Published:Updated:

மயிலாடுதுறை: பெருமாள் கோயில் அறங்காவலர் நீரில் மூழ்கடித்துக் கொலை! -இராமனுஜர் பீட பட்டர் கைது

கோயில் நடை திறப்பதற்கு முன்பே முகுந்தன் உள்ளிட்ட 3 பேர் பஜனை பாடியிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த திருவேங்கடம், "கோயில் நடை திறப்பதற்குமுன் நீங்கள் பாடக்கூடாது "என்று சத்தம் போட்டிருக்கிறார். இதனால் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருக்கோயில் திருத்தலம், மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலை கடந்த 20 ஆண்டுகளாக பரம்பரை டிரஸ்டியான திருவேங்கடம் (வயது 78) நிர்வகித்து வருகிறார்.

பெருமாள்கோயில்
பெருமாள்கோயில்

இவர் கடந்த 7 -ம் தேதி கோயிலுக்கு வந்தபோது கோயிலில் நடை திறப்பதற்கு முன், கோயில் அருகே கோசாலை அமைத்து தங்கியுள்ள வெளியூரை சேர்ந்த முகுந்தன் உள்ளிட்ட 3 பேர் பஜனை பாடியுள்ளனர். கோயில் நடைதிறக்காமல் பஜனை பாடக்கூடாது என்று அறங்காவலர் திருவேங்கடம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் திருவேங்கடத்தை காணவில்லை. அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் மறுநாள் காலை கோயில் குளத்தில் திருவேங்கடம் மர்மமான முறையில் பிணமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் செம்பனார்கோவில் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

மேலும் அறங்காவலரிடம் தகராறில் ஈடுபட்ட, கோயில் அருகே வசிக்கும் திருவள்ளுவர் மாவட்டம் ஆரணியை சேர்ந்த முகுந்தன் (24), திருவண்ணாமலை மாவட்டம் சேனியநல்லூர் அனந்தராமன், ஆற்காடு இசையனூரைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட 3 பேரை சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் பிடித்து வைத்தனர். இச்சம்பவம் அறிந்து வந்த செம்பனார்கோயில் போலீஸார் திருவேங்கடத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, முகுந்தன் உள்ளிட்ட 3 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை  மேற்கொண்டபோது, பஜனைப் பாடல் தொடர்பான வாக்குவாதத்தால் முகுந்தனே திருவேங்கடத்தை நீரில் மூழ்கடித்துக் கொன்ற அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.

முகுந்தன்
முகுந்தன்

இதுபற்றி செம்பனார்கோயில் காவல்நிலைய ஆய்வாளர் செல்வியிடம் பேசினோம். "இராமானுஜர் பீடம் சார்பில் 108 திவ்யதேச கோயில்களிலும் கோசாலை அமைத்து பஜனைகள் பாடி, அந்த நிர்வாகம் தொடர்பான வரவு செலவு கணக்குகளை கேட்டும் ஒரு அமைப்பு இயங்குகிறது. அதன் சார்பில் இராமனுஜர் பீட பட்டர்களான முகுந்தன் உள்பட 3 பேர் இக்கோயில்  கோசாலை அமைத்து தினமும் பூஜைகள் செய்து வருகின்றனர். திருவேங்கடத்தின் தாத்தா, அப்பா, அதன் பிறகு திருவேங்கடம் நிர்வகித்து வந்திருக்கிறார். இதன் வரவு செலவு கணக்குகளைக்  கேட்டு கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இதனால் தினமும்  சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து போயிருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த 7 -ம் தேதி கோயில் நடை திறப்பதற்கு முன்பே முகுந்தன் உள்ளிட்ட 3 பேர் பஜனை பாடியிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த திருவேங்கடம், "கோயில் நடை திறப்பதற்குமுன் நீங்கள் பாடக்கூடாது "என்று சத்தம் போட்டிருக்கிறார். இதனால் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: மோகன் நாயக் விடுதலையை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம்; இனி..?

இந்நிலையில்  மற்ற இருவரும் மடத்திற்குச்  சென்றுவிட முகுந்தன் மட்டும் திருவேங்கடத்திடம்  பேசி தள்ளுமுள்ளு ஆகியிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த முகுந்தன் திருவேங்கடத்தை இழுத்துச்சென்று நீரில் அமுக்க, அங்கு மூச்சுத்திணறி  இறந்திருக்கிறார். அதில் பதற்றமடைந்த முகுந்தன் அன்றிரவே ஊருக்குச்  செல்ல வேண்டும்" என்று கூறியிருக்கிறார். திருவேங்கடத்தை காணாமல் ஊர்க்காரர்கள் அலைந்து திரிந்தபோது, அவர் பிணமாக கோயில் குளத்தில் மிதந்தது தெரியவரவே, இந்த மூவரையும் சந்தேகப்பட்டு  எங்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் முகுந்தன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரைக்  கொலை வழக்கில் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு