Published:Updated:

`பொறுமைக்கும் எல்லை உண்டு!' - கணவர் மீது வரதட்சணை புகார் அளித்த `சக் தே இந்தியா' இன்ஸ்பிரேஷன் பெண்

சூரஜ் லதாதேவி
சூரஜ் லதாதேவி

``இந்த விஷயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவர நான் விரும்பவில்லை. எனினும், ஒருவரின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் இடம் உண்டு" என சூரஜ் லதாதேவி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான சூரஜ் லதாதேவி, தன்னுடைய கணவர் வரதட்சணை கேட்டு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்துவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் பிரபல ஹாக்கி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான சூரஜின் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Representational Image
Representational Image

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சூரஜ் லதாதேவி, ``சாந்தா சிங் உடன் எனக்குத் திருமணமானபோது, நான் போட்டிகளில் வென்று கொண்டுசென்ற கோப்பைகள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்துக் கேலி செய்தார். `இதனால் என்ன பயன் இருக்கப்போகிறது?' என்றும் கேட்டார். என்னுடைய தவறான நடவடிக்கைகளால்தான் அர்ஜுனா விருதைப் பெற்றேன் என்றார். தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையில், நான் இவ்வளவு காலம் அவரின் துன்புறுத்தல்களைத் தாங்கிக்கொண்டிருந்தேன்" என்று குறிப்பிட்டார்.

`ரூ.11 லட்சம், 75 சவரன்  வரதட்சணை; போதையில் உளறிய மாமா!' - திருமண வரவேற்பில் சிக்கிய போலி டாக்டர்

மேலும், ``இந்த விஷயத்தை பொதுவெளிக்குக் கொண்டுவருவதில் எனக்கு விரும்பவில்லை. எனினும், ஒருவரின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் நடைபெற்ற போட்டி ஒன்றுக்கு நடுவராக நான் சென்றபோது என்னுடைய கணவர் என்னைத் தாக்கினார். அதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி லோகேஸ்வரன் சிங் பேசும்போது, ``சூரஜ் புகார் அளித்த பிறகு அவருடைய கணவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

சக் தே இந்தியா
சக் தே இந்தியா

சூரஜ் லதாதேவி, இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்தபோது மூன்று முறை தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். 2002-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இவரின் தலைமையின் கீழ், இந்திய அணி தங்கம் வென்றது. இந்தப் போட்டிதான் `சக் தே இந்தியா' திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்தது. இதைத் தவிர 2003-ல் ஆஃப்ரோ - ஏசியன் விளையாட்டு மற்றும் 2004-ல் ஆசிய ஹாக்கி கோப்பை ஆகிய போட்டிகளிலும் தங்கம் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு