Published:Updated:

"டீ கேனில் சாராயம்... இளைஞர்களின் விபரீத முயற்சிகள்!"- போதைக்காக திருச்சியில் தொடரும் சோக சம்பவங்கள்

மருத்துவமனையில் இளைஞர்கள்
மருத்துவமனையில் இளைஞர்கள்

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அத்தியாவசிய பொருள்களின் விற்பனை தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதில் மதுக்கடைகளும் அடக்கம். இதனால் மதுபானம் கிடைக்காத விரக்தியில் மன உளைச்சலுக்குள் இளைஞர்கள் சிலர் திசைமாறி, ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் விபரீதம் தொடர்வதுதான் கொடுமை.

டாஸ்மாக் கடைகளுக்குப் பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தில், ஊரடங்கால் மன உளைச்சலுக்குள்ளான குடிமகன்கள் சிலர், திருச்சி உறையூர் மற்றும் வரகனேரி உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் கடைகளிலும், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கைவரிசைக் காட்டும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. அதையடுத்து, தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் மேலும் செய்வதறியாமல் தவிக்கும் மது பழக்கத்துக்கு அடிமையான சிலர், மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளதுதான் பெரும் அதிர்ச்சி.

மீண்டும் தலையெடுக்கும் கள்ளச்சாராயம்!

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் பிசினஸ் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக, திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பெரம்பலூர் - சேலம் மாவட்ட எல்லைகளிலும் கள்ளச்சாராயம் பிசினஸ் சூடுபிடித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணிகண்டத்தை அடுத்த ராம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற நபர்கள் மீது திருச்சி மாவட்ட போலீஸார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல இடங்களில் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இந்நிலையில், திருச்சி மாநகரை ஒட்டிய ராம்ஜி நகர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாகவும், பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் தகவல் வெளியானது. அதனால் அப்பகுதியில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், ராம்ஜி நகர் பகுதியில் டீ கேனுடன் பெண் ஒருவர் ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருக்க, அவரைப் பிடித்து விசாரித்த போலீஸார், டீ கேனை பறிமுதல் செய்ததுடன் அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு வரும்படி கூறிவிட்டு கிளம்பிச்சென்றனர்.

காவல் நிலையத்திற்குச் சென்ற போலீஸார், அந்தப்பெண் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்து, டீ கேனை திறந்து பார்த்தபோதுதான், அந்தக் கேனில் கள்ளச்சாராயம் இருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த ராம்ஜி நகர் போலீஸார், அந்தப் பெண்ணைத் தேடிவருகிறார்கள்.

ஸ்பிரிட் குடித்த வாலிபர்கள்!

நிலைமை இப்படியிருக்க, மதுவுக்கு அடிமையான பலர் மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்து, அதுவே சிக்கலாகி உயிரை இழக்கும் அபாயத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அப்படியான விபரீதங்கள், புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்துள்ளன.

மருத்துவமனையில் இளைஞர்கள்
மருத்துவமனையில் இளைஞர்கள்

பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்த சூரி என்பவரின் மகன் கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ், சங்கு பேட்டை சதீஷ் ஆகிய மூவரும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். ஊரடங்கால் தற்போது மது கிடைக்காத நிலையில், இவர்கள் மூவரும் பெரம்பலூர் பெரிய தெற்கு தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரிடம் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டை வாங்கி, பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை அருகே வைத்துக் குடித்துள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் மயங்கி விழ, அப்பகுதியில் ரோந்துப்பணிக்குச் சென்ற ஊர்க்காவல்படை மண்டல தளபதி ராம்குமார் மற்றும் போலீஸார் அவர்களை மீட்டு, மிகவும் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், மது கிடைக்காமல் குடிமகன்கள் சிலர் பல்வேறு வகைகளில் மதுவைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை
கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை

ஆனால் சமூக ஆர்வலர்களோ, மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு இதுவே சரியான நேரம். எனவே, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் உளவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அப்படிச் செயல்பட்டால்தான், மாற்று முயற்சிகளில் ஈடுபடும் குடிமகன்களின் உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என யோசனை தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு