வேலூர் மாவட்டத்தில் மதுபானங்களைப் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது, கள்ளத்தனமாக மணல் கடத்துவது போன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். அதன்படி, கள்ளச் சாராயம், மது விற்பனை தொடர்பாக மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 765 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் 691 குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அவர்களில், ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 6,594 லிட்டர் கள்ளச்சாராயமும், அதைக் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 45 கிலோ கிராம் வெல்லம் மற்றும் 36,500 லிட்டர் சாராய ஊறல்களையும் போலீஸார் அழித்துள்ளனர். அதோடு 4,932 மதுபான பாட்டில்களையும் கைப்பற்றி அழித்திருக்கிறார்கள். இந்த வழக்குகள் சம்பந்தமாக பைக், கார் உட்பட 29 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதே போன்று, வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே மணல் கடத்தல் தொடர்பாக 26 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில், 28 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 12 மாட்டுவண்டிகள், 4 டிராக்டர்கள், 2 லாரிகள், 2 ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 24 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ‘‘இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களின் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எஸ்.பி ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.