Published:Updated:

நீலகிரி: வீடுகளில் வளர்க்கப்படும் கஞ்சாச் செடிகள்! - அதிர்ச்சியில் காவல்துறை

வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள்
வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள்

நீலகிரி மாவட்டத்தில், பூச்செடிகளோடு பூச்செடியாக கஞ்சாச் செடிகளை பலரும் தங்கள் வீடுகளில் வளர்த்துவருவது காவலர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாகக் கூறப்படும் நீலகிரி மாவட்டத்தில், கொரோனா பொது முடக்கத்துக்குப் பின்னர் அது மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மைசூரு, கேரளா, மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று ஏரியாக்களிலிருந்து, லோடு வாகனங்களில் மறைத்து கஞ்சாப் பொட்டலங்கள் நாள்தோறும் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.

வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்
வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்

அப்படி வாகனங்களில் கொண்டுவரப்படும் கஞ்சா பொட்டலங்களை அந்தந்த ஏரியாக்களிலுள்ள கஞ்சா டீலர்களிடம் கைமாற்றி, புழக்கத்தில் விடுகின்றனர். கஞ்சா போதை காரணமாக, பல குடும்பங்களில் வன்முறைகள் தொடர்கின்றன.

இது ஒருபுறமென்றால், வீடுகளில் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சாச் செடிகளை வளர்ப்பது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த சில தினங்களில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்
வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்

குன்னூர் அருகிலுள்ள உபதலை நரிக்குழிப் பள்ளம் பகுதியில், வீடுகளில் கஞ்சா வளர்ப்பதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்தனர். சீனிவாசன் என்பவர் தனது வீட்டின் முன்பு தார் பேரலுக்குள் கஞ்சாச் செடியை வளர்த்துவந்ததைக் கண்டறிந்து, செடியை அப்புறப்படுத்தி, அந்த நபரைக் கைதுசெய்தனர்.

குன்னுார் பகுதிகளிலும் இதேபோல கஞ்சாச் செடிகளை வளர்ப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், தனிப்படையினர் குன்னுார் சித்தி விநாயகர் கோயில் தெருவில் சோதனை நடத்தினர். வீடுகளில் தொட்டிவைத்து, கஞ்சாச் செடிகள் வளர்த்துவந்த சிவா, அன்புமணி ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரையும், கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டில் கஞ்சா வளர்த்ததாகக் கைதானவர்கள்.
வீட்டில் கஞ்சா வளர்த்ததாகக் கைதானவர்கள்.

இது குறித்து காவல்துறை தரப்பில், ``கஞ்சா பயன்படுத்தும் பழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கைள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வெளி ஊர்களிலிருந்து நீலகிரிக்குள் வராமல் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொண்டுவருகிறோம். வீடுகளில் சிலர் கஞ்சாச் செடிகளை வளர்ப்பதாகப் புகார்கள் வருகின்றன. நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், சிலர் பூச்செடிகளோடு பூச்செடியாக கஞ்சாச் செடிகளை பலரும் வீடுகளில் வளர்த்துவருவது காவல்துறைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு