Published:Updated:

`இந்தியாவில் 500% அதிகரித்த சைபர் க்ரைம்; காரணம் இதுதான்!’ - எச்சரிக்கும் அஜித் தோவல்

அஜித் தோவல்
அஜித் தோவல் ( ANI )

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பணப் பரிவர்த்தனையில் தொடங்கி ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது என அனைத்துத் தரப்பு மக்களும் இணையத்தை உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர்.

நாட்டில் நடக்கும் சைபர் க்ரைம்கள் 500 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற இணையவழி சைபர் மாநாட்டில் பேசிய அவர், ``போதிய விழிப்புணர்வு இல்லாததும், மோசமான சைபர் சுகாதாரமும்தான் அதற்குக் காரணம்’’ என்று குற்றம்சாட்டினார்.

சமீபகாலமாக இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துவருகிறது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பணப் பரிவர்த்தனையில் தொடங்கி ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது என அனைத்துத் தரப்பு மக்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சைபர் க்ரைம் நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

மக்களுக்கான சைபர் பாதுகாப்பை அரசு நிச்சயம் வழங்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்தாலும், தேசியத் தகவல் மையத்திலுள்ள பிரதமர் மோடி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் தகவல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட `சைபர் அட்டாக்’ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற `cocon 2020’ எனப்படும் இரண்டு நாள் இணையவழி சைபர் மாநாட்டில் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ``நாட்டில் சைபர் குற்றங்கள் 500 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது’ என்றார். மேலும், ``நாட்டின் சைபர் ஸ்பேஸைப் பாதுகாக்க அரசாங்கம் கடுமையாக முயன்றுவருகிறது. `தேசிய சைபர் பாதுகாப்பு வியூகம் 2020' மூலம் இணைய பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கவனம் செலுத்திவருகிறது.

தேசியத் தகவல் மையத்தில் சைபர் அட்டாக்! - பிரதமர் மோடி உள்ளிட்டோரின் கணினித் தகவல்கள் திருட்டு?

அரசு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சைபர் குற்றங்களை நிர்வகிக்க முடிந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் மோசமான சைபர் சுகாதாரம் காரணமாக சைபர் க்ரைம்களில் 500 சதவிகிதம் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறோம்.

இம்மாதிரியான சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். தனிப்பட்ட கேட்ஜெட்களைப் (Gadgets) பாதுகாக்க வேண்டும். சைபர் க்ரைம் பற்றிய புகார்களை அளிக்க மக்கள் முன்வர வேண்டும்’’ என்று அஜித் தோவல் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே, சீனாவிலிருக்கும் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சென்ஹூவா இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள், துணைக் குடியரசுத் தலைவர், நடிகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், முன்னாள் முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரை உளவு பார்ப்பதாக அண்மையில் செய்தி வெளியானது.

அஜித் தோவல்
அஜித் தோவல்

இது தொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நிபுணர்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. `இந்தக் குழு 30 நாள்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும்’ என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக சீன வெளியுறவுத்துறைக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்து, அந்த நிறுவனம் சீன நிறுவனம் அல்ல என்றும், தனியார் நிறுவனம் என்றும் கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு