Published:Updated:

மன்னார்குடி: நண்பர்களால் கொலை செய்யப்பட்ட மாணவர்; விபரீதத்துக்கு மொபைல் கேம் காரணமா?

பப்ஜி கேம்
பப்ஜி கேம்

பலரது வாழ்க்கை சீரழிவதால், இந்தியாவில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பாலிடெக்னிக் மாணவரை, அவரின் நண்பர்களே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சம்பவத்துக்குக் காரணமான நான்கு பேர் தப்பியோடிய நிலையில், அவர்களை மன்னார்குடி காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள். இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில், தற்போதும்கூட பப்ஜி விளையாடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 நாமக்கல்: பப்ஜி கேம் விளையாடிய மாணவர்! - பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த பரிதாபம்
செல்போன் கேம்
செல்போன் கேம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகிலுள்ள நாச்சிகுளத்தைச் சேர்ந்தவர் இஷ்ரத். 22 வயதான இஸ்ரத், மன்னார்குடியிலுள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி, அந்தப் பகுதியிலுள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இவரும், நாச்சிகுளம் பகுதியில் வசித்துவரும் வாகித்தும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதில் தீவிரமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இவர்கள் இருவருக்குமிடையே சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் இஸ்ரத்தின் நண்பர்களான வாஹித், தீன் ஹனிஸ், மர்ரூஜ், அக்பர் பாஷா ஆகியோர் மன்னார்குடிக்கு வந்திருக்கிறார்கள். இஸ்ரத்திடம் சமாதானம் பேசுவதாகக் கூறி, மன்னார்குடி சிவம் நகர் பகுதிக்கு அருகிலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு இஸ்ரத்தை கத்தி, உடைந்த பீர் பாட்டிலால் குத்திவிட்டு, வாஹித் உள்ளிட்ட நான்கு பேரும் தப்பியோடியதாகக் கூறுகின்றனர். சம்பவ இடத்திலேயே இஸ்ரத் உயிரிழந்தார்.

மன்னார்குடி
மன்னார்குடி

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி காவல்துறையினர், இஷ்ரத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் திருவாரூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் வந்து நேரடியாக விசாரணை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்ரத்தின் நண்பர்களான வாகித், அப்துல் பாசித், தீன், மப்ரூக் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்து மன்னார்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். செல்போன்களில் விளையாடப்படும் பப்ஜி விளையாட்டால் பலரது வாழ்க்கை சீரழிவதால், இந்தியாவில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இஸ்ரத்தும் அவரின் நண்பர்களும் எப்படி பப்ஜி விளையாடியிருக்க முடியும்... இது சாத்தியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து திருவாரூர் காவல்துறையினரிடம் நாம் பேசியபோது, ``இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டிருப்பதால், இதற்கான செயலியை செல்போனில் இங்கு யாராலும் டௌன்லோடுகூட செய்ய முடியாது. அதற்குச் சாத்தியமே இல்லை. மன்னார்குடியில் கொலை செய்யப்பட்ட இஸ்ரத்தும் அவர் நண்பர்களும் செல்போனில் விளையாடியது ஃப்ரி ஃபயர் என்ற கேம். இதுபோல் இன்னும் பல செல்போன் கேம்கள் உள்ளன. ஆனால் இவற்றையும் பப்ஜி என்று பலர் தவறாகப் புரிந்துக்கொள்கிறார்கள். இது ஒருபுறமிருந்தாலும், பப்ஜிபோலவே இவற்றாலும் ஏராளமானவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. இவையும் தடை செய்யப்பட வேண்டியவைதான்" என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு