Published:Updated:

கள்ளக்குறிச்சி: இளம் விவசாயியின் உயிரைப் பறித்த மின்வேலி! - அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சோகம்

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயி காசிநாதன்
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயி காசிநாதன்

காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளம் விவசாயி உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காசிநாதனுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் தனது நிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் காட்டுப் பன்றிகளிடம் இருந்து தனது மரவள்ளி தோட்டத்தை பாதுகாப்பதற்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி மயக்கமடைந்தார். சற்று நேரத்தில் அங்கு சென்ற பாஸ்கர் காசிநாதன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உயிரிழந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணியன்
உயிரிழந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணியன்

அவரை சோதித்துப் பார்த்தபோது காசிநாதன் உயிரிழந்துவிட்டது தெரியவர பயந்துபோனார் பாஸ்கர். உடனே தனது மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததை மறைப்பதற்காக காசிநாதனுக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் அவரது உடலை மறைத்துவைத்தார்.

தற்கொலையைப் போல மாற்றிவிட்டால் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்த பாஸ்கர், காசிநாதனின் உடல் மீது பூச்சுக்கொல்லி மருந்தை தெளித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். தண்ணீர் பாய்ச்சுவதற்குச் சென்ற காசிநாதன் வீடு திரும்பாததால் அவரது மனைவியும், தந்தை சுப்பிரமணியனும் தேடிப் பார்த்து ஓய்ந்துபோனார்கள்.

காவல்துறையில் சரணடைந்த விவசாயி பாஸ்கர்
காவல்துறையில் சரணடைந்த விவசாயி பாஸ்கர்

அதேசமயம் பிரேதப் பரிசோதனையில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தினாலும், சடலத்தை மறைத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் நேற்று அதிகாலை காசிநாதனின் தந்தை சுப்பிரமணியத்திடமும், மணலூர்பேட்டை காவல் நிலையத்திலும் தகவலை தெரிவித்துவிட்டு சரணடைந்தார். பாஸ்கர் அளித்த தகவலின் அடிப்படையில் கரும்புத்தோட்டத்தில் காவல்துறையினர் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனது மகனுக்கு ஏற்பட்டதை நினைத்து மன அழுத்தத்தில் இருந்த காசிநாதனின் தந்தை மயக்கம் போட்டு விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கெனவே அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர் மருத்துவர்கள்.

கரூர்: செல்போன் வெடித்து மாணவர் பலி... அதிர்ச்சியில் தந்தையும் இறந்த சோகம்!

அதையடுத்து உயிரிழந்த காசிநாதனின் உடலை கண்டுபிடித்து மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காசிநாதனின் தாய் ராஜாமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் மணலூர்பேட்டை காவல்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு