Published:Updated:

17வயது சிறுமி, அப்பா உட்பட 28 பேரால் பாலியல் வன்கொடுமை:சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர்கள் கைது

உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை சொந்த தந்தை உட்பட 28 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இது தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மைனர் பெண்ணை அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதுதொடர்பாக அப்பெண் போலீஸில் புகாரளித்திருக்கிறார். தனது புகாரில் தான் 6-வது வகுப்பு படிக்கும்போது தனது தந்தை தன்னை முதல் முறையாக ஆபாச படங்களைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் இதுபோன்று நடந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு தனது தந்தையைப் பார்க்க தொழில் விஷயமாக பலர் வீட்டிற்கு வருவார்கள் என்றும், அவர்களையும் தனது தந்தை தன்மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தினார். மேலும் தனது தந்தை நகரில் உள்ள பல ஓட்டல்களுக்கு தன்னை அழைத்து சென்றதாகவும், அங்கும் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அப்பெண் போலீஸில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்தார்.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

மேலும் சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் திலிப் யாதவ், அவரது மூன்று சகோதரர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் தீபக் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த நீரஜ் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர் என்றும் தனது புகாரில் அப்பெண் தெரிவித்திருக்கிறார். இச்சம்பவங்களை யாரிடமாவது சொன்னால் அம்மாவைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இக்காரியத்தில் தனது தந்தை ஈடுபட்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து லலித்பூர் ஏஎஸ்பி கிரிஜேஷ் குமார் கூறுகையில், ``மைனர் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் 28 பேர் மீது பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தை சரிபார்த்து வருகிறோம். இவ்வழக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பதால் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். இது குறித்து லலித்பூர் எஸ்.பி. நிகில் கூறுகையில், ``மைனர் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவளது தந்தை, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தீபக், திலிப் யாதவ் உட்பட மொத்தம் 8 பேரை கைது செய்திருக்கிறோம்.

அதோடு சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் ஓட்டல்களுக்குச் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து வருகிறோம். இதில் விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவர்" என்று தெரிவித்தார். மைனர் பெண் தனது தந்தையின் பாலியல் கொடுமை தாங்க முடியாமல் தனது தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவரது தாயாரும், மைனர் பெண்ணும் சேர்ந்து போலீஸில் புகார் செய்தனர். மைனர் பெண்ணின் தந்தை தனது 10 வயது மகனையும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக பெண்ணின் தாயார் தெரிவித்திருக்கிறார்.

தனது அப்பா, அரசியல் பிரமுகர்கள் என 28 பேரால் பாலியல் வன்கொடுமை; 17வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்!

மைனர் பெண் கொடுத்துள்ள புகார் உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்குற்றச்சாட்டு வந்தவுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லலித்பூர் மாவட்ட நிர்வாகத்தை அடியோடு கலைத்து உத்தரவிட்டிருக்கிறார். திலிப் யாதவ் தன் மீதான புகாரை மறுத்திருக்கிறார். அதோடு இது தனக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி என்றும் தெரிவித்திருக்கிறார். சொந்த தந்தையே தனது மகளை முக்கிய பிரமுகர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட அனுமதித்து இருப்பதால் இதற்காக அவர்களிடம் பணம் வாங்கினாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பாலியல் வன்கொடுமை சம்பங்கள் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் தெரிவித்திருக்கிறார். சில ஓட்டல்களில் போலீஸார் ரெய்டு நடத்தி பார்த்த போது பதிவேடுகளில் அரசியல்வாதிகளின் பெயர்கள் இல்லை. அதோடு கண்காணிப்பு கேமரா பதிவிலும் அவர்களின் படங்கள் இடம் பெறவில்லை என்று போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு