ற உண்மை ஆசிரியர் சுப்பிரமணியனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆடூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த இரண்டு மாணவர்கள் முதல் இரண்டு வகுப்புகளில் மட்டும் இருந்திருக்கின்றனர். அதன்பிறகு மூன்றாவது வகுப்பான இயற்பியல் வகுப்பை மட்டும் ’கட்’ அடித்துவிட்டு பள்ளியின் மாடியில் சென்று அமர்ந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்பிறகு அந்த இரண்டு மாணவர்களையும் மடக்கிப் பிடித்து வகுப்பறையில் முட்டி போட வைத்து அரங்கேற்றப்பட்ட சம்பவம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சிதம்பரம்: `வகுப்பை கட் அடித்த மாணவர்கள்!’ - எட்டி உதைத்து, கொடூரமாகத் தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்

அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் சுப்பிரமணியன் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரைத் தேடி வந்தது போலீஸ். தொடர்ந்து நேற்று இரவு ஆசிரியர் சுப்பிரமணியணை கைது செய்த போலீஸ், நேற்றிரவு 10.30 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு